×

மிதுன ராசி ஆண் சுதந்திரப் பறவை

சுக வாழ்வு விரும்பி

என்னோட  ராசி நல்ல  ராசி 16

முனைவர் செ. ராஜேஸ்வரி

புதனின் ராசியான மிதுன ராசியின் ஆண்கள் எதிலும் ஒட்டாத பாதரசம் [மெர்க்குரி -புதன் ] போன்றவர்கள். இவர்கள் எங்கிருந்தாலும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களை தகவமைத்து கொண்டு அமைதியாக இயல்பாக உலா வருவர். அதனால் அவர்கள் அந்தச் சூழலை ஏற்றுக் கொண்டதாக நம்பிவிடக் கூடாது. அவர்களால் கடும் பனியிலும் உச்சி வெயிலிலும் அமைதியான முகபாவத்தோடு இருக்க இயலும். உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிக்க மாட்டார்கள்.

இரட்டை மனம் படைத்த ஆண்கள்

மிதுனம் என்பதில் ஆணும் பெண்ணும் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்குப் பொதுவாக இரட்டை குணம் இருக்கும். எந்தச் சூழலிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள். அநாவசியமாக யாரையும் முகத்துக்கு நேராக கோபிக்கமாட்டார்கள் தங்களின் அதிருப்தியை வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால், மனதில் வன்மம் வைத்துவிட்டால் கருவறுத்து விடுவார்கள். இவர்களை பகைத்துக்கொள்வது புத்திசாலித்தனம் ஆகாது. சுருக்கென்று கோபித்துவிட்டு படக்கென்று மறந்து விடுவோர் மிதுனராசியினர் கிடையாது. இவர்களுக்கு யாரும் அன்னியரோ வேண்டியவரோ கிடையாது. சட்டென்று பழகி விடுவர். சரளமாக உரையாடுவார். நாத்திகமும் பேசுவர். ஆத்திகமும் பேசுவர். எந்த தலைப்பிலும் ஜோராக சான்றுகள் காட்டி பேசுவர்.

கெட்டிக்காரத்தனம்

மிதுன ராசியினர் யாரிடமும் உத்தரவாதம் கொடுக்க மாட்டார்கள். கழுத்து பிடி இருந்தாலும் எழுத்து பிடி கூடாது என்பது இவர்களுக்கு நன்றாகக் தெரியும். எழுத்துப் பூர்வமாக எந்த உத்தரவாதமும் அளிக்க மாட்டார்கள். பேசும்போது கூட தான் மாட்டிக் கொள்ளாத வகையில் கவனமாகப் பேசுவர். சத்தியம், உறுதிமொழி என்பதெல்லாம் இவரது அகராதியில் கிடையாது. வாடிக்கையாளர்களைத் தனது பேச்சில் மயக்கி விடுவர். வார்த்தை ஜாலக்காரர்கள். எழுத்து, குரல் தொடர்பான தொழில் மிதுன ராசியினர் எழுத்துத் தொடர்பான பணிகளில் ஈடுபடுவர். பத்திரிகையாளர், நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர் போன்ற பணிகள் ஏற்புடையதாக இருக்கும். வியாழன் தொடர்பிருந்தால் இவர்களின் வாக்கில் நல்ல கருத்துக்களே இடம்பெறும். மதப் பிரசங்கிகளாக இருப்பர். நட்சத்திரப் பேச்சாளராக இருப்பர். சனி தொடர்பிருந்தால் வசவுகளும் ஏச்சுப் பேச்சுகளும் இடம்பெறும். சிலர் நல்ல சங்கீத வித்வான்களாக இருப்பார். பாடகராகப் புகழ் பெறுவார். புதன் பாதிக்கப்பட்டால் திக்கு வாய் உண்டாகும்.

கணக்கில் புலி

Tiger of maths என்று சிலர் புகழ் அடைவர். கணக்கில் கெட்டிக்காரர்கள். சிலர் வங்கியில் பணி புரிவர். சிலர் ஜோதிடர்களும் ஆவர். பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கலாம். இவர்கள் பொதுவாக மணி லெண்டர், லேவாதேவி, வட்டி வசூல் செய்தல் போன்றவை  செய்வதில்லை. கணக்குப் பிள்ளை, மேனேஜர்  வேலைகள் செய்வதுண்டு.

