×

தாயுமானவ தனிக் கருணைப் பெருநிதி

தாயுமானவர் குரு பூஜை 5-2-2021

தமிழில் பக்தி மரபினைப் பண்படுத்தி மானுட சமூகம் கடைத்தேறும் வண்ணம் ஆற்றுப்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் தாயுமானவர். தாயுமானவரின் பாடல்கள் பக்திப் பனுவல்களாய் மட்டும்  அமையாமல் தமிழுக்கு ஏற்றம் தரும் தனித்துவம் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. எனவேதான் பாரதி, தாயுமானவரைப் பற்றிக் குறிக்கும் பொழுது,  

“என்றும் இருக்க உளம்கொண்டாய்
இன்பத் தமிழுக்கு இலக்கியமாய்
இன்றும் இருத்தல் செய்கின்றாய்
இறவாய் தமிழோடு இருப்பாய் நீ!
‘ஒன்று பொருள்; அஃது இன்பம்’ என
உணர்ந்தாய் தாயுமானவனே
நின்ற பரத்து மாத்திரமோ
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!”
- எனப் பாடிப் போற்றுகின்றார்.

தாயுமானவர் பாடல்களில் காணப்படும் தத்துவச் செழுமையும், வாழ்க்கை நோக்கும், கவித்துவமும் பாரதியாரை முழுமையாக ஆட்கொண்டன. எனவேதான், தமிழ்ச் சிந்தனை மரபில் இத்தகைய உயர்  இடத்தை பாரதி தாயுமானவருக்குத் தந்து சிறப்பிக்கின்றார். இத்தகைய சிறப்பிற்குரிய தாயுமானவர் பிறந்து, வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டு ஆகும்.

தமிழகம் நிலையற்ற அரசாட்சி களாலும், மாபெரும் அரசியல், சமூகக் குழப்பங்களாலும் சூழப்பட்டிருந்த ஒரு காலகட்டம். அத்தகைய காலச்சூழலில் சோழவள நாட்டில் அமைந்துள்ள திருமறைக்காட்டில்  ஏறக்குறைய முந்நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்னர், கேடிலியப்ப பிள்ளை என்பவருக்கு மகனாய்த் தோன்றியவர் தாயுமானவர். கேடிலியப்ப பிள்ளை திருமறைக்காட்டுத் திருக்கோயில்  கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். திருச்சிராப்பள்ளியில் அரசாண்டு வந்த விசய இரகுநாத சொக்கலிங்க நாயக்கர் கேடிலியப்ப பிள்ளையின் சிறப்புகளைக் கேள்வியுற்று தம் அரசுப்  பெருங்கணக்கராக அமர்த்திக்கொண்டார்.

அப்பணியை ஏற்றுக்கொண்ட கேடிலியப்பர் அரசரின் பெருமதிப்பிற்குரியராய் பணி செய்து வந்தார். மேலும், குழந்தைப்பேறு வேண்டி திருச்சிரபுரப் பெருமானின் திருவடி வேண்டி நிற்க, அவர்தம்  குறையினைத் தீர்க்கும் வகையில் தாயுமானவர் வந்து அவதரித்தார்.

தாயுமானவர் அறிவுச் சுடருடன் அன்பும் பெருக்கி, திருச்சியில் பாடசாலை நடத்தி வந்த சிற்றம்பல தேசிகரை முதல் ஆசானாகக்கொண்டு தென்மொழியையும்  வடமொழியையும் கற்றுத் தேர்ந்தார்.  மேலும், கணிதம், ஜோதிடம், தர்க்கசாஸ்திரம் ஆகிய துறைகளிலும் தேர்ச்சி பெற்றார். அத்துடன் சைவ ஆகமங்களையும், பன்னிரு திருமுறைகளையும், அருணகிரியாரின் திருப்புகழ் போன்ற  நூல்களையும் பிழையறக் கற்றார். பின்னாட்களில் அவர் பாடிய தத்துவப் பாடல்களில் அவரின் ஆழ்ந்தகன்ற கல்வித்திறம் மிளிர்வதைக் காண முடிகின்றது.

இவ்வாறு தாயுமானவர் கல்வியிலும், செல்வத்திலும் சிறந்திருந்தபோதும் அதில் ஈடுபாடு கொண்டாரில்லை. ஆன்ம நாட்டத்திலே அவர் மனம் திளைத்திருந்தது. எனவே திருச்சி மலைக்கோட்டைப்  பகுதியில் இருந்த சாரமாமுனிவர் மடம் என்னும் மௌனகுரு மடத்தின் சுவாமி
களிடத்தில் ஞானதீட்சை பெற்று மெய்யறிவு கூடப் பெற்றார். இதனை, தாயுமானவரால் பாடப்பெற்ற மௌனகுரு வணக்கம் என்னும் பகுதியில் காணமுடிகின்றது. தனது தமையனார் சிவசிதம்பரம்  பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டுவார் குழலி என்பாரை மணம் புரிந்தனர். கனக சபாபதி எனும் ஓர் ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

பின்னர் சிலநாட்களில் இவர்தம் வாழ்க்கைத் துணைவியார் இறைவன் திருவடி நீழலை அடைந்தார். தனது மகனைத் தமையனாரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, தாயுமானவர் முறையாகத் துறவறம்  மேற்கொண்டார். மௌனகுரு மடத்தின் தலைவராகவும் இருந்தார். இறுதிக் காலத்தில் ராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள தேவிப்பட்டினத்தில் வாழ்ந்து அங்கேயே 1737 தை மாதம் விசாகத்தன்று  பூரணமெய்தினார்.
தாயுமானவர் நிகழ்த்திய அற்புதங்கள்:

மெய்யறிவின்பால் நாட்டம் கொண்டிருந்த தாயுமானவர் இறைத்திருவருளால் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணற்றவை ஆகும். இவர் திருச்சிராப்பள்ளி அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது  ஒரு சமயம் அரசாங்கப் பத்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தான் படித்துக் கொண்டிருந்த பத்திரங்களைக் கைகளால் கசக்கித் தூள்தூளாக்கினார்.

அங்கிருந்த ஏனைய அதிகாரிகள் காரணம் அறியாது திகைத்தனர். உடன் தாயுமானவர்  “திருவானைக்காவல் அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆடையில் பற்றிய தீயை அணைக்க முயன்றேன்.  என்னையறியாது இந்தப் பத்திரம் பாழாகி விட்டது குறித்து வருந்துகிறேன்” எனத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் திருவானைக்கா கோயிலில் தீபாராதனையின்போது கற்பூரம் லேசாகத் தவறி விழுந்து  அம்பிகையின் ஆடைமீது விழுந்து தீப்பற்றிக் கொண்டதாகவும், அர்ச்சகர்கள் மிகவும் சிரமப்பட்டு அதை அணைத்ததாகவும் நல்லவேளையாக பெரிய தீ விபத்து நிகழாமல் காப்பாற்றப்பட்டதாகவும் செய்தி  அரண்மனைக்கு வந்து சேர்ந்தது. தாயுமானவரின் பக்தித்திறம் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.

தாயுமானவர் உயர் அதிகாரியாக வலம் வந்த  திருச்சிராப்பள்ளி பகுதியில் துறவியாகப் பிச்சை வாங்கி உண்டு வாழ்ந்து வந்தார். அதனைக் கண்ட ஒருவர் விலையுயர்ந்த சால்வையை அவர்மீது போர்த்தி  வணங்கிவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து அந்தச் சால்வையினை வேலைக்காரி ஒருவள் அணிந்திருந்தனள். அவள் அதனைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, துறவி ஒருவர் தனக்கு  அதைத் தானமாக அளித்தார் என்று கூறினாள். மக்கள் தாயுமானவரிடம் வந்து வினவினர்.

அதற்குத் தாயுமானவர் “அன்னை அகிலாண்டேஸ்வரி அன்றொரு நாள் குளிரில் நடுங்கிக் கொண்டு வந்தாள். என்னிடமிருந்த சால்வையை அவளுக்குச் சார்த்தினேன்” என்று அவர் பதிலளித்தார்.  தாயுமானவரின் இச்செயலானது உலக உயிர்களிடத்து இறைவனைக் கண்டு தொழும் அவர்தம் உயர்ந்த மனப்பான்மையினை வெளிப்படுத்தி நிற்கின்றது. தாயுமானவர் பாடிய பாடல்களை அவரது சீடரான  அருளைய பிள்ளை என்பவர் எழுதிப் பாதுகாத்து மற்ற சீடர்களுக்கும் கற்பித்தார் எனக் கூறப்படுகின்றது. தாயுமானவர் பாடியவையாக 1452 பாடல்கள் கிடைத்துள்ளன.

