×

வேலை வழிபடுவதே வேலை

வேல் எடுத்தல் (வேல் நடுதல்)நாடு நலம்பெறவும், சமுதாயத்தின் பாதுகாப்பிற்காகவும், நடந்த போராட்டங்களில் தனது இன்னுயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களுக்கு நடுகல் எடுப்பது வழக்கம். அதற்கு இணையாக அவர்கள் பெயர், குலம், கோத்திரம் வீரச்செயல் பொறித்த வேல்களை நடும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. இதற்கு வேல் எடுத்தல் அல்லது வேல் நடுதல் என்பது பெயர்.

தமிழகத்து வீரர்கள் தாங்கள் ஏந்தும் படைக்கலமான வேலாயுதத்தைத் தம் உயிரினும் மேலாக மதித்தனர். வேலின் பெயரால் அவர்கள் கூர்வேலன், சுடர் வேலன், வெற்றி விளைத்த வேல் வல்ல பெருமான் என்று பலவாறு அழைக்கப்பட்டனர். வேலாயுதத்தைத் திறம்பட வீசுபவன் வேல்வலான் எனப்பட்டான். பெரிய மதம் கொண்ட யானைகளைக் கூட வீரர்கள் தமது கைவேலால் வீழ்த்தி வெற்றி பெற்றதை இலக்கியங்கள் சிறப்புடன் குறிக்கின்றன.

வீரர்கள் யாவரும் முருகப் பெருமானின் அம்சம் என்றே கருதப்பட்டனர். அதனால், வீரர்களின் நினைவுக் கோயில்களில் வீரனின் பெயரையும் புகழையும் எழுதிய வேல்களை நட்டு அவற்றை அவனாகவே எண்ணி பூசித்து வழிபட்டனர். காலப் போக்கில் இத்தகைய நினைவுக்கென அமைக்கப்பட்ட வேல்களைத் தனித்தனியே அமைக்காமல் காளி கோயில், ஐயனார் கோயில் ஆகியவற்றின் முற்றங்களிலும் அமைத்தனர்.

கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனேக சிறு தெய்வ ஆலயங்களின் முற்றத்தில் இத்தகைய நினைவு வேல்களைக் காணலாம். இரும்பினால் பெரிய அளவில் செய்து நடப்பட்டுள்ள இத்தகைய வேல்களில் மணிகள் இணைக்கப்பட்டுள்ளன. நீண்ட சங்கிலிகளால் இணைக்கப்பட்டுள்ள இத்தகைய வேல்களின் வரிசைகள் தமிழகத்தின் வீர வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

பஞ்சவேல் பரமேஸ்வரர்

வேலாயுதம் சிவசக்தி வடிவமாகும். அது பஞ்சாட்சர வடிவானது ஐந்து லிங்கங்களை ஒன்றாக வைத்துப் பஞ்சாட்சர லிங்கங்களாக வழிபடுவதைப் போலவே பஞ்ச வேல்களையும் நட்டுப் பரமசிவமாக வழிபடுகின்றனர். கொங்கு நாட்டில் கோவைக்கு அருகில் சூலூர் என்னும் ஊர் உள்ளது. அதற்கு அருகில் சூரன் மடை என்னும் ஊர் உள்ளது. அங்கு ஐந்து வேல்களைக் கருவறையில் அமைத்து பஞ்சவேல் பரமேஸ்வரராக வழிபடுகின்றனர். இக்கோயிலுக்குப் பரமசிவன் கோயில் என்பதும் பெயராகும்.

கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற பரமசிவன் கோயில்கள் இருபதிற்கும் மேல் உள்ளன. ஆதியில் கொங்கு வேளாளர் குலத்தில் தோன்றிய கந்தசாமிக் கவுண்டர் என்பவர் சிவபெருமான் ஆணைப்படி ஐந்து வேல்களை நட்டுக் கோயிலை அமைத்தார் என்று வரலாறு கூறுகிறது. பெரும்பாலும் இக்கோயில்கள் தனித்த தோப்பிலோ தோட்டங்களிலோ அமைதியான சூழ்நிலையில் இருக்கின்றன. பொள்ளாச்சியை அடுத்த கப்ளாங்கரை என்னும் இடத்திலுள்ள பரமேஸ்வரர் கோயில் புகழ் பெற்றதாகும். ஐம்பெரும் வேல்களுடன் இங்கு மட்டும் பார்வதி தேவிக்கும் திருவுருவம் அமைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
சமாதித் தலங்களில் வேல் வழிபாடு

வீரர்களின் நினைவுக் கோயில்களில் மட்டுமின்றி, முருகனடியார்களின் சமாதி மீதும் வேலை நட்டுக்கோயில் அமைக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. திருவான்மியூர் பாம்பன்சுவாமி ஆலயத்தில் அவருடைய சமாதித் தலத்தில் முதலில் வேலை அமைத்தே பூசை செய்து வந்தனர். பின்னர், மயில் மேல் விளங்கும் பால முருகனும் அதன்பிறகு பாம்பன்சுவாமி கல்திருமேனியும் அமைக்கப்பட்டதாக அன்பர்கள் கூறுகின்றனர். பொதுவாக, சமாதித் திருத்தலங்களில் சிவலிங்கத்தையோ, குருவின் பாதுகையையோ வைத்து வழிபடுவது வழக்கம். இப்படி வேலை அமைக்கும் வழக்கமும் சில பகுதிகளில் காணப்படுகிறது.

வேற்கோட்டம்

ஆதிநாளில் மக்கள் தங்களை இயற்கையின் சீற்றத்திலிருந்தும், பகைவர்களின் தாக்குதல்களில் இருந்தும், விலங்குகள், நோய்கள் முதலியவற்றிலிருந்தும் காத்தருளும் தெய்வங்களையும் தெய்வ நிலை பெற்ற தமது முன்னோர்களையும் போற்றி வணங்கினர். இப்படி தெய்வங்களை வணங்கியது போலவே அந்தத் தெய்வங்கள் ஏந்தியுள்ள ஆயுதங்களையும் வழிபட்டனர். தெய்வங்களைப் போலவே அத்தெய்வங்கள் ஏந்தியுள்ள ஆயுதங்களும் அரிய பல அற்புத சக்திகளையும் அதிவேக ஆற்றலையும் கொண்டவைகளாகப் போற்றப்பட்டன.

 தெய்வங்கள் உலாவரச் செய்யும்போது அதன் முன்பாக அதன் ஆயுதத்தை ஏந்திச் செல்லும் வழக்கம் இருந்தது. அதையொட்டி அரசர்கள் உலாச் செல்லும் போதும், அவர்களது வாள், குடை, ஆகியவற்றை முன்னே எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்ததை இலக்கியங்கள் கூறுகின்றன. இவற்றை வாள் வலம் செய்தல், குடை வலம் செய்தல் என்று அழைக்கின்றனர்.

 இப்போதும் ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களின் போது சுவாமியின் வீதியுலாவிற்கு முன்பாக அவரது ஆயுதம் சிறு பல்லக்கில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டு கோயிலில் உள்ள கொடிமரத்தடியிலும் எட்டுத் திசைகளிலும் வைத்து வழிபாடு செய்வதைக் காண்கிறோம்.
 சிவாலயங்களில் திரிசூலமும், பெருமாள் கோயில்களில் சக்ராயுதமும், முருகன் கோயில்களில் சக்தி ஆயுதமும், வீதியுலா செய்யப்படுகின்றன. இந்த ஆயுதங்களை அஸ்திரதேவர் என்று அழைக்கின்றனர். கிராம தெய்வக் கோயில்களில், தெய்வத்தின் படைக்கலமாக வாள் ஆயுதத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைப் படைசாற்றுதல் என்று கூறுவர்.

பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் பூம்புகார் நகரில் இருந்த ஆலயங்களில் பெயர்கள் வரிசையாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றில் தெய்வங்களுக்கு மட்டுமின்றி, தெய்வங்களோடு தொடர்புடைய பொருட்களுக்கும் ஆலயம் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்திரனின் ஆயுதமான வஜ்ராயுதத்திற்கு அமைக்கப்பட்ட வஜ்ரக்கோட்டம் வரிசையில் முருகனின் வேலுக்கு அமைக்கப்பட்ட வேற்கோட்டம் முதலியவை குறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2500 ஆண்டுகளுக்கும் முன்பாகவே வேலுக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய்யும் வழக்கம் இருந்ததை அறிய முடிகிறது. இத்தகைய வேற்கோட்டங்களில் வேலாயுதமே வழிபடு கடவுளாக அமைக்கப்பட்டிருந்தது.

ஆதியில் வேற்கோட்டமாக இருந்த பல ஆலயங்களே பின்னாளில் முருகன் கோயில்களாக உருமாறிவிட்டன என்பது அறிஞர்களின் கருத்தாகும். இலங்கையில் இப்போதும் பெரும்பாலான ஆலயங்களில் வேலாயுதமே மூலவராக வைத்து வணங்கப்படுகின்றது.

பல முருகன் கோயில்களில் வேலுக்கென அமைந்த சிற்றாலயம் இருக்கக் காண்கிறோம். குன்றக்குடியில் மலையடி வாரத்தில் வேலுக்கென அமைந்த சிற்றாலயம் இருக்கிறது. பல பகுதிகளில் இருந்து பழனிமலைக்கு காவடி எடுத்து வரும்  அன்பர்கள் இங்கு கூடி வேலுக்கு வழிபாடு செய்த பின்னரே ஒன்றாகத் தமது பயணத்தைத் தொடர்கின்றனர்.

திருப்பரங்குன்றம் ஆலயம் அன்பர்களால் வேற்கோட்டம் என்றே கொண்டாடப்படுகிறது. இங்கு முருகனின் வடிவம் பெரியதாக அமைந்திருந்த போதிலும், அவருக்குரிய சிறப்பு வழிபாடுகள் யாவும் அவரது வேலுக்கே செய்யப்படுகின்றன.மதுரைக்கு அருகில் உள்ளதும், முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாக இருப்பதுமாக பழமுதிர் சோலை (அழகர்மலை)யில் கல்லில் செதுக்கி அமைக்கப்பட்ட வேலாயுதத்தின் வடிவமே மூலவராக வைத்து வணங்கப்பட்டு வந்தது.

பின்னாளில்தான் அங்கு வள்ளி தெய்வயானை உடனான முருகனின் மூலவர் உலாத்திருமேனிகள் எழுந்தருளி வைக்கப்பட்டன என்று வரலாறு கூறுகிறது. கால ஓட்டத்தில் வேற்கோட்டங்கள் முருகன் கோயில்களாக மாறிவிட்ட போதிலும், வேலுக்குச் சிற்றாலயங்கள் அமைக்கும் வழக்கம் தொடர்கிறது. அண்மையில் மருதமலை அடிவாரத்தில் வேற்கோட்டம் என்னும் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை - பெசன்ட்நகர் அறுபடைவீடு முருகன் ஆலயத்தில் வேலுக்கென பெரிய மண்டபத்தை அமைத்துள்ளனர். அம்மண்டபத்தில் ஏறத்தாழ 12 அடி உயரமான கல்லாலான நெடிய வேல் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இங்குள்ள பழமுதிர்ச்சோலை சந்நதியின் அடித்தளம் வேல்வடிவில் அமைக்கப்பட்டிருப்பதுடன், அந்தச் சந்நதியில் கல்லாலான வேலின் வடிவம் வழிபடு கடவுளாக அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வேலின் நடுவில் ஆதிசக்தியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்களால் எண்ணற்ற தெய்வங்களும், அவற்றின் ஆயுதங்களும் தனிச் சிறப்புடன் போற்றப்பட்டு வந்த போதிலும், கால ஓட்டத்தில் அந்தத் தெய்வங்களின் ஆயுத வழிபாடு பெரிய நிலையில் இல்லை.

சிவபெருமானின் சூலம், கொற்றவையின் வாள், திருமாலின் சக்கரம் போன்றவை இன்றளவும் வழிபாட்டில் சிறப்புடன் இருந்த போதிலும், அவை தனிக்கோயிலில் வைத்து வழிபடும் வகையில் தனித்துவம் பெறவில்லை. ஆனால், முருகன் கை வேலை வழிபடுவது மட்டும் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னும் உயரிய நிலையிலேயே இருந்து வருகிறது. வேலுக்குக் கோயில் அமைப்பது தொடர்கிறது. இலங்கை, சுவிட்சர்லாந்து, லண்டன் முதலிய நாடுகளில் அமைந்துள்ள பலகோயில்களில் வேலாயுதமே முதன்மை மூர்த்தியாக இருக்கிறது.

பாரத தேசத்தில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வேல் வழிபாடும், வேலுக்கான கோயில்களும் சிறப்பான நிலையில் இருந்து வருகின்றன.வேலைத்துதிக்கும் அஷ்டோத்திர சத நாமாவளி தெய்வங்களைப் போற்றி அவற்றின் 108 பெயர்களைக் கூறி அர்ச்சிக்கும் முறை வடமொழியில் பரவலாக இருக்கிறது.

முருகன், வள்ளி, தெய்வயானை, பாலசுப்பிரமணியர், ஷண்முகர் என்று அனேக 108 (அஷ்டோத்திர சத நாமாவளிகள்) பெயர் அர்ச்சனைகள் வழக்கத்தில் இருக்கின்றன. ெபரும்பாலும் ேவலாயுதத்திற்குப் பூஜை செய்பவர்கள் முருகனுக்குரிய நாமாவளி களைச் சொல்லியே அர்ச்சிக்கின்றனர். வேலுக்கு உரியதாக தனியே அஷ்டோத்திர நாமாவளியும் இருக்கிறது.

இதில் பிரம்மாஸ்திரம், விஷ்ணுவாஸ்திரம், ஏகாதச ருத்ராஸ்திரம், பிரத்யங்கராஸ்திரம், சுரிகாஸ்திரம், வருணாஸ்திரம், சர்வ சத்ரு துவம்ச ஹேது பூத அஸ்திரம் போன்றவை 108 ஆயுதங்களாக இருப்பதாகவும் அவற்றின் மொத்த வடிவமாக இருப்பதாகவும் அவற்றிற்கு மேலாக இருப்பதாகவும் குகன் கையில் இருக்கும் வேல் துதிக்கப்படுகிறது. இந்த அர்ச்சனையை செவ்வரளி மலர்கள், செந்தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தால் அதிகமான பலனைப் பெறலாம்.

சொக்க வேல்

சொக்கம் என்ற சொல் மயக்குவது, கவர்வது, முழுமையான தூய்மையானது என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். வேல் தனது வெற்றியாலும் அழகாலும் அன்பர்களின் மனதை மயங்க வைத்து, தன்னிடம் பக்தி கொள்ள வைப்பதாலும், கவர்ந்து இழுக்கும் சக்தி உடையதாக இருப்பதாலும் அப்பழுக்கற்றுத் தூய்மையுடன் விளங்குவதாலும் வேலாயுதம் சொக்க வேலாயுதம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும், மதுரைச் சொக்கனான சோமநாதரும், சொக்கியான மீனாட்சியும் மனம் உவந்து தம் மகனுக்குத் தந்ததால், வேல் அவர்கள் பெயரால் சொக்கவேல் என்னும் பெயரைப் பெற்றது. சென்னை -  புரசைவாக்கத்தில் சொக்கவேல் சுப்பிரமணியர் ஆலயம் சிறப்புடன் திகழ்கிறது. அன்பர்கள் சொக்கவேல் என்னும் பெயரைத் துதிக்கின்றனர்.

பூசை. ச. அருணவசந்தன்

Tags :
× RELATED தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு