×

மலை மேல் முளைத்த ஜோதி

நினைக்க முக்தி தரும் தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை. ஈசன் அண்ணாமலையாராகவும் அம்பிகை உண்ணாமுலையம்மன் எனும் அபீதகுஜாம்பாளாகவும் திருவருட்பாலிக்கும் திருத்தலம். ஒரு சமயம் படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளாகிய திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டது. படைப்பவன் பெரியவனா? காப்பவன் பெரியவனா என்பது தான் அது. சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக்கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால்வராக (பன்றி) அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப்பறந்து சென்றார். முடியைக்காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்றுகேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.

திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் தனி ஆலயம் அமையாதென்றும், பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிடவும், தானே முதல்வன் எனக்கு ஈடு இணை இல்லை என்பதை உலகுக்கு உணர்த்தவும் சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாதபடி ஜோதி பிழம்பாக எழுந்த மலைதான் திருவண்ணாமலை. அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.
உண்ணாமுலை அம்மன் விநாயகன், முருகன் ஆகிய குழந்தைகளுக்குத் தாய் என்றாலும் இரு குழந்தைகளுக்கும் பால் புகட்ட வில்லை. இதனால் உண்ணாத முலையைக் கொண்டவள் என்று பொருள் படும்படி இவ்வாறு அழைக்கப்படுகிறார்.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சந்நதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்குக் கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். பார்வதி ஈசனின் பாதி உடலை பெற்ற தலம்  இத்திருவண்ணாமலையாகும்.  மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.  

கார்த்திகை தீபத்தின் போது அர்த்தநாரீஸ்வரர்  திருக்கோலத்தின் ஆனந்த நடனத்தை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தரிசிக்க  முடியும். மற்ற நாட்களில் இவர் சந்நதியை விட்டு வருவதில்லை.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சந்நதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சந்நதி இருக்கிறது.  இவரது சந்நதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன் பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிராகாரத்திலுள்ள ‘‘ வைகுண்ட வாசல்’’ வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னிதலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

சு. இசக்கிமுத்து

Tags : hill ,
× RELATED சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம்