×

ஆண்டவரிடம் உரையாடுங்கள்

இயேசு கிறிஸ்துவை நாம் விரும்ப, நாம் பல காரியங்களை அறிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. மாறாக நாம் அவரை உருக்கமாக நேசித்தால் போதும். அதாவது நம் நெருங்கிய உறவோடு உரையாடுவது போல நாம் இயேசு கிறிஸ்துவிடம் அப்பா! தந்தையே! என அன்போடும், உரிமையோடும் உரையாட வேண்டும்.கெத்செமனே தோட்டத்திற்கு இயேசு கிறிஸ்து செல்வதற்கு முன் தம் சீடர்களோடு உணவருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு கிறிஸ்து அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, அதைப்பிட்டு சீடருக்கு கொடுத்து ‘‘இதை பெற்று உண்ணுங்கள், இது எனது உடல்’’ என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்து தந்தை கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ‘‘இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள், ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் ரத்தம். பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் ரத்தம்’’ என்று கூறினார்.(மத்தேயு 26 : 26-28)

இதை தான் கிறிஸ்தவர்களாகிய நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்டாக்கிய உடன்படிக்கையின் சின்னமாய் ஆலயத்திலே அவரது உடலையும், ரத்தத்தையும் நாம் நற்கருணையை அப்பத்தின் வடிவாய் உட்கொள்கின்றோம். அப்பத்தை நாம் உட்கொள்ளும்போது நம் உடலும், உள்ளமும் ஆண்டவரையே ஏற்றுக்கொள்கின்றது. ஆண்டவர் நம் உடலில் வரும் போது நம் உடலும், உள்ளமும் எவ்வளவு தூய்மையாக இருக்க வேண்டும் என்பதனைச் சிந்திப்போம்.நம்முள் குடிக்கொண்டிருக்கும் நம் இயேசு கிறிஸ்துவிடம் மற்றவர்களுக்காக மன்றாடிவேண்டுவோம். தன்நலம் மறந்து பிறர் நலம் நாடுபவர் மீது அவருக்கு அன்பு அதிகமாய் உள்ளது. மற்றவர்களுக்காய் நாம் ஜெபிக்கும்போது அவர்களுடைய பெயர்களை சொல்லி ஜெபிப்போம். யாருக்கு என்ன தேவை என விரும்புகின்றோமோ? எந்த நோயாளியை குணப்படுத்த வேண்டும் என விரும்புகின்றோமோ? எந்த பாவியை மனம் திரும்ப வேண்டும் என விரும்புகின்றோமோ? யாருடைய வருத்தம் நீங்கி, சமாதானம் அடைய வேண்டுமென விரும்புகின்றோமோ? அவர்களுக்காக ஆண்டவரிடத்திலே பக்தியோடு ஜெபிப்போம். இதயப் பற்றுதலோடு எழும் ஜெபங்களைக் கட்டாயம் ஆண்டவர் கேட்டருளுவார்.

நாமும் நமது வாழ்வைக் கெடுக்கக்கூடிய இச்சைகள், அகந்தை, பொருளாசை, கோழைத்தனம், சோம்பல், பொறாமை முதலிய துர்க்குணங்களை வெல்ல, ஆண்டவர் நம்மிடத்திலே வந்து உதவ வேண்டுமென்று மன்றாடுவோம். நல்ல புத்தி, சுய அறிவு, நல்ல  நினைவுகள், நேர்மை, உடல் நலம் போன்றவற்றை நமக்கு அருள வேண்டுவோம். நமது உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆண்டவராகிய இயேது கிறிஸ்து தான்  அதிபதி! அவரது விருப்பப்படி அவற்றையெல்லாம் படிப்படியாக. நமக்கு தந்தருள்வார். நம் முயற்சிகளுக்காக உதவும் நபர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்.
அடக்க ஒடுக்கம், கீழ்ப்படிதல், அமைதி, பிறரன்பு போன்ற நல்ல பண்புகளை வளர்ப்போம், அமைதியாகச் செல்வோம், நம் கடமைகளை செவ்வனச் செய்வோம். புதுப்பிக்கும் மனதை வழங்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் கேட்போம்.

- ஜெரால்டின் ஜெனிபர்

Tags : Lord ,
× RELATED உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள...