×

கவர்ந்திழுக்கும் காந்த மலை

கௌதம மகரிஷி அருணாசல மகாத்மியத்தையும், அருணாசல குரு நிகழ்த்தும் சூட்சுமமான அருட்திறத்தை ஆழமாக விவரிக்கத் தொடங்கினார்.  அந்த திருக்கூட்டத்தினர் கௌதம மகரிஷியின் ஆஸ்ரமத்திலிருந்து (இன்றைய பச்சையம்மன் கோயில்) அருணாசலத்தை வியப்பிற்கும் மேலாக, இனி இதை மனதால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று தோற்றுப்போய் வெறுமே வெறித்தபடி இருந்தனர். இதுதான் அந்த பிரம்ம வஸ்துவா.... சுயம் சிவமா இப்படி நெடுந்துயர்ந்திருக்கிறது. என் கண்ணிற்கு இன்னும் மலையாகவே தெரிகிறதே, பிரம்ம மயமாய் தெரியவில்லையே என்கிற தங்களின் பேரறிவு உதிக்காத அறியாமையின் ஆற்றாமையை எண்ணி வருந்தினர். ஆயினும், கடலையும் யானையையும் குழந்தையையும் பார்க்கப் பார்க்க வியப்பு பொங்குவதுபோல உணர்ந்தனர். ஏதோவொரு காந்தம் போன்றதொரு சக்தி தங்களை இந்த மலையை நோக்கி இழுப்பதுபோல உணர்ந்தனர். வெகுதூரம் போனாலும் அருணாசல மலையின் நினைப்பு இடையறாது உள்ளத்தில் கனன்று உருண்டபடி இருப்பதையும் உணர்ந்தனர். அந்த திருக்கூட்டம் மெல்ல நடக்கத் தொடங்கினர்.
 
நல்ல பக்குவியான ஒரு சாது கௌதமரையும், பார்வதி தேவியையும் பணிந்து, ‘‘நான் சகல க்ஷேத்ரங்களுக்கும் சென்று வந்தேன். சகல தீர்த்தங்களிலும் மூழ்கி எழுந்தேன். அதற்குப்பிறகு அந்த க்ஷேத்ரங்களை நான் பார்க்க வேண்டுமென்கிற ஆசை நிறைவேறிற்று. தீர்த்தத்தின் புண்ணிய பலனும் என்னை வந்தடைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி எங்கு சென்றாலும் இந்த அருணாசலம் என்னை காந்தம் போன்று ஈர்த்தபடி இருக்கிறது. மெல்ல இதனருகேயே கிடக்கலாம் போலிருக்கிறது. உலகம் என்னை மீண்டும் இழுத்து தன்னிடத்தே வாரிச் சுருட்டிக் கொள்ளுமோ என்கிற பயமும் வருகிறது. உலகியலும், மெய்மையை உணரும் தன்மையும் என்னிடத்தில் மாறிமாறி வந்து போகின்றன’’ என்று பேசும்போதே தழுதழுத்தார். பார்வதி அம்மை அந்த சாதுவை தாய் குழந்தையை பார்ப்பதுபோல் பார்த்தாள். அந்த சாதுவால் அடக்கப்பட முடியாத எழுந்தும் பதுங்கியும் ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்த நான் எனும் அகங்காரம் மெல்ல நசியத் தொடங்கியது. பார்வதிதேவியின் பார்வை சாதுவின் உள்ளுக்குள் பாய்ந்து செல்வதை அறிந்த கௌதமர் மிகவும் மகிழ்ச்சியுற்றார்.

