×

சந்திராஷ்டமம் செய்யும் நன்மைகள்

சந்திராஷ்டமம் என்றால் என்ன, இதனைக் கணக்கிடுவது எப்படி, இந்த சந்திராஷ்டமம் என்ன செய்யும், இந்நாட்களில் சுப நிகழ்ச்சிகளை செய்யக்கூடாது என்கிறார்களே. இது உண்மையா என்பது குறித்த சந்தேகங்களுக்கு சற்று விரிவாகவே விளக்கத்தினைக் காண்போம்.
அஷ்டமம் என்றால் எட்டு என்று அர்த்தம். சந்திராஷ்டமம் என்றால் நமது ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார் என்பது பொருள். பொதுவாக சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் 2அரை நாட்கள் அதாவது தோராயமாக 54 மணி நேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில் ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம காலம் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமமாக இருக்கும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் என்பதால் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு ஒருமுறை இதனை ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டி இருக்கும்.

கோள்களுக்கு உரிய பணியில் சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள். நமது மன நிலையை பராமரிப்பதே சந்திரனின் பணி.  எட்டாம் இடம் என்பது அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால் எட்டாம் இடத்திற்கு சந்திரன் வருகின்ற அந்தக் குறிப்பிட்ட இரண்டரை நாட்கள் மனநிலை டென்ஷனாக இருக்கும். மனதில் குழப்பத்தினைத் தோற்றுவிக்கும் படியான நிகழ்வுகள் நம்மைச்சுற்றி நடக்கும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பதற்காக மாத ராசி பலன்களிலும், காலண்டர்களிலும் சந்திராஷ்டம நாட்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார்கள். ‘பதறாத காரியம் சிதறாது ’என்று சொல்வார்கள் அல்லவா, சந்திராஷ்டம நேரத்தில் ஒரு வித பதட்டத்தோடு செயல்படுவோம், அதனால் இறங்கிய காரியங்களில் எளிதான வெற்றி கிடைக்காது போகும், எடுத்த காரியத்தில் அற்பகாரணங்களினால் இழுபறி உண்டாகும், இதனால் டென்ஷன் மேலும் அதிகரிக்கும், உடனிருப்பவர்களிடம் எரிந்து விழுவோம் அல்லது அவர்களின் எரிச்சலுக்கும் வசவுகளுக்கும் ஆளாவோம் போன்றவை சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பொதுவான பலன்கள். மனித உடற்கூறு இயலைப் பொறுத்தவரை சந்திரன் நம் உடலில் ஓடுகின்ற ரத்தத்தைக் குறிக்கிறார்.
சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ரத்தம் சூடேறும். டென்ஷன் அதிகமாகும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதுபோன்ற காரணங்களால் தான் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்ற சுப காரியங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள். வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிக்குள் அடியெடுத்து வைக்கும்போது எந்த விதமான பதட்டமும் இருக்கக்கூடாது என்பதற்காக சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள். அதி முக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்யவிருக்கும் மருத்துவர்களும், செய்யப்பட உள்ள நோயாளிகளும் தங்கள் சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து விடுவார்கள். மருத்துவர் அன்றைய தினத்தில் தனக்கு உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ஏதேனும் தவறு செய்து விடலாம். நோயாளிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக அறுவை சிகிச்சை தோல்வியில் முடியலாம் என்பதே இந்நாட்களை தவிர்ப்பதற்கான காரணம்.

சந்திராஷ்டம நாட்கள் டென்ஷனை உண்டாக்கும் என்பது சரி, அதற்காக அந்த நாட்களில் பணி ஏதும் செய்யாமல் முடங்கிக் கிடக்க முடியுமா, இதற்கு பரிகாரம் ஏதும் கிடையாதா என்றால் நிச்சயமாக பரிகாரம் உண்டு. சந்திரனுக்குரிய திரவம் ஆன பால் குடித்துவிட்டு வேலையைத் துவக்கலாம். குளிர்ச்சியான பாதாம் பால் போன்றவையும் பதட்டத்தினைக் குறைக்கும். சந்திராஷ்டம நாட்களை ஜோதிடர்கள் முன்னதாகவே குறித்துக் கொடுப்பது கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே அன்றி பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல.

சந்திராஷ்டமம் செய்யும் நன்மைகள்:

சந்திராஷ்டம நாட்கள் கெடுதல் பலன்களை மட்டும்தான் உண்டாக்கும் என்பது முற்றிலும் தவறு. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு சில நன்மைகளையும் சந்திராஷ்டம நாட்களில் எதிர் பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசியினருக்கும் சந்திராஷ்டமம் எந்தெந்தவிதமான நற்பலன்களை உண்டாக்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: சந்திராஷ்டம நாட்களில் மேஷ ராசிக்காரர்களைப் பொறுத்தவரை சந்திரன் எட்டில் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும், அந்நாட்களில் மறைமுக எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கடன்காரர்களின் தொல்லை இருக்காது.   கூட்டாக செய்துவரும் தொழில்களில் லாபம் காணலாம். லாபத்தினைத் தரும் தொலைதூர பிரயாணங்கள் செய்ய நேரிடும்.

ரிஷபம்: பிள்ளைகளின் வாழ்வியல் நிலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். தொழில் முறையில் கடுமையான அலைச்சலை சந்தித்தாலும் அதற்கான லாபம் நிச்சயமாகக் கிடைக்கும்.

மிதுனம்: பொதுவாக சந்திராஷ்டம நாட்களில் மிதுன ராசிக்காரர்கள் அதிக சிரமத்தினை சந்திப்பார்கள் என்றாலும் அடுத்தவர்களுக்கு உதவி
செய்து புகழ்பெறுவர். கடும் பொருளிழப்பினை சந்தித்தாலும், உறவினர்கள்மற்றும் நண்பர்களுக்கு தானம் செய்ய நேரிடும் என்பதால் மற்றவர்கள் மத்தியில் மிகுந்த நற்பெயர் கிடைக்கும். கௌரவம் உயரும். பிள்ளைகளின் உத்தியோகத்திற்கு அன்றைய தினம் செய்யும் உதவி நல்லதொரு வெற்றியைத் தரும்.

கடகம்: வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். சொந்த பணிகளை விட வாழ்க்கைத் துணையின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியிருக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். கடன் சுமை குறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். தொழில் ரீதியாக அலைச்சல் அதிகமானாலும் நல்ல லாபத்தினைக் காண்பர்.

சிம்மம்: சந்திராஷ்டமத்தினால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றபடி அதிக நன்மையைக் காண்பர். 12ம் இடத்திற்குடையவனான சந்திரன் எட்டாம் இடத்தில் அமர்வதால் அநாவசிய விரயங்களும், பொருளிழப்புகளும் தவிர்க்கப்படும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். வீண் அலைச்சல் குறையும். ஆன்மிகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். மூத்த  சகோதரருக்கு செய்யும் உதவி குறிப்பிடத்தகுந்த நன்மையை உண்டாக்கும்.

கன்னி: லாபத்தில் நஷ்டத்தினை சந்திக்க நேர்ந்தாலும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை கொள்ளத்தக்க சம்பவங்கள் நிகழும். போட்டியாளர்களின் தொல்லைகள் குறையும். வாழ்க்கைத் துணையின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்து நற்பெயர் அடைவர்.

துலாம்: துலாம் ராசியைப் பொறுத்தவரை சந்திராஷ்டம நாட்களில் சந்திரன் உச்சம் பெற்றிருப்பார். அன்றைய தினம் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர மற்றவகையில் மிகுந்த நன்மை காண்பர். தொழில் முறையில் சிறிது சிரமத்தினை சந்திக்க நேர்ந்தாலும் செய்யும் தொழிலில் நல்ல தன லாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் இருந்துவரும் சேமிப்புகள் உயரும். வண்டி, வாகனங்கள் மற்றும் பிரயாணங்களில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்: சந்திராஷ்டம நாட்களில் வீண் பழிகளை சுமக்க நேரிடுவதால் உண்டாகும் மன உளைச்சலைத் தவிர்த்து நோக்கினால் போட்டியாளர்கள் வகுக்கும் திட்டங்களைப் புரிந்து கொள்வர். அன்றைய தினத்தில் செயல்பட முடியாது போனாலும் வெற்றிக்காண வழிகளை அறிந்து கொள்ள முடியும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயரும். கடன் சுமைகள் குறையும்.

தனுசு: செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் உண்டாகுமே தவிர வேறு பாதிப்புகள் ஏதும் நேராது. கூட்டுத் தொழிலில் நல்ல தனலாபம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் பெயரில் சொத்துக்கள் சேரும். தொழில் முறையில் சிறப்பான தன லாபத்தினை காண்பர். நலிந்தவர்களுக்கு உதவி செய்து நற்பெயரை அடைவர்.

மகரம்: வாழ்க்கைத் துணையின் பெயரில் சேமிப்புகள் உயரும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கூட்டுத் தொழில் நன்மை தரும். எதிரிகளால் உண்டாகும் போட்டினைச் சமாளித்து வெற்றி காணும் திறன் உண்டாகும். ஆன்மிக கருத்துக்கள் பற்றிய சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும்.

கும்பம்: சந்திராஷ்டமத்தினால் அதிக நன்மை அடைபவர்களில் கும்ப ராசிக்காரர்கள் முக்கியமானவர்கள். ஆறாம் இடத்திற்குரியவர் எட்டில்
அமர்வதால் ஆறாம் இடம் வலுவிழந்து போகும். எதிரிகள் வலுவிழப்பார்கள். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமான முடிவினைத் தரும். கடன் சுமை குறையும். நோய்களின் தாக்கம் குறையும். தொழில் முறையில் அதிக அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் குறிப்பிடத் தகுந்த தன லாபம் உண்டாகும்.

மீனம்: பிள்ளைகளின் பெயரில் இருந்துவரும் சேமிப்புகள் உயரும். வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் செயல் வடிவம் பெறும். கூட்டு முயற்சிகள் வெற்றியைப் பெற்றுத் தரும். குடியிருக்கும் வீட்டினில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வர். கடன் சுமை குறையும். வாழ்க்கைத் துணையின் பணியில் இவர்கள் செய்யும் உதவிகள் நல்ல தன லாபத்தினைப் பெற்றுத் தரும். தொழில் முறையில் இருந்து வந்த சந்தேகங்கள் விலகும்.

இப்படி சந்திராஷ்டம நாட்களில் 12 ராசிக்காரர்கள் பல நன்மைகளும் நடப்பதை அனுபவபூர்வமாகக் காண இயலும்.  மன உளைச்சலைத் தரும் நாட்கள் அவை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உங்கள் செயல் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் குறித்து எந்த விதத்திலும் பயம் கொள்ளத் தேவையில்லை.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி