×

வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஆன்மிக அனுபவங்களை எழுதி அனுப்புங்கள். திடீரென்று ஏற்படும் பிரச்னையில் நிலைகுலைந்து போகும்போது இறையருளால் ஆச்சரியமாக அந்தப் பிரச்னைகள் சரியாகும். அது திருமணமோ, பிள்ளைப்பேறோ, கடனோ, நோயோ, வேலையின்மையோ என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் அனுபவத்தை சொல்லும்போது அது மற்றவருக்கு அந்த பிரச்னையில் இருந்து மீள்வதற்கான இறை நம்பிக்கையை கொடுக்கும். உபயோகமாக இருக்கும். கீழேயுள்ள முகவரிக்கு உங்கள் ஆன்மிக அனுபவங்களை அனுப்புங்கள். அத்துடன் உங்கள் புகைப்படத்தையும்  சேர்த்து அனுப்புங்கள்.

யானை வடிவில் வந்த அம்பிகை

தேவி பூஜை செய்து வரும் நான். அம்பிகை உபாசகர் ஒருவரிடம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வரும் ‘‘ஸம்பத்கரீ தேவியின் மந்திரத்தை உபதேசிக்குமாறும், ‘‘ஸம்பத்கரீ’’ என்றால் என்னவென்று கேட்டேன். ஸம்பத்கிரீ என்றால் யானைப்படைத்தலைவி என்று பொருள். என்று கூறினார். உடனே அவர், ‘‘ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஆலயத்திற்கு வா. உனக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்து வைக்கிறேன்’’ என்றார். ஞாயிற்றுக்கிழமை மாலை நான் வழக்கமாக செல்லும் சென்னை சைதாப் பேட்டையிலுள்ள காரணீஸிவரர் கோயிலுக்குச் சென்றேன். அங்கு ஸ்வர்ணாம்பிகை தேவிக்கு அணிவித்திருந்த புடவையை பார்த்து மெய் சிலிர்த்தேன். புடவையின் தலைப்பிலும் பார்டரிலும் அழகான யானைகள் அணிவகுத்திருந்தன! அவர் மிகவும் மகிழ்ந்து யானைப் படைத் தலைவியுடைய மந்திரத்தை உனக்கு உபதேசம் செய்ய, தேவியே அதற்குப் பூரண சம்மதம் சொல்வது போல இன்று தரிசனம் அளித்திருக்கிறாள் என்று உள்ளம் பூரிக்க சொல்லிக் கொண்டார். அந்த சமயத்தில் எனக்கு மாற்று உடை கூட இல்லாத வறுமை நிலை. தேவி மட்டுமே என் சொந்தம் என்று எண்ணி தனியாக இருந்த காலமும்கூட. தேவியின் பிரசாதமாக அந்த உபாசகர் எனக்கு தேவிக்கு அர்ச்சனை செய்து நைவேத்யம் செய்த  வாழைப்பழத்தையும் தேங்காயையும் கொடுத்தார். வீட்டிற்குச் சென்று தேவியின் படத்தின் முன்னமர்ந்தேன். திடீரென்று வாசலில் மணியோசை  கேட்டது. வாசலுக்கு ஓடினேன்.  சர்வ அலங்காரங்
களுடன் முகப்படாம் அணிந்து, ராஜ கம்பீரமாக ஒரு யானை என் வீட்டின் வாசல் முன் வந்து நின்று கொண்டிருந்தது. தேவியின் பிரசாதமாக எனக்குக் கிடைத்த வாழைப்பழத்தையும், தேங்காயையும் யானைக்குக் கொடுத்தேன். என்னை தன் துதிக்கையால் ஆசிர்வதித்து அந்த யானை சென்றது, அம்பிகையே நேரில் வந்து என்னை ஆசிர்வதித்தது போல் இருந்தது. அதே நாளில் என் திருமணத்திற்காகப் பெண் பார்த்திருந்தார்கள்! அன்று நான் பார்த்த பெண்ணையே மணந்து சகல வசதிகளுடன் இன்று நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

- ஜெ.ஹரீஸ்வர், கெருகம்பாக்கம்- சென்னை.

மழலையை காத்த மகேஸ்வரி

சென்ற ஆண்டு சில நண்பர்களுடன் காசி, பூரி தலயாத்திரை  சென்றிருந்தேன். ஒருநாள் யதேச்சையாக என் குழு தலைவரிடம் அன்னபூரணி தேவியின் பிட்சாடன திருக்கோல தரிசனம் காண ஆசை என்றேன். அன்று யாரோ உபயதாரர் அந்த திருக்காட்சி அலங்காரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்று காலை கங்கையில் நீராடும்போது இதுபோன்ற பவித்ரமான தலங்களில் ஏதேனும் யந்திரமோ அல்லது விக்ரகமோ கிடைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். மாலை ஹனுமான் காட்டில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்றோம். அவர் ஏராளமான யந்திரங்கள் வைத்து பூஜை செய்பவர். அதை என்னிடம் காட்டி அதன் பெருமைகளை சொல்லிக்கொண்டிருந்தார். கடைசியில் பகளாமுகி யந்திரத்தை என் கையில் தந்தார். ஆர்வ மிகுதியால் இது எனக்கா என அவரிடம் கேட்டேன். 300 ஆண்டுகளாக என் முன்னோர்கள் பூஜித்துவரும் யந்திரம் இது. உங்களுக்கு பார்க்கத்தான் தந்தேன் என்றார். மறுநாள் எங்கள் திட்டப்படி இரவு பூரி சென்று ஜகன்நாதரை தரிசிக்க திட்டமிட்டிருந்தோம்.  மாலை கங்கா ஆரத்தி முடிந்தவுடன் அந்த பகளாமுகி யந்திரத்தை  மீண்டும் ஒருமுறை தரிசிக்கலாம் என நினைத்து அந்த அன்பர் வீட்டிற்குச் சென்றேன். அப்போதுதான் பூஜையை முடித்த அவர் என்னைக்கண்டதும் கண்களில் நீர்வழிய நேற்று வந்த அன்பர் இப்போது வந்தால் அந்த யந்திரத்தை அவரிடம் தந்து விடுகிறேன் என நினைத்தேன். இந்தாருங்கள் என அந்த யந்திரத்தை என்னிடம் தந்துவிட்டார்.

என்னே தேவியின் பெரும் கருணை. என் மகள் பிறந்து நான்கு நாட்களே ஆகியிருந்தது. நாங்கள் ஆசைப்பட்டது போலவே பெண்ணாகப் பிறந்ததில் எங்கள் இருவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி. எங்கள் மகளுக்கு திடீரென ஃபிட்ஸ் வந்தது. அலறியடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். தாய்ப்பால் உடலில் சேர்வதில் ஒரு பிரச்னை என்றார்கள். இந்தக் குழந்தை பிழைக்கவே பிழைக்காது என்றார்கள். மருத்துவமனையில் இருந்துகொண்டே கோவை தன்வந்திரி பெருமாளிடம் ஒரு வேண்டுதல் வைத்தோம். எங்கள் குழந்தைக்கு தீர்க்காயுசு கொடு என்று மனதாரப் பிரார்த்தித்தோம். ஒரு மாதம் ஐ.சி.யூவில் இருந்த குழந்தை மெல்ல மெல்ல குணமானாள். லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இது நடக்கும் என்றார் மருத்துவர். அவளின் முதல் பிறந்த நாளன்று கோவை தன்வந்திரி கோயிலுக்குச் சென்று மிருதுயுஞ்ஜீவி ஹோமம் செய்தோம். இன்று எங்கள் மகள் மிக்க ஆரோக்கியமுடன் இருக்கிறாள். எங்களின் மனம் இறைஞ்சிய பிரார்த்தனைதான் எங்கள் மகளை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்தது என்றே நம்புகிறோம்.

