×

தீவினைகள் களையும் திந்திரிணீஸ்வரர்

திண்டிவனம்

எங்கும் நிறைந்த ஈசன் இந்த மண்ணில் புரிந்த லீலைகள் எண்ணிலடங்காதவை. தானாய்த் தோன்றி தரணியைக் காக்கும் சிவபெருமான் அருள்புரியும் அருள் மிகுந்த தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது, திண்டிவனம். சங்ககாலத் தமிழரின் வீரத்தை பறைசாற்றும் திருமுனைப்பாடி என்னும் நடுநாட்டின் ஒருபகுதி ‘‘ஒய்மாநாடு” என்று அழைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் தென் பகுதியும், விழுப்புரம் மாவட்டத்தின் வடபகுதியும் சேர்ந்த அன்றைய ஒய்மாநாடே இன்று திண்டிவனம் என்றழைக்கப்படுகின்றது. ஆதியில் இவ்விடம் புளிய மரக்காடாக இருந்ததால் திந்திரிணிவனம் [புளியங்காடு] என வழங்கப்பட்டது. மேலும், முப்புர அசுரர்களை வதம் செய்தார் பரமேஸ்வரர். அவர்களில் இருவர் இறைவனை சரணடைந்து நிற்க... சிவபெருமான் அவர்களை தனது சிவ கைலாய வாயில் காவலர்கள் ஆக்கினார். அவர்களே இப்பூவுலகில் அனைத்து சிவாலயங்களையும் பாதுகாக்கும் திண்டி மற்றும் முண்டி என்னும் இரண்டு துவார (வாயில் காப்பாளர்கள்) பாலகர்கள் ஆவர். இவர்களில்திண்டி இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் இவ்விடம் ‘‘திண்டீஸ்வரம்” ஆனது. முண்டி வழிபட்ட தலம் இந்த திண்டிவனத்திற்கு தெற்கே திருவெண்ணெய் நல்லூருக்கு அருகே அமைந்துள்ள முண்டீஸ்வரம் ஆகும்.

ஒய்மா நாட்டின் தலைநகராகக் கிடங்கில் கோட்டை திகழ்ந்துள்ளது. இதில் ஓவியர் குடியில் பிறந்த மன்னர்களான ஒய்மான் நல்லியநாதன், ஒய்மான் வில்லியாதன் இந்த ஒய்மா நாட்டை சிறப்புடன் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். இவர்களின் வழித் தோன்றலான கொடையில் கடையேழு வள்ளல்களையும் மிஞ்சியவனான, புலவர் பலரால் பாராட்டப்பெற்றவன் நல்லியக்கோடன். இவனது ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமாகவே திகழ்ந்துள்ளது. சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூல் இந்த மன்னனைப் போற்றிப் புகழ்கின்றது. சங்ககாலப் புலவர்களான காவிதி சீரங்கண்ணனாரும், பெரும்புலவர் குலபதி நக்கண்ணனாரும் நல்லியக்கோடன் காலத்தில் இங்கு வாழ்ந்தவர்களாவர்.ஒய்மான்கள் ஆண்ட நிலப்பகுதியே ஒய்மாநாடாகும். இதை........

‘‘கிளை மலர் படப்பைக் கிடங்கில் கோமான் தளையவிழ் தெரியல் தகையோன்” என சிறுபாணாற்றுப்படை அறிவிக்கின்றது. இந்த ஊர் திண்டிவனம், கிடங்கல், மும்முடிச் சோழநல்லூர், ராஜேந்திரச் சோழநல்லூர் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ராஜராஜ வளநாட்டின் ஓய்மாநாடு என்றும், இடக்கை நாட்டுக் கிடங்கில் என்றும் வழங்கப்பட்டுள்ளது. விஜயநகர ஆட்சிக் காலத்தில் திருவதிகை ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட பகுதியாக திண்டிவனம் இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின் ஆட்சிக்கு வந்த விக்கிரமசோழன் காலத்தில்தான் (கி.பி.1118 - கி.பி. 1135) திண்டீஸ்வரம், திண்டிவனம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவ்விடத்தினை பல்லவர்கள், சோழர்கள், காடவராயர்கள், சம்புவராயர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்கள் என பலர் ஆண்டுள்ளனர்.