தாயுமானவரின் தத்துவப் பார்வையானது தமிழ்நிலத்தில் செழித்திருந்த சைவசித்தாந்தத்திலிருந்து தோன்றி, அதன் எல்லைகளையும் தாண்டியும் வளர்ந்து தனக்கான ஒரு தனித்தன்மையுடன்  வெளிப்போந்ததாகும். உபநிடதங்களையும், ஆதிசங்கரரின் பாஷ்யங்களையும், ஆழ்ந்து கற்று அத்வைத வேதாந்தத்தின் தத்துவ சாரத்தையும் அறிந்திருந்தார். தாயுமானவர் பாடல்களுக்கு உரையெழுதிய  சுவாமி சித்பவானந்தர் பல இடங்களில் உபநிடத மந்திரங்களுக்கும் தாயுமானவர் பாடல்களுக்கும் உள்ள ஒப்புமையை எடுத்துக் காட்டுகின்றார்.

“அடிகள் வடமொழியில் உபநிடதங்களையே நன்கு பயின்றனரென்று தெளிக. தமது நூலிலும் உபநிடத்துட்போந்த சைவக் கருத்துக்களையே வேதாந்தக் கருத்தாகவும் வேதக் கருத்தாக்கவும் கூறினார்”  என்று குறிப்பிடுகிறார் கா.சுப்பிரமணிய பிள்ளை என்பது ஈண்டு சுட்டுதற்குரியதாகும். யோகம், ஞானம் குறித்த செய்திகள் தாயுமானவர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இவை, யோகவாசிஷ்டம்  என்பதனுள் அமைந்துள்ளவை ஆகும்.

இதன் வழி, அந்நூல் விரிவாகக் கூறும் தத்துவவிளக்கங்களையும், யோக, தியான முறைகளையும் தாயுமானவர் அறிந்திருந்தார் என்பது வெளிப்படுகின்றது. அகத்தியர், திருமூலர், போகர், இடைக்காடர்,  குதம்பைச் சித்தர், முதலான சித்தர்களைக் கொண்ட தமிழகத்தின் பதினெட்டு சித்தர் மரபு, கோரக்நாதர் தொடங்கி ஒன்பது சித்தர்களைக் கொண்ட வடஇந்தியாவின் நவநாதச் சித்தர் மரபு ஆகிய இரண்டு  மரபுகளையும் தமது பாடல்களில் தாயுமானவர் குறிப்பிடுகின்றார்.

தாயுமானவர் திருமூலர் மரபில் வந்த மௌன குருவின் வழியினராதலின் சித்தர்கூட்டத்தைப் போற்றுகின்றார். சித்தர்களின் அருஞ்செயல்
களையும் குறிப்பிட்டுரைக்கின்றார். சித்தர்கள் திசைகளும் திசைகளின் முடிவுகளும் எட்டுமாறு நொடிப் பொழுதில் மனத்தின் வேகத்தினை விட விரைவாகச் சென்று அடைந்து ஓடி விளையாடி மீளும்  ஆற்றல் பெற்றவர்கள் ஆவர். செம்பொன் நிறமாகிய மேரு மலையொடு குண மலையினை ஒன்று சேர்ப்பது போன்றும் துருவ மண்டலத்தினை ஒன்று சேர்ப்பது போன்றும் துருவ மண்டலம் வரை  ஒருங்கு கலக்கும் சித்தி வாய்க்கப் பெற்றவர்கள். கொடுமை மிக்க சக்ராயுதத்தைக் கையிலேந்தியிருக்கும் உலகளந்த திருமாலையொத்து  ஓங்கி நிற்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

