×

இருளை அகற்றும் குரு விளக்கு

குரு பூர்ணிமா

நமக்கு கற்றுக் கொடுத்தோர் அனைவரையுமே இந்த குரு பூர்ணிமா நாளில் நினைத்து வணங்குதல் என்பது நமது இந்திய மரபில் தொன்று தொட்டு வருகின்ற ஒன்றாகும். அ முதல் அத்வைதம் வரை போதித்த அதாவது பள்ளியில் கல்வி போதித்த ஆசிரியர் முதல் தெய்வத்தோடு ஒன்றுதலான அத்வைதம் வரை போதித்த அனைத்து மகான்கள் வரை  நினைத்து வணங்க வேண்டிய திருநாளே குரு பூர்ணிமா ஆகும். இன்னும் கூறப்போனால் வேதங்களை வகுத்த வியாசரில் தொடங்கி இந்திய தேசத்திலுள்ள அனைத்து மகான்களையும் நினைத்து வணங்குவோம். மேலும், குரு பகவான், தட்சிணாமூர்த்தி என்று நேரடியாக நாம் கோயில்களில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி குறித்து சிந்திப்பதும் குரு பூர்ணிமாவின் நிறைவான விஷயமாகும். எதை அறிந்த பின்னர் வேறொன்றையும் அறிய வேண்டியதில்லையோ அந்தப் பேரறிவே தட்சிணாமூர்த்தம்.

இந்த குருவான தட்சிணாமூர்த்தி குறித்து வாக்கால் கூறி விளக்க முடியாது என்பதை ஒப்புக் கொண்டே கூறுகிறேன். தட்சிணாமூர்த்தி எனும் திருவுருவத்தை உற்று நோக்குங்கள். உலகில் வேறெங்கும் காணமுடியாத அதிசயத்தை இந்த மூர்த்தத்திற்குள் காண்பீர்கள். குருவோ வயதில் சிறியவர். சீடர்களோ முதியவர்கள். உபதேசம் செய்பவரோ வாய் திறந்து ஒரு சொல் கூட உதிர்க்காமல் மௌனியாகவே இருந்து உபதேசிக்கிறார். அவர்களும் அந்த உபதேசத்தை புரிந்து கொண்டு அந்த நிலையிலேயே கிடக்கின்றனர். உபதேசம் சுட்டும் லட்சியத்தில் சென்று அமிழ்கின்றனர். ஞானத்தின் வரம்பு மோனம் என்பதுபோலவும், மௌனத்தாலேயே பிரம்மம் பிரகடனம் செய்யப்படுகிறது என்பதும் அந்த சந்நதியில் அவர்களுக்கு உணர்த்தப்பட்டன’’‘‘. ஒரு சொல் கூட கூறாது உபதேசம் எப்படி சாத்தியம்.’’

‘‘அது மனதைக் கொண்டு வாக்கை உபயோகப்படுத்தி கூறும் உபதேசமல்ல. அது இருதயத்தினால் இருதயத்திற்கு கூறாது தானாகச் சென்றடையும் மௌன பாய்ச்சல். இங்கு முன்பு வாக்கைப்பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம். சப்த மண்டலத்திற்கு நான்கு பாதங்கள் உள்ளன. அவை முறையே பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரீ என்று நான்கு வகைப்படும். இதில் உலகில் உள்ள பொருட்களையும், மனதால் கிரகிக்கப்பட்ட விஷயங்களையும் கூற வேண்டுமெனில் வைகரீ என்கிற நாம் பேசும் வாக்கை உபயோகப்படுத்துகிறோம். இதுவே உலகில் போதுமானதாகும். ஆனால், ஆத்ம சொரூபத்திலேயே சகஜ சமாதியிலுள்ள ஞானியானவன் இந்த சப்த அல்லது வாக்கு மண்டலத்தின் நான்கு பாதங்களையும் தொடுகின்றான். ஞானியின் மௌனத்திலேயே பரா என்கிற முதல் சப்த மண்டலம் அநாயாசமாக செயல்பட்டு, பக்குவமுற்ற சீடர்களை மௌனத்தினாலேயே பிரம்மத்தை உணர்த்தி அதிலேயே அமர்ந்திருக்க செய்யும். ஆனாலும், ஞானியின் பேச்சு மட்டுமல்ல, மௌனமே இடையறாத உபதேசமாகும். அந்த மௌனம் என்பதே ‘நான் அது’ என்கிற பிரம்மமாக இருத்தலுமாகும். அந்த மௌனமே சதா சிவமாக இருக்கும் நிலையும் ஆகும். இதுவே மிருத்யு என்கிற எமனை அருகே வராமலும் தடுக்கும். இல்லையில்லை. விரட்டியே அடித்துவிடும்’’

‘‘தட்சிணாமூர்த்தியைப்பற்றி பேசும்போது எமனைப்பற்றிச் சொல்லும் காரணத்தை அறிந்து கொள்ளலாமா’’‘‘தட்சிணாமூர்த்தி எந்த திசையை நோக்கி அமர்ந்திருக்கிறார்’’‘‘தென்முகமாக...’’‘‘சரிதான். அவர் தென்முகக் கடவுள் என்பதைத் தாண்டிய வேறொரு காரணமும் உண்டு. தென்முகம் என்பது எமனின் திசையை குறிக்கிறது. எமன் இறப்பை குறிப்பவனாவான். எமன் எப்போதுமே ஸ்தூலமாக எது தன்னை உணருகிறதோ, எது மாறிக் கொண்டிருக்கிறதோ அதை சதா மாற்றிக் கொண்டே இருக்கும் பணியைச் செய்கிறான். ஒரு பாத்திரத்திலிருர்ந்து மற்றொரு பாத்திரத்திற்கு நீரை மாற்றுவதுபோல உருவத்தை மாற்றிக் கொடுத்து பழையதை அழிக்கிறான். ஆனால், தட்சிணாமூர்த்தி இறப்பை சுட்டும் திசை நோக்கி தான் இருப்பதால் இறப்பு திசை நோக்கிச் செல்பவரை அகமுகமாக தன்பால் ஈர்த்து அல்லது திரும்பச் செய்து இறப்பு மற்றும் அதனால் பிறப்பை விட்டு அகலச் செய்கிறார். இங்கு ஈர்ப்பு என்பது தன்னுடைய இருப்பினாலேயே கவர்ந்திழுக்கும் தன்மையைக் குறிப்பதாகும். மேலும், இறந்து போவது என்பதே உடல் இறப்பைத் தாண்டி நான் எனும் அகந்தையின் இறப்பைத்தான் உண்மையான பொருளாகக் கொள்ள வேண்டும்.

இறந்து பிறக்க வேண்டும். அப்போதுதான் இறப்பது நாமல்ல என்று தெரியும். இறப்பனுபவத்தின் ஊடாகவே இறப்பு என ஒன்று இல்லை என்பதை ஒரு ஜீவன் உணர வேண்டும். அப்போதுதான் எதுவும் இறக்கவில்லை வெறுமே உடல் மாறுகிறதே தவிர, நான் எனும் உணர்வு எப்போதும் தொடர்ந்து இருப்பதை அறிய இயலும். எந்த அகந்தையானது தேவையில்லாது உடலின் மீது நான் இது என்று அபிமானிக்கிறது என்று தெரிய வரும். தட்சிணாமூர்த்தியின் சொரூபத்தை சுய அனுபூதியில் அறிந்தோர், தானும் ஆத்ம சொரூபமாக நிற்போர்கள் எமனை தூரவே வைத்திருக்கிறார்கள். எமனின் மீது ஏறி அதைக் கடந்து அப்பால் செல்கிறார்கள். இனி ஒருமுறை அவர்களை எமன் தீண்ட மாட்டான். மிருத்யு எனும் எம வாதை நீங்கி, அமிருத்யு என்கிற மரணமிலா நிலையை அடைவர். அப்போதுதான் உபநிஷதம் கூறும் அம்ருதஸ்ய புத்ரஹா... எனும் வாக்கியத்திற்கு அர்த்தம் புரியும். எனவே, எமனுக்கு எதிராக எமனை எதிரிட்டு ஓடச் செய்யும் ஒரே மூர்த்தம் தட்சிணாமூர்த்தமே ஆகும். தட்சிணாமூர்த்தி அல்ல. அது தட்சிண அமூர்த்தி.

மூர்த்தம் என்றால் உருவத்திற்குள் அடக்கம். ஆனால், இங்கு குருவான தட்சிண அமூர்த்தி மௌனத்தினால் உருவத்தை கடந்த ஆனந்த, ஆத்ம, நித்திய சொரூபமான ஞானமாதலால், அது தட்சிண அமூர்த்தமாகும். தட்சிண என்றால் ஞானம் என்பது பொருள். ஜீவனும், பிரம்மமும் கலந்து அகண்டமாக விளங்கும் ஞான வஸ்துவையே தட்சிணம் என்றழைக்கிறோம். அதனாலேயே ஈசனுக்கு தட்சிண வக்த்ரன் எனும் திருநாமமும் உண்டு. ஞானமே உருவான முகத்தை உடையவன் என்பது பொருள். ஒருமுறை அந்த ஞானம் பிரகாசித்து விட்டால் மீண்டும் இருளுக்கு வேலையில்லை.இந்த நிலை ஏற்படும் வரையிலும் சீடன் தன்னை சரீரமாகவும், ஏன் அசரீரம் எனப்படும் உடலற்ற நிலை கொண்டவனாகவும் உணரக் கூடும். ஆனால், தட்சிணாமூர்த்தியின் மௌனப் பிரவாகமோ சரீர, அசரீர எல்லாவற்றையும் கபளீகரம் செய்து நிச்சரீரம் எனும் பெரும் நிலையில் ஞானமே சரீரமாக விளங்குகிறது.

Tags :
× RELATED நீலகிரியில் தொடர் மழை எதிரொலி 300 கிராமங்கள் இருளில் மூழ்கின