×

தீங்கே நண்ணாத திருநணா சங்கமேஸ்வரர்

கொங்குநாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவப்பதிகளான திருப்புக்கொளியூர், திருமுருகன்பூண்டி, திருக்கொடி மாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு), திருவெஞ்சமாக்கூடல், திருபாண்டிக் கொடுமுடி, திருக்கருவூர்த் திருவானிலை, திருநணா ஆகிய எழு கோவில்களை “கொங்கேழ் (கொங்கு+ஏழு) தலங்கள் என்றழைப்பர். இதில் திருநணா என்பது இப்போது பவானி என்றழைக்கப்படுகிறது. பார்வதித் தேவியாரின் பல திருப்பெயர்களில் பவானி என்பதும் ஒன்று.

சங்கமேஸ்வரர் ஆலயம் காவிரியாறும் பவானியாறும் கூடும் துறையில் அமைந்துள்ளது. இத்தலத்தை பல பெயர்கள் தாங்கி நிற்கின்றன. சங்கமேஸ்வரரை வழிபட்டோருக்கு எந்தவித தீங்கும் நண்ணாத தலமாதலால் நண்ணாவூர் அல்லது திருநணா என்று பெயர் வந்ததென்று ஸ்தலபுராணம் கூறுகிறது. “கேட்டார் வினைகெடுக்கும் திருநணாவே”, “செல்லாவருநெறிக்கே செல்ல அருள் புரியும் திருநணாவே” என்கிறது தேவாரம். குபேரன் வழிபட்டதால் தட்சிண அளகையென்றும், பராசர முனிவர் இவ்விடத்தில் பேறு பெற்றமையினால் பராசர ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. தவிர இலந்தை மரம் ஸ்தல விருட்சமாக இருப்பதால் தட்சிண பதரிகாச்சிரமம், பதரிவனம் என்றும், வட இந்தியாவில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆறுகள் சங்கமிப்பது போல், இங்கு காவிரி, பவானி, அமுதநதி சங்கமிப்பதால் திரிவேணி சங்கமம், தென்னாட்டு பிரயாகை என்றும், திருமுக்கூடல் என்றும், தென்கயிலை மற்றும் வக்கிரபுரம் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில்
“திருவானிகூடல்” என்ற பெயரைப் பார்க்கமுடிகிறது. வானி என்றால் பவானி என்று பொருள்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, அதில் பெருங்குன்றூர்க்கிழார் என்ற புலவர் இளஞ்சேரல் இரும்பொறை எனும் சேர மன்னனைப் பற்றிய பாடலில்,

“புனல்பாய் மகளிராட வொழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசத்தோன்றுஞ்
சாந்துவரு வானி நீரினுந்
தீந்தன் சாயலன் மன்றதானே”
 - என அரசனுடைய உடல் வானியாற்று நீரைப் போல் மென்மையும் தூய்மையும் உடையதாக இருந்தது என்று பாடுகிறார்.  

இக்கோவில் சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோடு) மங்கலகிரி (பெருமாள்மலை), வேதகிரி (ஊராட்சிக் கோட்டைமலை), பதுமகிரி (காவிரிக்கும் காயத்ரி மண்டபத்திற்கும் நடுவே உள்ள சிறுகற்குன்று) இந்த ஐந்து மலைகளுக்கும் நடுவில் அமைந்திருப்பதால் “பஞ்சகிரி மத்தியப்பிரதேசம் என்ற சிறப்புப் பெயரையும் தாங்கி நிற்கிறது. இங்குள்ள இறைவன் “சங்கமேஸ்வரர், இரு ஆறுகளுக்கும் நடுவில் கொலுவீற்றிருப்பதால் நட்டாற்றீசர் என்று அழைக்கப்படுகிறார். பெரும்பாலானவர்கள் “சங்கமேஸ்வரர்” என்றே அழைக்கின்றனர். கல்வெட்டுக்களில் “திருநண்ணா உடையார் என்று காணப்படுகிறது. “ஞானக்கண்ணகி நண்ணாவில் இருக்கும் சிவக்கொழுந்தை” என பவானி கூடற்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  வேதநாயகி, வேதவல்லி, பொன்னார் மௌலி என்று இங்குள்ள தேவி அழைக்கப்படுகிறார். பண்ணார் மொழியம்மையார் என்று அழகாகக் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலின் தீர்த்தங்கள் காவிரி, பவானி மற்றும் காவிரியில் அந்தர்வாகினியாக சங்கமிக்கும் அமுதநதி ஆகியன. கோயிலுக்கு வெளியில் காயத்ரி லிங்கக் கோயிலுக்கெதிரில் காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்  உள்ளன. காயத்ரி தீர்த்தத்தை பக்தர்கள் காயத்திரிமடு என்றழைப்பர். இதுதவிர, தேவதீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், உரோமச தீர்த்தம் என்பவைகளும் இக்கோயில் வளாகத்தில் உள்ளன. புரட்டாசி, தை, ஆடி அமாவாசையிலும், ஆடிப் பதினெட்டிலும், தமிழ் மாதம் பிறப்பு, வருஷப் பிறப்பு பொங்கல் போன்ற புண்ணிய நாட்களிலும், கிரகண நாட்களிலும் பக்தர்கள் ஏராளமாக வந்து காயத்ரி மடுவில் நீராடி இறைவனை வழிபட்டுச் செல்வர்.  அமாவாசை நாட்களில் கூடுதுறையில்  நீராடி விட்டு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.  இக்கோயிலுக்குரிய தெய்வீக மரம் இலந்தை, இரண்டு மரங்கள் கோயிலின் தென்மேற்கு மூலையில் விருட்சமாக உள்ளது. இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும்.

பவானி ஊரிலிருந்து கோயிலுக்குள் வடக்கு நோக்கி உள்ள வாசல் வழியாகத்தான் வரவேண்டும். ஐந்து நிலைகள் உள்ள கோபுரம் வாசலை மேலும் அழகுபடுத்துகிறது. வாசலுக்கு இடதுபுறம் விநாயகர் கோவிலும் வலது புறம் அனுமார் கோவிலும் வடக்கு நோக்கியிருக்கின்றன. இவைகளுக்கும் கோபுரத்திற்கும் இடையே நந்தியெம்பெருமான் வீற்றிருக்கும் நந்தி மண்டபம் உள்ளது. நந்தி தெற்கு நோக்கி உள்ளது. கோயிலுக்குள்ளே நுழைந்ததும் இருபுறமும் விநாயகரும் முத்துக்குமாரசாமியும் காட்சியளிக்கின்றனர். அடுத்து காணப்படுவது ஆதிகேசவப் பெருமாள் சந்நதி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் உபய நாட்சியார்களுடன் கிழக்கே இருக்கிறார். வலதுபக்கம் சௌந்தரவல்லித் தாயார், சந்தான கோபாலகிருஷ்ணன் சந்நதிகளும் இருக்கின்றன. இடதுபுறம் வேணுகோபாலகிருஷ்ணன் சந்நதி தெற்கு நோக்கியிருக்கின்றது.  தாயார் சந்நதியில் ஒரு தூணில் கோதண்டராமர் திருவுருவம் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. மற்றொரு தூணில் சீதாராமர் அமர்ந்த கோலம். அவர் திருவடிகளின் அருகில் அனுமன் வலது கையில் வீணையும் இடது கையில் தாளக் கட்டைகளுடன் பஜனை செய்யும் காட்சி உள்ளது. அடுத்து கல்லில் புலிக்காலும் யானை முகமும் படைத்த ஒரு உருவம் கையில் வீணையுடன் காட்சியளிக்கின்றது.

பெருமாள் கோயிலுக்குச் சற்று தெற்கே அழகிய வேலைப்பாடுடன் அமைந்த  லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கும்  சந்நதி உள்ளது. அதற்கும் தெற்காக விஸ்வநாதர் விசாலாட்சியின் கிழக்கு பார்த்த தனி சந்நதிகள் அமைந்துள்ளன. மேலும், தெற்காக ஜோதிர்லிங்கம் கோயில், இதற்கடுத்து வேதநாயகியம்பிகை சந்நதியும் உள்ளது. பண்ணார்மொழியம்மனின் அருள்கனிந்த திருமுகம் பார்க்கப் பரவசமாக உள்ளது. அம்பிகை கோயிலுக்கு தெற்கே கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் ஆறுமுகர் சந்நதியில் முருகன் மயில் மேலும், வள்ளி, தெய்வானை இருபுறம் இருக்கின்றனர்.  இதற்கு தெற்கே ஜுரஹரேசர் சந்நதி உள்ளது. மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் நடனக் கோலத்தில் காட்சியளிக்கின்றார். இவரை வழிபட்டால் தீராத நோயும் சரியாகும் என்பது ஐதீகம். இவருக்குச் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் மிளகு ரசம், அரைக்கீரை, சுண்டல் படைக்கப்படுகின்றன.