தம்முடைய உள்ளங்கையில் ஓர் உழுந்து அமிழும் அளவாக ஆழமிக்க ஏழுகடலையும் ஆக்கி, ஆசமனம் எனப்படும் முக்குடி நீராகப் பருகி உட்கொள்ளும் வல்லமை பெற்றவர்கள். தேவர்களின்  உலகத்தினையும்  அவ்வுலகில் உள்ள வெள்ளை யானையாகிய ஐராவதத்தையும் கைக்குப் பூப்பந்து போன்றெடுத்து விளையாடி மகிழும் ஆற்றல் பெற்றவர்கள். வானவெளி அனைத்தையும் ஒரு சிறிய  கடுகைத் துளைத்து அதனுள் அடக்கி, அதன்வழி, இயமம், மந்தரம், கயிலை, வடவிந்தம், நிடதம்,ஏமகூடம், நீலகிரி, கந்தம் ( திவாகரம் - 2401) எனப்படும் குலமலை எட்டையும் நலமுறக் காணும்படி  செய்யும் திறம் வாய்க்கப் பெற்றவர்கள்.

இவை மட்டுமன்றி, அளவிடப்படாத சித்திகளையெல்லாம் செய்து காட்டும் பெருவல்லமையுள்ளவர்கள் சித்தர்கள் எனக் குறிப்பதுடன் மறைமுடிவும் முறைமுடிவும் ஆகிய வேதாந்த சித்தாந்த சமரசம்  என்னும் வேறுபாடில்லாத நல்ல நிலைபெற்ற மூதறிவாம் மெய்யுணர் வினையுடையவர்கள் சித்தர்தம் சீரிய திருக்கூட்ட மரபினைச் சார்ந்தவர்கள் என சித்தர் மரபினைப் போற்றுகின்றார் தாயுமானவர்.  இதனை,
 
திக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே
சென்றோடி யாடிவருவீர்
செம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே
திகழ்துருவம் அளவளாவி
உக்ரமிகு சக்ரதர னென்னநிற் பீர்கையில்
உழுந்தமிழும் ஆசமனமா
வோரேழு கடலையும் பருகவல் லீரிந்த்ரன்
உலகும்அயி ராவதமுமே
கைக்கெளிய பந்தா எடுத்து விளையாடுவீர்

ககனவட் டத்தையெல்லாம்
கடுகிடை யிருத்தியே அஷ்டகுல வெற்பையும்
காட்டுவீர் மேலும்மேலும்
மிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன்
விளங்குவரு சித்திஇலிரோ
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே.

 - என்ற பாடலானது வெளிப்படுத்தி நிற்கின்றது. இதன்மூலம் வேதாந்தம், சைவ சித்தாந்தம், சித்தர்களின் யோகம் ஆகிய மூன்று மெய்ஞான மரபுகளின் இணைவே தனக்கு விருப்பமான வழியாகும் என்று  தாயுமானவர் குறிப்பிட்டுரைக்கின்றார்.

உயிரினால் அறியப்படும் அன்பினுள் இறவாத இன்ப அன்பே இறைவன்பால் சேர்ப்பிக்கும் மெய்யன்பாகும். அத்தகைய அன்பின் வழியறியாத அடியேனைத் தொடர்ந்து வந்து என்னையே நான் தெளிவாக  அறிந்து கொள்ளுதற்குரிய வாய்ப்பில்லாத நேரத்தில் எனது ஆர்வத்தினைப் மிகுவித்த இறைவா! அடியேன் பால் ஒருபொழுதாயினும் இரக்கங்கொண்டு நின் திருவடியின் அன்பு வெள்ளமாக வந்து எளியேன்  உள்ளம் மகிழுறும்படி அடியேனை நீ கலந்தருளியதுண்டோ? நன்றாக மலர்ந்த மலரினுக்கு நறுமணமுண்டு, மணமுண்டாகவே, தேனுமுண்டு; அத்தேனையுண்டு பேரின்பம் எய்தும் இயல்புடைய   வண்டுமுண்டு; இவையனைத்தும் குளிர்ச்சிமிக்க மலராதபோது என்னும் அரும்புகளுக்கு எக்காலத்து முண்டோ? இல்லை.

அடியவனாகிய நான் உன் அருள் அடையாது துன்புறுவேன் எனில் மெய்யன்பர்க்குரிய  பேரின்ப நலமானது அடியேனுக்கு எப்படி வந்து வாய்க்கும்? எனவே, திருவாய் மலர்ந்தருள்வாயாக! என  இறைத்திருவருளை வேண்டி நிற்கின்றார் தாயுமானவர். மலர் உள்ளபோதே மணமும் உண்டு. எனினும் மலர் விரிக்கும் பொழுதுதான் அதன்கண் அடங்கியிருந்த மணம் வெளிப்பட்டுப் பயன்தருகின்றது.  அதுபோல உயிருள்ளபோதே உயிர்க்கு உயிராகிய இறைவனும் உடனாய் உளன். எனினும் துறைபோகக் கற்றவர் உள்ளத்தே முறையுறக் கல்வி அனைத்தும் நிறைவுற்றிருப்பினும் அவர் நினையும்
பொழுதுதான் அவை வெளிப்பட்டு வந்து பயன் தருகின்றது. அதுபோல் இறைவனும் உள்ளமுருகிப் பெருக நினையும்போதுதான் வெளிப்பட்டருள்வான் என்பது இதன்மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது.  இத்தகைய அரிய தத்துவச்

சிந்தனையைத் தரும் பாடல்,
அன்பின்வழி யறியாத என்னைத் தொடர்ந் தென்னை
அறியாத பக்குவத்தே
ஆசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்துநான்
அற்றேன் அலந்தேன்என
என்புலன் மயங்கவே பித்தேற்றி விட்டாய்
இரங்கியொரு வழியாயினும்
இன்பவௌ மாகவந் துள்ளங் களிக்கவே

எனைநீ கலந்ததுண்டோ
தன்பருவ மலருக்கு மணமுண்டு வண்டுண்டு
தண்முகை தனக்குமுண்டோ
தமியனேற் கிவ்வணந் திருவுள மிரங்காத
தன்மையால் தனியிருந்து
துன்பமுறி னெங்ஙனே யழியாத நின்னன்டர்
சுகம்வந்து வாய்க்கும்உரையாய்

சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே.என்பதாகும்.

தாயுமானவரின் ஆன்மிகப் பயணமானது தத்துவார்த்த விசாரணைக்குள் மட்டும் அடங்கி விடுவதன்று. மனித வாழ்க்கையின் இன்ப, துன்பங்களைக் களத்தில் எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்ததும் ஆகும்.  அவரது ஆன்ம ஞானமானது அனைத்து உயிர்களின் மீதான அன்பாகவும், அருளாகவும், கருணையாகவும் வெளிப்படுகின்றது. தாயுமானவரின் வாழ்விலும் பாடல்களிலும் இதைத் தெளிவுபடக்  காணமுடிகின்றது. மனிதர்
களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணியாய் அமைவது நான் என்னும் ஆணவம்தான். இதனால் விழையும் கேடுகள் எண்ணிலாதன எனினும் மனிதன் அதனின்று நீங்கினானில்லை.  ஆனால் ஆணவத்தினின்று நீங்கி நான் என்பதனை நீக்கித் தன்னை அறிந்தவர்க்கே இறையருள் வந்தமையும் என்கிறார் தாயுமானவர்.தாயுமானவரின் இத்தகைய

சிந்தனையை,
“தன்னைஅறி யாதுசகத் தானாய் இருந்து    விட்டால்
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே”

என்ற பாடலானது வெளிப்படுத்தி உரைக்கின்றது. இத்தகைய ‘நான்’ என்கிற பற்றானது ஆசையினாலே உருவாகின்றது. எனவே, ஆசையினால் வரும் துன்பத்தினையும் தாயுமானவர் எடுத்துரைப்பார்.  மனிதர் ஆசைக்கு அடிமைப்பட்டு அதன்வழி நிற்பாராகில் ஆசையென்ற பெரிய சூறைக்காற்றுக்கு இடையே சிக்கிய இலவம் பஞ்சினைப்போன்று மனித மனம் அலைவுற்று அல்லலுறும்.

