×

வருணன்: விமர்சனம்

சென்னை ராயபுரத்தில் குடிதண்ணீர் கேன் விற்பனை செய்யும் இருதரப்பினருக்கு இடையே தொழில்ரீதியான போட்டி ஏற்படுகிறது. நிறுவன உரிமையாளர்கள் ராதாரவி, சரண்ராஜ் நட்பாக இருந்தாலும், அவர்களிடம் பணியாற்றும் இளைஞர்கள் கடுமையாக மோதிக்கொள்கின்றனர். போலீஸ் அதிகாரி ஜீவா ரவியும் குடிதண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார். இந்நிலையில், இருதரப்பினரின் தொழில் போட்டியால் இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பது கதை.

ராதாரவியும், சரண்ராஜூம் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரில்லா ஜோடி மற்றும் பிரியதர்ஷன், ஹரிப்பிரியா ஜோடி கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர். வில்லன் சங்கர் நாக் விஜயன் கவனம் ஈர்க்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜூனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கிரண்மயி, கவுசிக் போன்றோரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். வருண பகவான் கேரக்டராக சத்யராஜின் குரல் நடித்துள்ளது. எதிர்காலத்தில் குடிதண்ணீருக்காக போர் மூளும் என்று எச்சரித்துள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம், ஸ்ரீராம் சந்தோஷின் ஒளிப்பதிவு. அவரது வித்தியாசமான கோணங்கள் கண்களில் இருந்து அகல மறுக்கிறது. போபோ சசியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் பில்டப் கொடுத்துள்ளார். என்.ரமணா கோபிநாத்தின் வசனம் இயல்பாக இருக்கிறது. 1995க்கு பிறகு குடிதண்ணீர் கேன் வியாபாரம் கொடிகட்டி பறப்பதையும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் இயக்குனர் ெஜயவேல் முருகன் வலுவின்றி சொல்லியிருக்கிறார். இதுவும் வழக்கமான ஈகோ மோதல் கதையாக கடந்து செல்கிறது.

Tags : Royapuram, Chennai ,Radharavi ,Charanraj ,Jeeva Ravi ,
× RELATED டாக்ஸிக் வீடியோவில் சர்ச்சைக்குரிய...