×

நேரில் வந்த தெய்வங்கள்

 வேடன் கண்ணப்பன், காட்டில் தனியாகக் கிடந்த சிவலிங்கமூர்த்தியை பக்தியால் ஆராதித்தான். அவனை சோதிக்க எண்ணிய பரமேஸ்வரன் தன் ஒரு கண்ணில் இருந்து ரத்தத்தைப் பெருக்க அதைக் கண்டு திகைத்த கண்ணப்பன், தன் கண்ணைப் பிடுங்கி அந்தக் கண்ணில் வைத்து, பெருகும் குருதியை நிறுத்தினான். ஈசனின் மறு கண்ணிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தோட தன்னுடைய மறு கண்ணைப் பெயர்க்க கண்ணப்பன் முயன்றபோது ஈசன் அவன் முன் பிரத்யட்சமாகி அருளினார். அன்றுமுதல் கண்ணப்ப நாயனார் ஆனார்.

 சீர்காழி திருக்குளத்தின் கரையில் தன் தாய் தந்தையர் நீராடச் சென்று நேரம் ஆகியதால் குளத்தில் நின்றிருந்த மூன்று வயதுக் குழந்தை, சம்பந்தர் ‘அம்மையே, அப்பா’ என்றழைக்க, ஸ்திரசுந்தரி அன்னை அவருக்கு பொற்கிண்ணத்தில் திருமுலைப் பாலைத் தந்து ஞானக்குழந்தையாக்கினாள்.

 திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் மாணிக்கவாசகப் பெருமானுக்கு ஈசனே குருவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தருளினார்.

 சுந்தரர் கயிலை மலை செல்ல ஔவையாரை அழைத்தபோது, தான் கணபதி பூஜையை செய்துவிட்டுதான் வருவேன் என ஔவையார் கூற, சுந்தரர் அவரை விட்டுவிட்டுச் சென்றார். பூஜை முடிந்ததும், தன் துதிக்கையால் ஔவையாரை சுமந்து, சுந்தரருக்கு முன்னால் கயிலையில் கொண்டு சேர்த்தார் திருக்கோவிலூர் பெரியானைக் கணபதி.

 வள்ளலாருக்கு அவர் அண்ணியின் உருவத்தில் வந்து அன்னம் பாலித்த பெருங்கருணை கொண்டவள் திருவொற்றியூரில் அருளாட்சி புரியும்
வடிவுடையம்மன்.

 கவிச் சக்ரவர்த்தி கம்பர் தன் காவியத்தை அரங்கேற்றபோது அதில் இடம் பெற்றிருந்த ‘துமி’ என்ற சொல் வழக்கத்தில் இல்லாதது என்று பலர் வாதாடினார். ஆனால் கம்பருக்காக, கொட்டி கிழங்கு விற்பவளாக வந்து ‘துமி தெறிக்கும், தூரப்போ’ எனக்கூறி அந்தச் சொல் வழக்கத்தில் உள்ளதை நிரூபித்தாள், சரஸ்வதி தேவி.

 திருத்தணி முருகப்பெருமான் சங்கீத மும்மூர்த்தியரில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதருக்கு தரிசனம் கொடுத்ததோடு, கல்கண்டும் தந்து அவரை ஆசிர்வதித்தார்.

 முன் ஜென்ம சாபத்தால் பேச்சற்றவனாகப் பிறந்த காளிதாசன், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் ஊழியம் செய்து வந்தான். ஒரு முறை அங்கு, மந்திரசித்தி பெறுவதற்காக பூஜை செய்த வித்யா உபாசகருக்காக நேரில் வந்தாள் அன்னை. அந்த உபாசகரோ, வந்தது அன்னை என அறியாமல் ‘தூரப்போ’ என அன்னையை விரட்டினார். வாய் நிறைய தாம்பூலம் போட்டுக் கொண்டுவந்த அன்னை அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊமையான காளிதாசனை எழுப்பி அவன் வாயில் அந்த தாம்பூலச்சாற்றை உமிழ்ந்தாள். உடனே அவன் பேசும் சக்தி பெற்று ஆர்யா சதகம், மந்தஸ்மித சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம் என ஒவ்வொன்றிலும் நூறு துதிகள் அடங்கிய மூகபஞ்சசதியைப் பாடினார்; கவி காளிதாசன் என்று பெயரும் பெற்றார்.

 தேவியின் தியானத்தில் ஆழ்ந்திருந்தார், அம்பிகை உபாசகர் சுப்ரமணியம். அன்று அமாவாசை. தேவியின் பிரகாசமாக திருமுக ஒளியில் மனதை இழந்திருந்தார். அப்போது அங்கு வந்த சரபோஜி மன்னர் அன்று என்ன திதி என அவரைக் கேட்க, தேவியின் முக ஒளியில் மனதை வைத்திருந்த உபாசகர், பௌர்ணமி என்று பதிலளித்தார். மன்னன் மீண்டும் மீண்டும் கேட்க, அதே பதில்தான் கிடைத்தது. தியானம் கலைந்த உபாசகரிடம், ‘அமாவாசை திதியான இன்று, பௌர்ணமி என்று உளறுகிறீர். இன்று மட்டும் முழு நிலவு வானில் வராவிட்டால் மரணதண்டனைதான் எனக்கூறி, கீழே எரியும் நெருப்பின் மேலே ஊஞ்சல் கட்டி ஒவ்வொரு பிரியாக அறுத்துக் கொண்டே வரச் செய்தார். ‘விழிக்கே அருளுண்டு...’ எனும் பதிகத்தை சுப்ரமணியம் பாடிய போது தேவி நேரில் தோன்றி தன் தாடங்கத்தை வானில் வீசி, அதையே பௌர்ணமி நிலவாக்கி அற்புதம் புரிந்தாள்.

 வாத நோயால் பாதிக்கப்பட்ட நாராயண பட்டத்ரிக்கு குருவாயூரப்பன் நேரில் தோன்றி, ‘மச்சத்திலிருந்து என் துதியை ஆரம்பி’ எனக் கூறி, ‘நாராயணீயம்’ எனும் மகா காவியம் உருவாகக் காரணமாயிருந்தார். அவ்வாறு நாராயணீயம் பாடி முடித்ததும் அவர் பிணி அவரை விட்டு நீங்கியது.

- ந.பரணிகுமார்

Tags : gods ,
× RELATED கடவுள்களை உருவாக்கும் கலை