கோயிலுக்குள் தென் கடைசியில்தான் சங்கமேஸ்வரர் சந்நதி உள்ளது. கோயிலுக்கு வெளியில் தெற்கே காவிரிக்கரையில் காயத்ரிலிங்க கோயிலும், ஸஹஸ்ர லிங்கக் கோயிலும், இவைகளுக்கு மேல்புறம் அமுதலிங்கேசர் கோயிலும் உள்ளன. பெண்கள் பிரசவ வலியில் வேதனைப்பட்டால், பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் வந்து இந்த லிங்கத்தை திருப்பி வைத்து விட்டுப் போனால் பிரசவ வலி வேதனை குறையும் என்பதும், குழந்தையில்லாதவர்கள் இந்த லிங்கத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரைச் சுற்றி வந்தால் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பதும் பக்தர்களிடையே இருந்து வரும் நம்பிக்கையாகும்.  எனவே, இந்தச் சந்நதி இரவு பகல் எந்நேரமும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

பவானி சங்கமேஸ்வரர் கோயிலைப்பற்றி திருஞானசம்பந்தர் தேவாரத்தில் 11 பாடல்களையும், அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடலையும்,  செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் “பவானி கூடற்புராணம்’’ எனும் செய்யுள் நூலையும், தமிழாசிரியர் கு. குமாரசாமிப் பிள்ளை “ பவானி கூடற்புராண வசனம்” எனும் உரை நடை நூலையும் எழுதியிருக்கின்றனர். முகவூர் கந்தசாமி கவிராயர் “வேதநாயகியம்மன் பிள்ளைத் தமிழ்” என்ற நூலையும், கோவை C.K. நாராயணசாமி முதலியார் “ பவானி திருத்தல வரலாறு” என்ற ஆராய்ச்சி நூலையும் எழுதியிருக்கின்றனர்.

மற்ற கோயில்களில் இருப்பதுபோல் இக்கோயிலில் கல்வெட்டுக்கள் அதிகம் இல்லை. அம்மன் சந்நதி தூணில் உள்ள அழகிய ஒரு பெண் உருவத்தின் தலையில் தண்ணீரைக் கொட்டினால் அது சிரிப்பது போல் காட்சியளிக்கிறது, எனவே அதை சிரிக்கும் சிலை என்று சொல்கின்றனர்.வெள்ளைக்காரரின்பக்திப் பெருமைபத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வில்லியம் காரோ (William Garrow) என்ற கலெக்டர்  கோயிலின் வடக்குக் கோபுர வாயிலின் அருகே மாளிகையொன்று கட்டி அதில் வசித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் அவர் கனவில் பெண் ஒருத்தி வந்து படுத்திருந்த கலெக்டரை வெளியே செல்லுமாறு சொல்ல, அவரும் அப்படியே செய்தார். அடுத்த நிமிடம் படுக்கை அறைக்கு மேல் இருந்த மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. வேதநாயகியம்மனே தன்னைக் காப்பாற்றியதாக எண்ணி அளவுகடந்த பக்தி கொண்டு அதை வெளிப்படுத்தும் வகையில் பள்ளியறையில் ஒரு கட்டில் செய்து உபயம் செய்தார். அதில் “பவானிகூடல் சங்கமேஸ்வரர்.வேதநாயகியம்மனுக்கு வில்லியம் காரோ துரை மகனார் அளித்தது” என்று தமிழிலிலும், “W.Garrow, 1804” என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.  கலெக்டர் வசித்த கட்டிடம் தற்போது பயணிகள் விடுதியாக மாறி அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.  

இந்துக் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற காரணத்தினால் கலெக்டர் நாள்தோறும் வேதநாயகி அம்மனை தரிசிப்பதற்காக சந்நதிக்கு நேர் எதிரே மூன்று துவாரங்கள்  செய்து அதன்மூலம் அம்பிகையைத் தரிசித்து வந்தார். அந்த மூன்று துவாரங்கள் இன்றும் காணப்படுகின்றன. பக்தர்கள் சிறப்பு வாய்ந்த சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கூடுதுறையில் நீராடிவிட்டு முழுக்கோயிலையும் சுற்றி வருவது நலம்.

Tags : Thirunana Sangameshwarar ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்