மேலும், அக்காலத்து நீக்கமுடியாத பெருங்கேடு வந்து சேரும். அதனால் பலகாலம்  வருந்திக் கற்ற கல்வியும் சான்றோர் பலர்வாயிலாகக் கேட்ட உறுதுணையாகிய நற்கேள்வியும் நல்ல நீர், அழுக்கு,  குப்பை முதலியவற்றால் தூர்ந்து பாழாவது போன்று தூர்ந்து வீடுபேற்றுக்கான நல்ல தவத்தால் அமைந்த ஞானமும் நல் வாழ்க்கையும் நீங்கும். அதனால் இவ்வுலகில் ஐம்புலனுக்கு அடிமைப்பட்டு  ஐம்புலனால் ஆகிய கொடுமை வாழ்க்கையில், அழுந்திநிற்பர். அவ்வாறு நிற்கும் மனிதர்களுக்கு பிறவி வாய்ப்பதன்றித் தெய்வநிலை வாய்க்காது என்று குறிக்கின்றார் தாயுமானவர். இத்தகைய தத்துவ  நிலையினை விளக்கும் பாடல்,

ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்
செனவும்மன தலையுங் காலம்
மோசம் வரும் இதனாலே கற்றதுங்கேட்ட
துந்தூர்ந்து முத்திக் கான
நேசமும்நல் வாசமும்போய்ப் புலனாயிற்
கொடுமைபற்றி நிற்பர் அந்தோ
தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே
நிராசையின்றேல் தெய்வ முண்டோ.

என்பதாகும். தாயுமானவரின் தத்துவ விசாரணை போன்றே அவரின் கவித்துவமும் தனித்தன்மை கொண்டமைந்ததாகும். அவரது பாடல்
களில் காணப்படும் சொல்லாட்சிகள், உவமைகள் போன்றன  சொல்லில் அழகினையும்   பொருளில் ஆழத்தினையும் கொண்டமைந்தவை ஆகும்.
இறைவனின் திருவடிச் சிறப்பினை அறியாதார்கள் அதனைப் பெரிதென எண்ணாது  இருத்தலும் அதனை அறிந்தவழி, தாம் இதுகாறும் கொண்டிருந்த கருத்தினைத் தவறென்று உணர்தலும் இயல்பாகும்.

அதனை உணர்த்துதற்குப் பெண்ணின் மனவோட்டத்தினை உவமைகாட்டி விளக்குவார் தாயுமானவர். மங்கைப்பருவம் எய்தாத கன்னிப் பெண்ணொருத்தி  பருவம் எய்திய பெண்கள் பலராலும்  விரும்பப்படும் சிற்றின்பத்தினை பருவமின்மையால் கசக்கும் வேம்பென வெறுத்து மொழிவாள்; அவளே மங்கைப் பருவம் எய்தித் திருவருளால் கணவனுடன் திருமணமுறையாற் கூடி இல்வாழ்வேற்று  இன்புற்று வாழும்பொழுது அவ்வின்பமே பேரின்பமென அவளுக்குத் தோன்றும்.

எனவே முன்னர் இதனையே நாம் வேம்பெனக் கூறினோமே என்று நினைந்து சிரிப்பெய்துவாள். அதனைப்போல இறைவனின் திருவடி இன்பத்தினை அறியாதவர்கள் பருவம் அடையாப் பெண்போல  ஏதேதோ கூறிப் பிதற்றி நிற்பர். பின், இறைவனின் திருவடியின்பமானது நினைக்குந்தோறும் உயிர்களைத் தளிர்க்கச் செய்யும் ஆற்றல் நிறைந்தது.

இனிய அமிழ்தினை ஒத்ததாகவும் மா,பலா, வாழை என்னும் முக்கனியைப் போலவும் சருக்கரைப் பாகுபோலவும், கற்கண்டெனவும், சீனத்துச் சீனிபோலவும், தேன் போலவும் சுவையுண்டாகும்படி  செய்வது என்பதனை உணர்ந்து அடியவரிடத்து வலிய எழுந்தருளி வந்து திரு
வடியின்பத்தினைக் கருணையால் ஊட்டியருளும் இறைவனின் திருவடி இன்பத்தினை நுகர்ந்த மெய்யன்பர்கள் எப்பொழுதும் அதனையே இடையறாது நினைந்து உள்ளம் உருகி, எண்ணி, எண்ணிய  உள்ளமும் நெகிழ்வுற்று, சொல் தடுமாறி, உடம்பிளைத்து, நினைவிழந்து, நின்வயப் பட்டு, அறிதற்கரிய பேரின்ப நுகர்வுணர்விலே உணர்ந்து இன்பவண்ணமாய் அமர்ந்திருப்பர். இது உண்மையாகும் எனக்  குறிப்பார் தாயுமானவர். இதனை, விளக்கும் பாடல்,

இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன்
எனருசித் திடவலியவந்தின்பங்கொடுத்தநினை
எந்நேர நின்னன்பர் இடையறா துருகிநாடி
உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும்
ஓய்ந்துயர்ந் தவசமாகி
உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே

உணர்வார்கள் உள்ளபடிகாண்
கன்னிகை யொருத்திசிற்றின்பம்வேம் பென்னினுங் கைக்கொள்வள் பக்குவத்தில்
கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக் கருதிநகை யாவளதுபோல்
சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை
தோற்றிற் சுகாரம்பமாஞ் சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் சோதியே சுகவாரியே.
 - என்பதாகும்.

உலகில் சிலர் இல்லற வாழ்வினை மேற்கொண்டமையே தம் துன்பத்திற்குக் காரணம் என்றும் அதனாலே இறைத்திருவருளைப் பெற இயலவில்லை எனவும் எண்ணித் துயருறுகின்றனர்.  அத்தகையவர்களுக்கு அறிவுரை சொல்லி ஆற்றுப்படுத்துகின்றார் தாயுமானவர். மனித மனமானது, கயிற்றினால் சுழற்றப்பட்டுக் கிறுகிறுவெனச்  சுழலும் பம்பரக் கூட்டங்கள் போன்று, தனக்கென  எவ்வகை விருப்பமும் தேடலும் இல்லாமல் இறைவனின் திருவருள் செலுத்துகின்ற செயலின்வழி செல்லுமானால் இல்லற வாழ்க்கையும் துறவற வாழ்க்கையும் இறைவனின் திருவடிப் பேற்றினை  அடைவதற்கு ஒத்த மேம்பாடுடையனவேயாகும் எனக் குறிப்பிடுகின்றார் தாயுமானவர்.

இதன்வழி, இல்லற வாழ்வின் சிறப்பினையும் உணர்த்துகின்றார் என்பதனை அறிக. இறைவனை அடைதற்கு துறவறம்தான் சிறந்தது என்றில்லை. ஆசையினை நீக்கி இறைவழி வாழும் இல்லறமும்  சிறந்ததே என எடுத்துரைக்கும் பாடல்,

சாட்டையிற் பம்பர சாலம் போல்எலாம்
ஆட்டுவான் இறையென அறிந்து நெஞ்சமே
தேட்டமொன்றஅருட் செயலில் நிற்றியேல்
வீட்டறந் துறவறம் இரண்டும் மேன்மையே.    என்பதாகும்.

பகையும் பிணியும் பசியும் சூழ்ந்து பாழ்பட்டுக் கிடக்கும் இப்பாரில் வளமும் நலமும் சிறக்க தாயுமானவர் காட்டும் வழி மிகச் சிறந்ததாகும்.
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே”
“எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி
இரங்கவும் உன் தெய்வ அருட்கருணை
செய்யாய் பராபரமே.”

“எங்கெங்கே நோக்கிடினும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கங்கிருப்பது நீ அன்றோ பராபரமே”
என்ற அவர்தம் திருவார்த்தைகள் மானுட சமூகம் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள் எனில் அது மிகையன்று.
இத்தகைய தெளிந்த நிலை மானுட சமூகத்திற்கு வந்தமையுமெனில் உலகம் போரின்றிப் புனிதம் பெறும்.தாயுமானவரின் சிந்தனை செழித்து தரணி சிறக்கட்டும்! எல்லா உயிரும் என்னுயிர்  என்றெண்ணும் எண்ணம் செழிக்கட்டும்!

முனைவர் மா. சிதம்பரம்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி