×

முயன்றால் முடியாதது ஏதுமில்லை..!

?30 வயதாகும் எனக்கு கடந்த மூன்று மாதங்களாக தோலில் அலர்ஜி தொல்லை மிக அதிகமாக உள்ளது. மிகவும் சிரமப்படுகிறேன். அரிப்பு தாங்க முடியவில்லை. நல்லதொரு பரிகாரம் கூறுங்கள்.
- கௌரி, ஓசூர்.

ரேவதி நட்சத்திரம், மீனராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. பொதுவாக ஜாதகத்தில் ராகு - கேதுக்களின் சாதகமற்ற சஞ்சார நிலையே இதுபோன்ற தோல் வியாதிகளைத் தரும். ஆனால், உங்கள் ஜாதகத்தில் ராகு - கேது குறித்த தோஷம் ஏதுமில்லை. உடலின் மேற்தோலின் மேல் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் சனியும் நல்ல நிலையில்தான் அமர்ந்திருக்கிறார். இருந்தாலும் இதுபோன்ற பிரச்னைகள் உருவாவது என்பது வேறு காரணத்தினால் இருக்கலாம். நீங்கள் உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட மனிதர்களுக்காக ஏதேனும் வேண்டுதல்களை வைத்து அவற்றை நிறைவேற்றாமல் பாக்கி வைத்தாலும் நமக்கு நினைவூட்டும் விதமாக இதுபோன்ற நிகழ்வுகளைச் சந்திக்கலாம். அல்லது வீடு கட்டும்போதோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நீங்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்த பாம்புப் புற்றினை எவரேனும் அழித்திருக்கலாம். அல்லது உங்கள் பரம்பரையில் தோல் வியாதியினால் அவதிப்பட்ட ஒருவரை உங்கள் பெற்றோர் அலட்சியப்படுத்தி இருக்கலாம்.

இதுபோன்ற காரணங்களில் எது உங்களுக்குப் பொருந்துகிறது என்பதை அறிந்து பரிகாரம் செய்யுங்கள். முதலாவது சொல்லப்பட்ட காரணிக்கு பரிகாரம் விரைந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதும் இறைவனிடம் மானசீகமாக தாமதத்திற்கு மன்னிப்பு கோருவதும் ஆகும். இரண்டாவதாக சொல்லப்பட்ட காரணமாக இருந்தால் வேத விற்பன்னர்களைக் கொண்டு ‘வல்மீக சாந்தி’ என்ற பரிகார பூஜையைச் செய்து வழிபட வேண்டும். மூன்றாவதாக சொல்லப்பட்ட காரணியாக இருந்தால் தொழு நோயாளிகள் மறுவாழ்வு மையத்திற்குச் சென்று அங்கே தங்கியிருக்கும் மனிதர்களுக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும். இதில் எது சரியானது என்பதை அறிந்துகொள்ள ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று உப்பு மிளகு காணிக்கை இட்டு மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். எந்தக் காரணத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்ள முருகப்பெருமானின் அருள் வழிகாட்டும். உங்கள் ஜாதக பலத்தின்படி வருகின்ற வைகாசி மாதத்திற்குள் முழுவதுமாக குணமாகிவிடுவீர்கள். கவலை வேண்டாம்.

?எனக்குக் கடந்த இரண்டு வருடங்களாக மனரீதியான நோய் இருப்பது போல் தோன்றுகிறது. எனது வாழ்வில் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் இத்தனை வருடங்களாக வாழ்ந்திருக்கிறேன். தற்போது வேலை சரிவர அமையவில்லை. வாழ்க்கையில் எல்லாமே பயமாகவும் குழப்பமாகவும் உள்ளது. மிகவும் வேதனையுடன் வாழ்ந்துவரும் என் நிலை மாற வழி கூறுங்கள்.
 - சக்தி, திருப்பூர்.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. உங்கள் ஜாதகத்தில் ஜென்மலக்னத்தில் அமர்ந்துள்ள கேது எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கையற்ற தன்மையைத் தந்திருக்கிறது. லக்னாதிபதி சனியின் நிலை பலமாக உள்ளதால் நீங்கள் எதைப்பற்றியும் நினைத்து பயம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதை எண்ணி கவலைகொள்ளாமல் உங்கள் மனதிற்கு சரியென்று படுவதை செய்துவாருங்கள். 27.02.2021 முதல் உங்களுக்கு நல்ல நேரம் என்பது துவங்குகிறது. அடுத்தவர்களிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழிலை அமைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்பதை மனதில் நிலை நிறுத்துங்கள். பெயரில் உள்ள சக்தி மனதிலும் நிலைத்திருக்க செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையம்மனை வழிபட்டு வாருங்கள். அம்மனின் பாதங்களில் வைத்து வழிபட்ட எலுமிச்சம்பழத்தை நறுக்கி சாறுபிழிந்து அருந்துங்கள். உடலிலும் மனதிலும் சக்தி பெருகுவதோடு வளமான வாழ்வினையும் காண்பீர்கள்.