வால்மீகி, வியாசர், கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள் இத்தலப் பெருமானை பூஜித்துள்ளனர். திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் பிறந்தது இந்த நடுநாடு என்பது குறிப்பிடத்தக்கது. திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் ‘‘திண்டீசுரம்” என்று குறிப்பிட்டு வைப்புத்தலமாக இத்தலத்தை இரண்டு பாடல்களில் நினைவுகூர்ந்து பாடியுள்ளார். புகழ்பெற்ற வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் இத்தல இறைவனை புகழ்ந்து பாடியுள்ளார். அப்பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் திருவாமாத்தூர் கௌமார மடத்தில் உள்ளன.நகரின் மையத்தில் ஆலயம், கிழக்கு பார்த்த வண்ணம் பிரம்மாண்டமாக திகழ்கின்றது. 7 கலசங்களும், 6 நிலைகளும் கொண்ட அற்புதமான இராஜகோபுரம் பிரமிப்பூட்டுகின்றது. உள்ளே பலிபீடம், ஓங்கி நிற்கும் கொடிமரம் மற்றும் அளவில் பெரிதாகத் திகழும் சற்றே தென்புறமாக ஒதுங்கியுள்ள நந்தியின் திருவுருவம். எல்லாமே கலைப்படைப்புகள். நேராக மகாமண்டபம் அடைந்திட வலப்புறம் கணபதியும், இடப்புறம் கந்தனும் நம்மை வரவேற்கின்றனர். அவர்களை வணங்கி,  துவாரபாலகரான திண்டியின் அனுமதியும் பெற்று, [இரு துவாரபாலகர்களில் திண்டி மட்டுமே இங்கு உண்டு. முண்டியின் சிற்பம் இங்கு கிடையாது. அதை திருமுண்டீஸ்வரத்தில் காணலாம்.] அந்தராளம் எனப்படும் இடை மண்டபத்தில் நின்று ஐயனை வணங்கிப் பரவசமடைகின்றோம். கருவறையுள் கருணை வடிவாய், சுயம்பு மூர்த்தமாக, சுமார் ஐந்தரை அடி உயரத்தில் அற்புதமாக அருட்காட்சியளிக்கின்றார் ஸ்ரீதிந்திரிணீஸ்வரர். அருள் சுரக்கும் திருமேனி ஆனந்த தரிசனம்.

அப்பனை வணங்கி, உட்பிராகாரத்தில் சுற்றுகையில் சிவகோஷ்ட தெய்வங்களோடு, கரைகண்டேஸ்வரர், ஞானபுரீஸ்வரர், பிரகலாதீஸ்வரர் ஆகிய லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. துர்க்கை இங்கு சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கின்றாள். வெளிப்பிராகார வளம் தொடங்குகையில் இராஜகோபுரத்தையொட்டி உட்புறமாக சந்திர பகவான் காட்சி அளிக்கின்றார். அருகே மடப்பள்ளி அமைந்துள்ளது. தென் பிராகாரத்தில் வன்னிமரமும், அதனடியில் சனிபகவானும் அருட்காட்சியளிக்கின்றனர். நிருதி மூலையில் கணபதி சந்நதியும், மேற்கில் வள்ளி-தெய்வானையுடனான கந்தன் சந்நதியும், பக்கத்தில் திருக்கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. இங்கே வில்வமரமும், அதனடியில் விநாயகப் பெருமான் சிலையும் உள்ளன. சுவாமி சந்நதிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் வடபுறத்தில் தனிச்சந்நதியுள் தான்தோன்றிய லிங்கமாக ஸ்ரீமூலநாதர் வீற்றருளுகின்றார். உடன் கணபதியும், திரிபுரசுந்தரியும் உள்ளனர். இறைவன் சந்நதிக்கு இடப்புறத்தில் வாமபாகம் என்று சொல்லப்படும் வாயு திசையில் அம்பாள் சந்நதி தனியாக அமைந்துள்ளது. கருவறையில் அழகே உருவாய் எழுந்து அருள்பாலிக்கின்றாள், அன்னை ஸ்ரீமரகதாம்பிகை. ஈசனுக்கு நிகராக யோகபீடத்தின் மீது நின்ற வண்ணம் சுமார் 5 அடி உயரத்தில் அற்புதமாக அபயமளிக்கின்றாள். அன்னையின் சந்நதிக்கு நேரே அனுமனும் சந்நதி கொண்டுள்ளார். இங்கே நவகிரகங்களும் காணப்படுகின்றன. ஸ்ரீகாலபைரவரும் உடனிங்கு அருள்புரிகின்றார்.

வடகிழக்கு என்று சொல்லப்படும் ஈசான்ய திசையில் யாகசாலை அமைந்துள்ளது. பக்கத்தில் வினை தீர்க்கும் விநாயகரும் குடிகொண்டுள்ளார். அருகே சிவசூரியனும் இடம் பெற்றுள்ளார். இரண்டு பிராகாரங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் வடக்குப்புறத்தில் நந்தவனமும், தீர்த்தக் கிணறும் காணப்பெறுகின்றன. ஐந்து லிங்கங்களை தரிசிக்கும் பாக்கியம் இங்கே நமக்கு கிடைக்கப்பெறுகின்றன. பக்தர்கள் இத்தலத்தை பஞ்சலிங்க க்ஷேத்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். மிகப் பழமையானதொரு ஆலயம், புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. தல தீர்த்தமாக விளங்குகிறது திருமூலர் தீர்த்தம்.தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய முதலாம் இராஜராஜ சோழனின் 21 கல்வெட்டுகள் இங்கு ஆலய பிரகாரச் சுவர்களில் காணப்பெறுகின்றன. காடவராயர் காலக் கல்வெட்டு ஒன்றும், விஜய நகர அரசர் காலகல்வெட்டு ஒன்றும் கூட இங்கு காணப்படுகின்றது. இக்கோவில் சுந்தர சோழன் என்றழைக்கப்பட்ட இரண்டாம்
பராந்தக சோழனால் கி.பி. 957 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இத்தல ஈசர் திண்டீச்சுரமுடையார்,

திருத்திண்டீஸ்வர மகாதேவர், திண்டிவனமுடையார் என பல பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக இங்கு நடத்தப் படுகின்றன. அதில் எட்டாம் நாள் திருக்கல்யாண உற்சவமும், ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் தீர்த்தவாரியும் நடக்கின்றது. மகா சிவராத்திரியின் நான்காம் கால பூஜையில் சூரியனின் ஒளிக்கதிர்களும், சித்ரா பௌர்ணமியில் சந்திரனின் குளிர்ந்த ஒளிக்கற்றையும் அம்பாள் மீது படர்வது சிறப்பாகும். நவராத்திரியில் அம்பாளுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபட்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். கேதார கௌரி நோன்பன்று இங்கு இறைவன் இறைவியை வழிபட...தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.இத்தலம் செவ்வாய்க்கு உரிய தலமாகும். மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகார தலமாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இராகு காலத்தில் துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து, செண்பகமலர் மாலை மற்றும் எலுமிச்சம்பழ மாலையும் அணிவித்து, சித்ரான்னம் நிவேதித்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிட்டும். ஏழரைச் சனி நடப்பவர்களுக்கும் இது சிறந்த பரிகார தலமாகும்.இந்த திண்டிவனத்தில் திந்திரிணீஸ்வரர் ஆலயத்தோடு இங்கு கிடங்கில் கோட்டையில் திகழும் வரலாற்றுப்பெருமை கொண்ட அறம் வளர்நாயகி உடனுறை அன்பநாயகேஸ்வரர் ஆலயத்தையும் தரிசிப்பது சிறப்பாகும்.விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் தனித் தாலுகாவாகத் திகழும் திண்டிவனம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பழங்காமூர்: மோ.கணேஷ்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்