
சென்னை: மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அனஸ்வரா ராஜன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ரேகா சித்திரம்’ மலையாள படம், ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.72 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தமிழில் திரிஷா நடித்த ‘ராங்கி’, ‘தக்ஸ்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கி வரும் ‘7 ஜி ரெயின்போ காலனி 2’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் புரமோஷனுக்கு இவர் வரவில்லை என்றும் படத்தை விளம்பரப்படுத்த மறுக்கிறார் என்றும் இந்த படத்தின் இயக்குனர் திபு கருணாகரன் மீடியாவிடம் குற்றச்சாட்டுகளை கூறினார். இதையடுத்து திபு கருணாகரன் மீது மலையாள நடிகர் சங்கத்தில் அனஸ்வரா ராஜன் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து தனது இன்ஸ்டா பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ‘‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சிலர் படத்துக்காக நான் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி தந்தேன். தொடர்ந்து ஆன்லைன் புரமோஷன்களிலும் ஈடுபட்டேன். படத்தின் போஸ்டர்களை எனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன். ஆனால் படத்தின் ரிலீசை திடீரென தள்ளிவைத்துவிட்டனர். இது தொடர்பாக என்னிடம் ஒரு வார்த்தை கூறவில்லை. வெகுநாட்கள் கழித்தே இது எனக்கு தெரிந்தது. இப்போது பொய் புகார்கள் கூறும் இயக்குனர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்’’ என அனஸ்வரா ராஜன் தெரிவித்துள்ளார்.