?எனது வீட்டின் முன்பக்கம் வாடகைக்கு விட்டு 12, 13 வருடங்களாக வாடகை வரவில்லை. சொல்லிப் பார்த்தும் கேட்டுப் பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. “சாமி நீ இருந்தால் பார்த்துக்கொள்” என்று விட்டுவிட்டேன். சாமியிடம் என்ன கேட்க வேண்டும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- ராமசாமி, காரைக்குடி.

ரேவதி நட்சத்திரம், மீனராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன், குரு ஆகிய கிரகங்களின் இணைவு பிரச்னையைத் தந்திருக்கிறது. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின்படி நீங்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கலாம். காவல்துறையில் புகார் அளிப்பதோடு நீதிமன்றத்தின் துணையையும் நாடலாம். நீங்கள் நேரடியாகச் சென்று பேசுவதைவிட உங்கள் பிள்ளைகள் சென்று பேசினால் பலன் கிட்டும். லக்னத்தில் இருக்கும் செவ்வாய் உங்கள் சட்டபூர்வமான முயற்சிக்குத் துணையிருப்பார். நீங்கள் தற்போது முயற்சி எடுத்தால்தான் 10.10.2021ற்கு மேல் பலனைக் காண இயலும். தாமதிக்காமல் உடனடியாக காவல்துறையின் உதவியுடன் சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். தயங்கினால் இழப்பு உண்டாவதைத் தடுக்க இயலாமல் போய்விடும். வீட்டினில் சதுஷ்ஷஷ்டி பைரவர் பூஜை செய்வதோடு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு பூசணிக்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். இறைவனிடம் வேண்டும்பொழுது நமக்கு எது நல்லதோ அது நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்தால் போதுமானது.

?நான் கடந்த 15 வருடங்களாக வட்டி கட்டி வருகிறேன். நன்றாக சம்பாதித்தும் வட்டி கட்டவே எனது வருமானத்தில் 80% செலவாகிறது. சேமிப்பு என்பதே இல்லை. இந்த நிலை எப்போது மாறும்?
எப்போது சொந்தவீடு கட்ட முடியும்? எனது அப்பா வழி பாகப்பிரிவினை எப்போது முடியும்? இந்தப் பிரச்னை தீர ஒரு நல்ல வழி காண்பியுங்கள்.
- மனோகரன், துறையூர்.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் கடன் பிரச்னையைத் தரும் ஆறாம் இடம் வலுப்பெற்றுள்ளது. அதோடு லக்னாதிபதி குருவும் வக்ரம் பெற்றுள்ளதால் மிகவும் சிரமத்தினை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஜாதக பலனின்படி உடனடித் தீர்வு என்பதை காண இயலாது. அப்பா வழியில் பாகப்பிரினையின் மூலமாக வரவேண்டியவை கூட உடனடியாக வரும் வாய்ப்பு இல்லை. 2025ம் ஆண்டின் இறுதியில் பாகப்பிரிவினை மூலமாக ஆதாயம் காணும் அம்சம் உண்டு. சொந்த வீடு என்பது உங்கள் 60வது வயதில் அமையும். அதையும் மனைவியின் பெயரில் வாங்கினால் மட்டுமே சொத்து நிலைத்திருக்கும். தினந்தோறும் பூஜையறையில் லட்சுமி நரசிம்மர் படத்திற்கு முன்னால் நெய் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஆறுமுறை சொல்லி பிரார்த்தனை செய்து வாருங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பானகம் நைவேத்யம் செய்து விநியோகித்து வருவதும் நல்லது. 01.03.2022 முதல் கடன் பிரச்னையின் தீவிரம் குறையத் தொடங்கும்.

“லக்ஷ்ம்யா ஆலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.”

