×

மகர ஜோதியாய் ஒளிரும் அய்யன்

அரக்க வம்சத்தின் மன்னன் சகன். இவனுக்கு மகனாக பிறந்தான். ஸ்ரீபத்மன். சிறுவயது முதல் அவன் மனதில் பெரும் தாக்கம் எழுந்தது. அது தமது அரக்கர் வம்சம் பல வழிகளில் திறமைகொண்டு உயர்ந்தாலும். இறுதியில் தேவர்களால் தாக்குண்டு அவர்கள் அழிக்கப்படுவதை கண்டும், கேட்டும் அறிந்த அவன் தான் எந்த தேவர்களாலும், இறைவனே வந்தாலும் தன்னை அழிக்கக்கூடாது என்ற வரத்தை நாம் பெற வேண்டும். மூவுலகையும் நாம் ஆளவேண்டும். என்றெண்ணிய ஸ்ரீ பத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான்.அவன் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவன் முன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

ஸ்ரீ பத்மன் கூறினான் “நான், யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும். எவர் கையாலும் நான் சாகக் கூடாது’’ என்று வரம் கேட்டான். சிவனும் அவன் விருப்பப்படியே வரம் அளித்தார். வரம் பெற்ற பத்மன் உண்மையிலேயே இந்த வரம் பலிக்குமா என்று கேட்டபடி சிவனார் தலையிலேயே கையை வைக்க முற்பட்டான். சிவனை அழிக்க முடியாது. இருப்பினும் தான் அழியவில்லை என்றால்  அவர் கொடுத்த வரம் பொய்யாகக் கூடும். அதனால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்துக்கொள்ள சிவன், அரளிக்காயினுள் சென்று மறைந்து கொண்டார். (நாகத்துடன் சிவன் அரளிக்காயினுள் மறைந்து கொண்டதால், நாகம் விஷத்தை அங்கு உமிழ்ந்தது. இதன் காரணமாகவே அரளிக்காய் விஷத்தன்மை கொண்டதாக அமைந்தது.)

ஸ்ரீ பத்மன், தனக்கு பயந்து சிவன் மறைந்து கொண்டிருக்கிறார் என்று கர்வம் கொண்டு அவரைத்தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தான். வல்லமை கொண்ட அரக்கன் என்பதாலே இவன் வல்லரக்கன் என்றும் அழைக்கப்பட்டான். அந்த வேளையில் மஹாவிஷ்ணு, அழகிய மோஹினி உருவமெடுத்து, ஸ்ரீ பத்மன் முன் தோன்றினார். மோஹினியின் அழகில் மயங்கிய அசுரன் ஸ்ரீபத்மன், சிவனைத் தேடுவதை விட்டு, மோஹினியை அடைய ஆவல் கொண்டான். தான் பெற்ற வரத்தைப்பற்றி மோஹினியிடம் கூறி தற்பெருமை கொண்டிருந்தான். உடனே மோஹினி “மன்னா, வரம் பெற்றால் மட்டும் பயன் தருமா, அதற்கு மந்திரத்தை கூறி நியாஸம் செய்ய வேண்டும். அப்படியா! இப்போதே செய்கிறேன் என்று கூறி கம்பீரமாக அமர்ந்து நியாஸம் செய்யத் தொடங்கினான். மந்திரத்தை கூறி நியாஸம் செய்யும்போது “சிரஸே ஸ்வாஹா’’ என்று கூறி தன் தலையில் கையை வைத்துக்கொண்டான். அடுத்த கணம் அவன் உடம்பு எரிந்து சாம்பலானது. ஸ்ரீ பத்மன் என்பது அவன் பெயர். அசுரன் வம்சத்தை சேர்ந்ததால் பத்மாசுரன் என அழைக்கப்பட்டான். அவன் பஸ்மமாக போனதால் பஸ்மாஸுரன் என்றும் அழைக்கப்படலானான்.

அசுரன் அழிந்ததை அறிந்து, சிவன் அரளிக் காயிலிருந்து வெளியே வந்தார். அப்போது அழகிய மோஹினி வடிவில் நின்ற மகாவிஷ்ணுவை கண்டார். அவள் அழகில் மயங்கி அவளை நெருங்கினார். ஓட முற்பட்ட மோஹினியின் கரம் பற்றி இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டார். ஹரிஹர சக்திகள் ஒன்றாகியதன் காரணமாக ஹரிஹரன் பிறந்தான். கழுத்தில் மணியுடன் இருந்ததால் மணிகண்டன் என அழைக்கப்படலானார். காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான். இதனிடையே ராணி கர்ப்பமுற்றாள். ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள். மந்திரியின் துர்போதனையால் பெற்ற மகன் அரசாள வேண்டும் என்கிற எண்ணத்தில் மந்திரியின் சதித் திட்டத்திற்குள்ளாகி, ராணி தீரா தலைவலி வந்ததுபோல் துடித்தாள். ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர நான் போகிறேன். என்று  பன்னிரண்டே வயதான மணிகண்டன் துணிந்து கானகம் சென்றான்.

அரக்கியை கொன்றதால் நன்றிக் கடன் செலுத்தும் பொருட்டு இந்திரனே புலியாக மாற அதன் மீதேறி மணிகண்டன் பந்தளநாட்டு அரண்மனைக்கு திரும்பினான். அதைக் கண்டு மிரண்ட ராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். மணிகண்டன் தமது அவதார நோக்கினை எடுத்துக் கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு  வேண்டினார். இதைக்கேட்டதும் ராஜசேகர மன்னன் மனம் உடைந்தார். அப்போது அஞ்ச வேண்டாம் தந்தையே! நான் சபரிமலையில் வீற்றிருப்பேன். தை மாதம் முதல் தேதி(மகரசங்கராந்தி) ஜோதியாய் எழுவேன். என்றார்.  மலையை நோக்கி மணிகண்டன் அம்பு எய்தார். அம்பு பாய்ந்து நின்ற  இடத்தில் பந்தளமன்னன், மணிகண்டனுக்கு கோயில் கட்டினார். பின்னாளில் பரசுராமர் அங்கு ஐயப்பன்  விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகியின் நினைவாக அந்த இடம்  சபரிமலை என்றழைக்கப்படுகிறது. அய்யன் பெருமாளை அம்மை ஆக்கி, ஆதி சிவனை அப்பனாக்கிய மைந்தன் மணிகண்டன் என்பதாலே அய்யப்பன் என்ற நாமத்தோடு திகழ்கிறான். ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில்  எழுவதால் அந்தஜோதி மகர ஜோதி என்றழைக்கப்படுகிறது.

- ச.சுடலைகுமார்

Tags :
× RELATED மகரம்