×

வற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி

25-3-2020 முதல்  2-4-2020 வரை

ஸ்ரீராமர் தர்மபுரி கல்யாண காமாட்சி ஆலயத்தில்தான் முதன் முதலாக வசந்த நவராத்திரியை தொடங்கி பூஜிக்கவும் செய்தார்.  தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான்.

குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது. அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. புரட்டாசி மாதம், குளிர் காலத்தின் ஆரம்பம். பங்குனி மாதம், கோடையின் துவக்கம். இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.

பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு. பங்குனி மாதத்தில் கொண்டாடப் படுவது வசந்த நவராத்திரி . ஆடி மாதத்தில், ஆஷாட நவராத்திரி; புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி; தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.  சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரி களையும் கொண்டாடுவது வழக்கம்.  

வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். ஒரு ருதுவுக்கு இரண்டு மாதங்கள். அந்த ருதுக்களில் ‘ரிதூநாம் குஸுமாகர:’ என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. இந்த வஸந்த ருதுவே வசந்த காலம். அதாவது, வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம்.

வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் முடியும் (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும் ஒரு பட்சம் அதாவது, 15 நாட்கள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்றும் ஒரு மண்டலம், அதாவது, பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.) பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி.

வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.

வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள். வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்; அன்யோன்யம் உண்டாகும். அக்னி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விரதம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடாகச் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். புரட்டாசி நவராத்திரி மாதிரி கோலாகலமாகக் கொண்டாடாவிட்டாலும், அவரவர் இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடலாம். அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்றும் வசந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கலாம்.

வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே, வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும். முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது.

வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும். வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். வசந்த நவராத்திரி தொடர்பான ஸ்லோகம், மந்திரம் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள். ‘ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ’ என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும்.

சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். தர்மபுரி கல்யாண காமாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீராமன் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.

இந்த இதழ் முழுவதும் தமிழகத்திலுள்ள சக்தி பீடங்கள் அனைத்தையும் நாம் தரிசிக்கலாம். வசந்த நவராத்திரி நிகழும் நாட்களில் இதிலுள்ள கோயில்களுக்குச் சென்று தரிசித்து அம்பிகையை அருளை பெறுங்கள்.  

திருமண வரமருளும் கல்யாண காமாட்சி-தர்மபுரி

மாங்காட்டில் தீப்பிழம்பின் மத்தியில் தவக்கோலத்தில் பொலிந்தவள், தஞ்சையில் பங்காரு காமாட்சியாக பிரமிப்பூட்டுகிறாள்; காஞ்சியில்
பேரமைதி தவழும் யோகநாயகியாக யோக காமாட்சியாக உலகை அரவணைக்கிறாள். அத்தகைய பேராற்றலைப் பொழியும் பராசக்தியானவள் தன் இன்முகம் காட்டி கல்யாண காமாட்சியாக அருட்கோலம் காட்டும் தலமே தகடூர் எனும் தர்மபுரியாகும்.

ராவண வதம் முடித்தபிறகு ராமர் சற்று கலங்கித்தான் போனார். ராவணன்தான் எப்பேற்பட்ட சிவபக்தன்! சாமகானம் பாடி ஈசனையே அசைத்தவனாயிற்றே. சதுர் வேதத்தையும் கற்று கரை கண்டவனாயிற்றே. ஆனால் எத்தனை தர்மங்களை கரைத்துக் குடித்தாலும், தன் வாழ்க்கையை அதர்மத்தின் பாதையில் அமைத்துக் கொண்டானே! கருணை மிகுந்து, தர்மம் ராமரூபம் கொண்டது. அகங்காரம் எனும் ராவணனை வீழ்த்தியது. ஆனாலும் மனித உருகொண்டதால் செய்யாததை செய்ததுபோல பதறியது.

ஐயோ, வேதமறிந்தவனை கொன்றேனே என்று கலங்கியது. கலக்கம் பிரம்மஹத்தி தோஷமாக ராமரைப் பற்றியது. அதைப் போக்க ஆதிசேது எனும் ராமேஸ்வர சமுத்திர மணலை அளாவி எடுத்து ஈசனை தம் தளிர்கரங்களால் லிங்க உருவில் குழைத்து நாள் தவறாது பூசித்தார். கடல் அலைகள் பிரம்மஹத்தி தோஷத்தை தம்மோடு கரைத்துக் கொண்டன. தோஷம் விடுபட்ட ராமர், சூரியனாக ஜொலித்தார். ஆயினும், உள்ளுக்குள் ஏதோ நெருடிக் கொண்டிருந்தது. பிரம்மஹத்தி தோஷத்தின் வீர்யம் புகை போன்று சுழன்று கொண்டிருந்தது.

மாமுனிகளை அண்டி அமர்ந்து ஆறுதல் அடையலாமே என்று நினைத்த ராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அகத்தில் ஞானத்தீயை கொழுந்து விட்டெறியச் செய்த அகத்தியரை நாடினார். இதற்கொரு வழி கூறுங்களேன் என்று கேட்டுப் பணிவாக நின்றார். அகத்தியர் ‘‘ராகவா உனக்கு ஒரு குறையும் ஏற்படாது. நீ தீர்த்தமலை சென்று வா. உன்னைச் சுழற்றும் இந்த தோஷம் பரிபூரணமாக நீங்கும். கல்யாண காமாட்சி உன் கலக்கம் தீர்ப்பாள்,’’ என்றார்.

அதேசமயம், குமார சம்பவம் நடைபெற வேண்டுமென தேவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மன்மதன் தன் தூண்டுதலால் அது நிகழும் என்று சற்று கர்வம் கொண்டிருந்தான். ஈசனை தன் ஆளுமையில் கொண்டுவரத் துடித்தான். ஐயனருகே மன்மதன் வந்தான். ஈசனை சூழ நினைத்தான். ஆனால் சிவனின் ஞானாக்னி மன்மதன் எனும் காமத்தை பொசுக்கியது. வெற்றுச் சாம்பலானான் மன்மதன். சுய உடலை இழந்த மன்மதன் உடலற்றவனானதால் அனங்கன் என்றுஅழைக்கப்பட்டான். பார்வதி இச்செயலைக் கண்டு வருந்தினாள். மன்மத பாணமே தோற்றுவிட்டதால் தான் ஈசனுடன் இணைய இயலாது போய்விடுமோ என்று மனம் உடைந்தாள். பூவுலகில் தவம் செய்து ஈசனோடு மீண்டும் இணைய உறுதி கொண்டாள்.
 
தகடூரில் ஸ்ரீசக்ரம் அமைத்து மாதவத்தில் ஆழ்ந்தாள் அன்னை. ஈசனும் அந்த தவத்தில் கரைந்தார். சட்டென்று தரிசனம் தந்தார். தவத்தில் உறைந்திருந்த நாயகியின் முகம் சிவனைக் கண்டதும் பூரித்துச் சிவந்தது. மலைமகள் திருமணக் களை கொண்டாள். ஈசனும் அத்தலத்திலேயே அவளை மணந்ததோடு மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தோன்றுமாறு செய்தார். மன்மதன் மகிழ்ந்தான். ரதி தேவி ஈசனின் திருவடி வீழ்ந்து பரவினாள். மன்மதனைக் காத்த கல்யாண காமாட்சி சக்தி பீடத்தின் மத்தியில் அமர்ந்து பேரருள் பெருக்கும் தலத்திற்கு ராமனையும் சென்றுவரச்சொல்லி, வசந்த நவராத்திரி பூஜை முறைகளையும் உபதேசித்தார் அகத்தியர்.

