ஐதராபாத்: தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி மீது நடிகை மாதவி லதா போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் நடித்தவர் மாதவி லதா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜவில் இணைந்து அக்கட்சிக்காக பிரசாரம் செய்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், தடிபத்ரி நகராட்சித் தலைவருமான ஜே.சி. பிரபாகர் ரெட்டி தன்னைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசியதற்காக மாதவி லதா நேற்று கச்சிபவுலியில் உள்ள சைபராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தன்னைப் பற்றி அவதூறு பரப்பி, இழிவாக பேசிய பிரபாகர் ரெட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்க அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.
புகார் அளித்துவிட்டு வந்த மாதவி லதா கூறும்போது, ‘பிரபாகர் ரெட்டி மன்னிப்பு கேட்டுவிட்டாரே என்கிறீர்கள். அதனால் அவர் சொன்னதெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா? அவர் மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால் நான் அவரை மன்னிக்கவில்லை. மறக்கவும் இல்லை. அவரது பேச்சால், நானும் எனது குடும்பத்தாரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவர் பேசியிருக்கிறார். அவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன்’ என தெரிவித்தார். முன்னதாக நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என பேசியிருந்த பிரபாகர் ரெட்டி, மாதவி லதாவை குறிப்பிட்டு இந்த கருத்தை கூறியிருந்தார். அவரது பேச்சு, சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.