?15 வயது ஆகும் என் மகன் எட்டு மாதங்களுக்குள் பிறந்துவிட்டமையால் பிறக்கும் பொழுதே நடக்கும் சக்தியை இழந்துவிட்டான். 4 வயதிற்குள் ஃபிட்ஸ் வந்தபோது பேசும் சக்தியையும் இழந்து விட்டான். எனது மகன் பேசவும் நடக்கவும் வேண்டும். உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
 - முரளிகிருஷ்ணன், சென்னை.

பூரம் நட்சத்திரம், சிம்மராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. பேசவும் நடக்கவும் இயலாமல் இருக்கும் 15 வயது மகனைப் பார்த்து வரும் உங்கள் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவரது ஜாதகத்தில் ஆரோக்யத்தைக் குறிக்கும் ஆறாம் வீட்டில் லக்னாதிபதி சனி அமர்ந்திருப்பது ஆரோக்யத்தில் குறைபாட்டினைத் தருகிறது. அத்துடன் ஆறாம் வீட்டின் அதிபதி புதன் மூன்றில் ராகுவுடன் இணைந்திருப்பதால் நரம்பு மண்டலம் என்பது பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மேலாக பூர்வ புண்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டில் வக்ரம் பெற்ற குருவுடன் கேது இணைந்திருப்பது கர்மவினையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதுவே பித்ரு ஸ்தானமும் ஆவதால் நமது கர்மவினையை கண்டிப்பாக அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற குழந்தைகள் இறைவனின் ஸ்வரூபம். அவர்களுக்குச் செய்து வரும் தொண்டு இறைவனுக்கே செய்யும் தொண்டு ஆகும். அவர்களை பேணிக் காப்பதன் மூலமாக நமது கர்மவினைக்கான விமோசனத்தைத் தேடுவதோடு புண்ணியத்தையும் பெற இயலும். புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று மகனின் பெயரில் அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். தினமும் இரண்டு துளசி இலைகளை சிறிதளவு நீரினில் கசக்கிப்போட்டு பிள்ளையை பருகச் செய்யுங்கள். உங்கள் மகனின் ஜாதக பலனின்படி தற்போது நடந்து வரும் சந்திர தசையின் முடிவில் அதாவது அவருடைய 20வது வயதில் தீர்வு கிடைக்கக் காண்பீர்கள்.

?நல்ல வசதியுடன் வாழ்ந்து தாயாரின் மருத்துவ செலவுகளாலும் அதனால் ஏற்பட்ட கடன் சுமைகளுக்கு வட்டியாலும் சொந்த வீட்டை விற்பனை செய்து வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தாயாரும் மறைந்து ஒன்றரை வருடமாகிறது. மீண்டும் சொந்தமாக வீடு அமையப்பெற்று வளமாக வாழ பரிகாரம் கூறுங்கள்.
- சிவசுப்ரமணியன், போளூர்.

மகம் நட்சத்திரம், சிம்மராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. தாயாரின் மருத்துவச் செலவுகளால் உண்டான கடன் பிரச்னையின் காரணமாக சொந்த வீட்டை விற்க வேண்டிய சூழல் உண்டானதாக குறிப்பிட்டுள்ளீர்கள். தாயாருக்கு செய்த சேவை என்பது வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் ஃபிக்சட் டெபாசிட் போன்றது. உரிய நேரத்தில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு திருப்பி கிடைக்கும். கவலை வேண்டாம். உங்களுடைய ஜாதக பலனின்படி வருகின்ற 04.10.2021ற்கு மேல் சொந்தமாக வீடு கட்டும் காலம் துவங்குகிறது. அது முதல் அடுத்த மூன்று ஆண்டு காலம் நேரம் நீடிப்பதால் அதற்குள் சொந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து விடுவீர்கள். சொந்த வீடு பாக்கியத்தைத் தரும் நான்காம் வீட்டின் அதிபதி சனி எட்டில் வக்ர கதியில் அமர்ந்திருப்பது சற்று சிரமத்தைத் தந்தாலும் உரிய நேரத்தில் சொத்து அமைந்துவிடும். மனை வாங்கி கட்டுவதை விட கட்டிய வீடாகவே அமைந்துவிடும். முக்கியமாக மனைவியின் பெயரையும் பத்திரத்தில் சேர்ப்பது அவசியம். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள படைவீடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை நாளில் சென்று வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சொந்த வீடு அமைந்தவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பட்டுப்புடவை சாற்றுவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். அம்மனின் அருளோடு வளமாக வாழ்வீர்கள்.

Tags :
× RELATED முப்படை தளபதிகளிடம் புகார் தந்தாலும்...