‘‘தகுதி பார்த்தா குழந்தையை தாய் வளர்க்கிறாள்’’ என்று கௌதமர் பேசத் தொடங்கும்போதே அம்மை கௌதமர் புரிந்து கொண்டதை அறிந்து புன்னகைத்தாள். ‘‘அதுபோலவே அருணாசலம் காந்தம் போல கவர்ந்து இழுக்கிறது. காந்தத்தின் தன்மை என்ன? இரும்பை இழுத்துக் கொள்வது. பரமாத்ம சொரூபத்தின் தன்மை என்ன? ஜீவர்களை தன்னிடத்தே மீண்டும் சேர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாது தானாகவே அவர்களை மாற்றிக் கொள்ளுதலும் ஆகும். ஒன்றும் கவலைப்படாதீர்கள். மெல்ல மெல்ல நீங்கள் காந்தமான இந்த மலையை வலம் வந்தபடி இருங்கள். இரும்பை மூடியிருக்கும் துருக்கள் சிலசமயம் காந்தத்தின் கவர்தலை இடைநின்று தடுத்தலைப்போல, உலக ஆசைகள் நம்மை மூடியிருக்கின்றன. இரும்பின் துருக்களை தேய்த்துத் தேய்த்து அழிக்கும்போது அதிவேகமாகவோ காந்தத்தின் இழுப்புச் சக்தியில் இரும்பு சிக்கிக் கொள்ளும்.  ஏனெனில், அடிப்படையில் நாம் நம்மை உடம்பாக நினைத்துக் கொள்கிறோம். ஆத்ம சொரூபமே நாமாக இருந்து கொண்டு நாம் ஆத்மாவை காட்டிலும் அன்னியமாகவும், உடம்பாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நான் எத்தனை சொன்னாலும் நீங்கள் உங்களை உடம்பாகத்தான் நினைக்கப் போகிறீர்கள். ஆனால், ஞானிக்குத்தான் தெரியும் நீங்களும், பரமாத்ம வஸ்துவும் வெவ்வேறல்ல என்பதும். இரும்புத் துகள் எப்படி காந்தத்தின் மீது ஒருமுகமாகத் திரும்பிற்றோ, அதுபோலவே மனம் வெளியே உலகத்தின்கண் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திரும்பியிருக்கின்றது. இது மெல்ல குரு என்கிற அருணாசல மலையால் தேய்க்கப்படும்போது சிதறிய இரும்புகள் ஒருமுகமாக காந்தம் நோக்கி திரும்பியதுபோல மனதின் பல்வேறு விருத்திகள் சட்டென்று நம்முடைய சொரூபமான ஆத்மாவை நோக்கி உன்முகப்படுகின்றது. இரும்பின் தற்காலிக சொரூபம் மறைந்து காந்தம் என்கிற நிரந்தர சொரூபமானதுபோல, ஜீவனின் தற்காலிகமான தேகம், மனம், உலக ஆசைகள், உலகை நோக்கி இழுக்கும் விருத்திகள் அனைத்தும் அழிந்து அது என்கிற அருணாசலமாகவே நாமும் இருக்கும் நிலை சித்திக்கும்’’ என்று மகரிஷி சொல்லி நிறுத்தினார்.

‘‘நான் என்கிற இந்த உடம்பும், மனதும் என்ன ஆகின்றன’’ என்று வேறொரு வேதியர் அருகே வந்து கேட்டார். ‘‘அருணாசல மலை சிவமே என்பதில் ஐயமில்லை அல்லவா. காந்தத்தின் அனைத்து துகள்களும், மூலக்கூறுகளும், அணுக்களும் காந்தத்தை நோக்கி இருக்கும் சமயமே முக்கியமாகும். நம்முடைய புலன்களின் அனைத்து இயக்கமும் அருணாசலத்தை நோக்கியதாகவே மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நீங்கள் தனியானவர் என்றும் மற்றவை அனைத்தும் உங்களிலிருந்து அன்னியமாக உங்களை உடம்பாக அபிமானித்துக் கொண்டு தனித்தே காண்கிறீர்கள். இந்தப் பேத உணர்வானது அறுபட்டுப் போய் அபேதமான அத்வைதமான நிலை சித்திக்க வேண்டும். ஏனெனில், அதுவே நம்முடைய சொரூபமாகும். கடலோடு சேர வந்து நதியானது எங்கேயோ பிரிந்து சிறு குட்டைக்குள் வந்து சுருண்டு கொண்டு நான் இந்த குளம் என்று நினைப்பதை போன்றது இது. கடலோடு சேர்ந்துவிட்டால் கடலும் நதியும் வெவ்வேறல்ல. கடலை விடுத்து அதன் அலைகள் வெவ்வேறல்ல. அதுபோல ஆத்மாவான அருணாசலமாக நீங்கள் ஆவீர்கள். அதுவாகவே அதுவே உங்களை மாற்றும்’’ கௌதமர் உறுதியாகக் கூறினார்.

வெ. கிருஷ்ணமூர்த்தி

Tags : mountain ,
× RELATED முட்புதரில் கிடந்த மலைப்பாம்புகள்