- ந.யுவராணி, குழந்தை லயா - பழனி

தொழிலாளியை முதலாளியாக்கிய  சுடலை

என் பெயரு காளிராஜ் வயது.34. சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம். விவசாய குடும்பத்தில் நான்கு சகோதரர்களுடன் பிறந்தவன் நான். எனக்கு படிப்பு சொல்லும்படியா இல்லை.  சிறுவயசிலிருந்தே கஷ்டப்பட்டேன். கடுமையான உழைப்பு. இருந்தாலும் வறுமை என்னை விட்டு போகல. என்ன செய்யுறது ன்னு தெரியாம, தெரிஞ்சவங்க சொல்லதைக் கேட்டு சென்னை, கோயமுத்தூருன்னு பல இடங்களுக்கும் வேலை தேடி அலைஞ்சேன். அந்த நேரத்தில கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். ஒருவழியா நாகர்கோவிலுக்கு வந்து ஒரு சமோசா கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். அப்போதான் எனக்கு வயசான ஒரு அண்ணாச்சியோட அறிமுகம் கிடைச்சு. அவரு சொல்லித்தான் திருநெல்வேலி சீவலப்பேரி சுடலைமாடசுவாமியின் மகிமை தெரிஞ்சுது. அப்பொழுது எனக்கு ஒரு குழந்தையும் பிறந்திருந்தது.

அப்போ, ஒரு நாளு வேலைக்கு போகலைண்ணா அடுத்த நாளு சாப்பாட்டுக்கு திண்டாட்டம்தான். என்ன செய்ய என தவிச்ச நேரத்தில சீவலப்பேரி சுடலைமாடசாமி கோயிலுக்கு போனேன். மனம் உருகி வழிபட்டேன். நீயே! தஞ்சம் என நினைத்து அவரிடம் சரணாகதி அடைஞ்சேன். சேமிப்பு உயர்ந்தது. வாழ்க்கைத் தரம் மாறியது. சுடலைமாடசுவாமி அருளால் தனியாக ஒரு சமோசா கம்பெனி வைக்கும் நிலைமைக்கு உயர்ந்தேன். எல்லாம் சுடலை ஆண்டவன் அனுக்கிரஹம்தான். ஒன்பது வருசமா நான், நல்ல சாப்பாடு சாப்பிடுவதும், நல்லா இருப்பதற்கும் காரணம் அந்தச் சுடலைசாமிதான். கடின உழைப்பு தெய்வத்தின் அனுக்கிரஹத்தால் இன்று நல்ல நிலைமையில இருக்கேன். இரண்டு குழந்தைங்க, கம்பெனியில என்கிட்ட 9 பேரு வேலைபார்க்கிறாங்க, வேன், பைக், வீடுன்னு நல்லாயிருக்கேன். எல்லாத்துக்கும் காரணம் அந்த சீர்மிகு வாழ்வளிக்கும் சீவலப்பேரி சுடலைமாடசாமிதான்.

- எஸ்.காளிராஜ் - நாகர்கோவில்.

பூதத்தார் அருளால் குழந்தை பிறந்தது

என்னுடைய பெயர் கணேஷ்குமார் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் என்னும் ஊராகும். நான் பள்ளிப்பருவத்தில் (ஸ்கவுட்) எனும் இயக்கத்தில் இருந்தபோது முதன் முதலாக காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் நடைபெறும் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தேன் அப்பொழுதுதான் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் உள்ள மேலவாசல் சங்கிலிபூதத்தார் முதன் முதலில் பார்த்தேன் அங்கு நடந்த பூக்குழி கொடைவிழா படப்பு மேளதாளம் வில்லிசை கச்சேரி ஆகியவற்றின் மூலம் சங்கிலி பூதத்தார் மேல் அளவுகடந்த பக்தியும் பாசமும் என்னுள் வந்தது.

எனக்கு ஒரே ஒரு தங்கை அவளுக்கும் இறைவன் திருவருளால் நல்ல முறையில் திருமணம் நடந்தேறியது சென்னையில் வசித்து வந்த அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தபோது வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி விக்கிரமசிங்கபுரம் அழைத்து வந்தோம். வந்து 7 மாதம் ஒரு இருபது நாள் ஆனவுடன் என் தங்கையின் பனிக்குடம் ஆனது உடைந்தது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற தருணத்தில் பூதத்தார் அருளால் நல்ல முறையில் ஆண் குழந்தை பிறந்தது.

- கணேஷ்குமார் - விக்கிரமசிங்கபுரம்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்