வாக்குச் சாதுர்யம்

சிலர் நல்ல ஆசிரியர்களாக விரிவுரையாளர்களாக விளங்குவார்கள். நல்லாசிரியர் விருதும் பெறுவார். நல்ல கதை சொல்லிகள். கற்பனையும் உண்மையையும் கலந்து ‘புருடா’ விடுவதில் கெட்டிக்காரர்கள். சதுரங்க வேட்டையில் வரும் ஹீரோ ‘நட்டி’ போல பாதி உண்மையை வைத்துக்கொண்டு மீதியை கற்பனையை கலந்து மற்றவர்களை நம்ப வைத்து விடுவர். கருத்துக்கள் ஊறும் உள்ளம் இவர்கள் உள்ளம். தொலைக்காட்சியில் பேட்டி எடுப்பவர், [VJ, ANCHOR], வானொலி பண்பலைகளில் RJ என்ற பெயரில் பேசிக்கொண்டே இருப்பவர்கள் மிதுன ராசிக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு. இவர்களால் NON STOPஆக பேச
முடியும்.

பன்மொழி தேர்ச்சி, பல துறை அறிவு

புதன் ராசியினருக்கு மொழிகள் கற்பது எளிது. சிலர் பல மாநிலங்களுக்கும் சென்று பல மொழிகளில் பேசத் தெரிந்து வைத்திருப்பார். சில பல மொழிப் படங்களை பார்த்து புரிந்துகொள்வர். சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகள் கற்று தெளிவது எளிது. படிக்கும் காலத்தில் புத்தகப் புழுக்களாக இருப்பர். பல துறை அறிவு, பன்மொழி தேர்ச்சி இவர்களின் தனிப்பண்புகள் ஆகும். JACK OF ALL TRADES BUT MASTER OF NONE என்றும் சிலர் இருப்பதுண்டு. எப்படி இருந்தாலும் இவர்க்குத் தெரியாத விஷயமே உலகில் இல்லையோ என்று நம்மை நம்ப வைப்பதில் கில்லாடிகள். எப்போதும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள். பத்து பதினைந்து மாஸ்டர்ஸ் டிகிரி வாங்குவோர் பெரும்பாலும் மிதுன ராசிக்காரராக இருப்பார்.  

புதுமை நாட்டம்

இவர்கள் புதுமை விரும்பிகள்; அதிக காலம் யாரோடும் பழக மாட்டார்கள். புதிய  தொழில்நுட்பம், பண்பாடு,  பழக்க வழக்கம் இவற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். சில நிறுவனங்களுக்கு, கடைகளுக்கு தொடர்ந்து வந்து போகும் பழக்கம் வைத்திருப்பர் காரணம் அங்குள்ள விஷயங்களை நடைமுறைகளை கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வர்.  எல்லோரிடமும் அறிமுகம் செய்துகொண்டு நட்புறவு கொண்டாடுவர். மன உறுதி படைத்தவர்கள் இவர்களுக்கு மன உறுதி அதிகம் அதாவது புத்தியின் வழி நடப்பவர்கள் அதனால் எந்தக் கெட்ட பழக்கம் இருந்தாலும் அதற்கு அடிமையாகி விடுவதில்லை. கெட்ட பழக்கம் இருப்பது கூட வெளியே பிறருக்கு தெரியாமல் இருக்கும். போதைக்கு அடிமையாகும் நிலைமை இவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை.

காதல் தோல்வி கிடையாது

இவர்கள் எந்த பிரச்னையையும் அறிவுக்கண் கொண்டு ஆராய்வதால் காதல் தோல்வி பாதிப்பு இவர்களுக்கு கிடையாது. ‘சரி நடந்தது நடந்து விட்டது’ என்ற தெளிவை விரைவில் பெற்று விடுவர். அவமானம் தோல்வி வராமல் கவனமாக இருப்பார். பிரச்னை வரும் முன்பே ஒதுங்கி விடுவர். நிறுவனத்திலோ உறவிலோ நட்பிலோ நல்லது கெட்டது நடக்கப் போவதை ஆரம்பத் தில் கண்டுபிடிப்பது இவராகத்தான் இருக்கும். தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு போகாமல் மீண்டு எழுவதற்கான காரண காரியங்களை ஆராயத் தொடங்கி விடுவர்.

தோற்றப் பொலிவு

பிரகாசமான முகமும் அகலமான நெற்றியும் நீண்ட மூக்கும் உடையவர்கள். கண்கள் சற்று சிறியதாக இருக்கும். கண்களால் சிரிப்பதில் கெட்டிக்காரர்கள். சோகமாக இருப்பதை விரும்ப மாட்டார். அதனால் எப்போதும் இவர்களின் முகம் பிரகாசமாகவும் சொற்கள் தெளிவாகவும் இருக்கும். நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். எப்போதும் உதட்டிலும் கண்களிலும் கள்ளச் சிரிப்பு ஒளிந்து இருக்கும். சராசரி உயரமும் மெலிந்த தேகமும் உடையவர்கள். உணவும் உடையும்
உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவார். வேலைக்கு ஒரு உணவு என விரும்பி கேட்டு வாங்கி அல்லது தானே சமைத்து சாப்பிடுவர். இவர் நல்ல உணவுப் பிரியர் என்பது வெளியே பலருக்கும் தெரியாது. உணவில் என்ன இருக்கிறது? உடையில் என்ன இருக்கிறது? என்பதுபோல காட்டிக் கொள்வார்.

ஆனால், உணவையும் உடையையும் பார்த்துப் பார்த்து தெரிவு செய்வார். பாதரசம்போல எதிலும் எவரிடத்திலும் ஒட்டாமல் நகர்ந்துபோய் கொண்டே இருப்பார். ஆங்கிலத்தில் இந்த ராசிக்குரிய புதன் கிரகத்துக்கு பெயர் மெர்க்குரி. ஜாலியாக நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை கச்சேரி நடத்துவதில் கை தேர்ந்தவர்கள். மாற்றம் ஒன்றே மாறாதது கம்பெனி மாறிகள், கட்சி மாறிகள் பெரும்பாலும் மிதுன ராசிக்காரர்களாக இருக்கும். பழைய பஞ்சாங்கமாக இருக்க விரும்புவதில்லை. காலத்திற்கேற்ற புதிய கொள்கைகளை உடனே ஏற்றுக் கொள்வர். வருமானத்திற்குரிய வேலைகளாக பார்த்துத் தெரிவு செய்வர். லட்சியம், கொள்கை, தியாகம், தொண்டு, காதல், கத்திரிக்காய் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

வாழ்வது ஒருமுறை என்பதால் அதை  மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். நாம் வாழ்ந்து மறைந்த பின்பு நம்மை மக்கள் போற்ற வேண்டும்; நினைக்க வேண்டும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது.  காதலும் கல்யாணமும் மிதுன ராசி ஆண்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவர். அன்பு, பாசம். காதல் இவை இவர்களுக்கும் உண்டு. ஆனால் இவற்றால் இவர்களைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது. இவர்கள் நுட்பமாக நூதனமான முறையில் அன்பைப் பரிமாறுவர். அதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டும். மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படுவார் என்ற குறளுக்கு உதாரணமாக வாழ்கின்றவர். கசக்காமல் காயப்படுத்தாமல் மலரைப்போல நடத்துவதில் கருத்தாக செயல்படுவர். இவர்கள் ஓரளவு வசதியான பெண்களை அழகான பெண்களையே விரும்புவர். காதலில் ஏழ்மை, தியாகம் எல்லாம் இவர்களிடம் கிடையாது NEED BASED RELATIONSHIP என்பதில் நம்பிக்கை உள்ளவர். என்னால் உனக்கும் உன்னால் எனக்கும் என்ன நன்மை என்று கணக்குப் பார்த்து காதலிப்பர்; திருமணமும் செய்வர். பெரும்பாலும் மிதுன ராசிக்காரர்களின் மாமனார், மனைவி வசதியாக இருப்பர். பிள்ளைகள் சொகுசாக வாழ்வர். இவரும் ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையை விரும்புவார்.

பிறந்த வீடு ஏழ்மையானதாக இருந்தாலும் அங்கு பொறுமையாக இருந்து பின்பு கொஞ்சம் படித்து முன்னேறி நல்ல வேலையில் அமர்ந்ததும் பணக்கார வீட்டில் பெண் எடுத்து செல்வந்தர் வீட்டுச் சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு நடுவயதில் சமூகத்தில் உயர் அந்தஸ்தைப் பெற்று விடுவர். வாழ்க்கையை அளவாக அழகாக அனுபவிக்கப் பிறந்த புத்திசாலிகள் மிதுன ராசி ஆண்கள்.  

(தொடரும்)

Tags :
× RELATED உலகளாவிய மலை வழிபாடு