ராமர் சக்தி பீடத்தை நெருங்கியபோதே தன்வயமிழந்தார். அப்போதே பிரம்மஹத்தி தோஷமானது முற்றிலுமாக மறைந்தது. ராமர் பிரம்மம் எனும் தெளிந்த நீலவானத்தைப்போல நிர்மல மனதினராகத் திரும்பினார். தர்மபுரி எனும் இத்தலத்தில் மன்மதனை உயிர்ப்பித்ததற்கு ஆதாரமாக இருந்த அன்னை, போக காமாட்சியாக அருள் கூட்டி அமர்ந்தாள். பதினெட்டு யானைகள் தாங்கிய தேர் போன்ற அமைப்பில் விளங்குகிறது அன்னையின் சந்நதி. அன்னையை வணங்குபவர்கள் ராமரையும் தரிசிக்கிறார்கள். மேற்குப் புற கருவறையின் பின்னர் உள்ள முதல் யானையிடமிருந்து ஆரம்பிக்கும் ராமாயணக் காட்சிகள் அதியற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடி, அப்பிரதட்சணமாக வந்து, பதினெட்டாவது யானையுடன் முடிகிறது.

சாதாரணமாகவே இறைவியின் சந்நதியை அப்பிரதட்சணமாக அதாவது, இடமிருந்து வலமாகச் சுற்றினால் உலக இன்பங்கள் விடுபட்டு முக்தி கிட்டும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அம்பிகையை வலம் வரும்போது வலஇடமாகவும், ராமாயண காவியச் சிற்பங்களை தரிசிக்க இடவலமாகவும் வருவதால் இவள் இம்மையும் மறுமையும் கலந்தளிக்கும் அருட்தாய் என்பதை எளிதாக உணரலாம்.

ஆலயத்துக்குள் நுழைந்தவுடன் தல விநாயகரான செல்வ விநாயகரும், அவரை அடுத்து ஆறுமுகம் கொண்ட ஷண்முகநாதனும் தரிசனமளிக்கின்றனர். பிராகாரம் வலம் வருகையில், ‘மனோன்மணி’ உபாசனையை உலகில் பரப்பிய காடு வெட்டி சித்தர் சிவலிங்க ரூபமாய் சித்தேஸ்வரன் என்ற பெயரில் அருள்கிறார். அடுத்து தலத்தின் பிரதான நாயகி, ஐம்பது அடிக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் ஸ்ரீசக்ர மேடை மேல் நின்று அருளுகிறாள். மூன்று தள விமானத்தின் கீழ் தன்னிகரில்லாப் பெருமையுடன் காட்சி தரும் கோலம், பார்க்க மனம் அப்படியே நெகிழும். அம்மனின் கருவறை அமைப்பு வித்தியாசமானது. ஈசனின் கருவறை விமானத்தைவிட பெரிது.

அருளே உருவாய் கல்யாண குணங்களோடு, வணங்குவோர் வாழ்வில் நலம் பல அருளும் அம்பிகையை மனம் குவிய தரிசிக்கிறோம். அன்னையின் பதினாறு துணை சக்திகளும், மாதங்கி, வாராகியும் சேர்ந்து பதினெட்டு யானைகள், ஸ்ரீசக்ர சந்நதியில் கொலுவீற்றிருக்கும் நாயகியை தாங்கி நிற்கின்றன. உயரத்தில் உள்ள காமாட்சியின் சந்நதியை அடைய பதினெட்டு திருப்படிகள் உள்ளன. அமாவாசை தினங்களில் பெண்கள் இங்கு திருப்படி பூஜையை விமரிசையாக செய்கிறார்கள்.

இத்தலத்தில் அருளும் ராஜதுர்க்கை ‘சூலினி’ எனப் போற்றப்படுகிறாள். தர்மர் இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட மூர்த்தினி இவள். சங்கு சக்ரம் ஏந்தி மஹிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். செவ்வாய் தோஷம் போக்குபவள். ஒவ்வொரு தை மாதமும் சண்டிஹோமம் கொண்டருளுகிறாள் சூலினி. இங்கு ப்ரத்யங்கிரா தேவியும் சிறப்பாக வழிபடப்படுகிறாள்.
அடுத்தது மல்லிகார்ஜுனனின் பிரதான சந்நதி.

தீபஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் கடந்தால் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். இடது புறம் துர்வாசரை அவமதித்த சாபம் தீர இத்தலத்து ஈசனை வணங்கி சாபநிவர்த்தி பெற்ற ஐராவத யானையையும் காணலாம். கருவறையின் முகப்பில் உள்ள கஜலட்சுமியை, ஒரு யானை துதிக்கையைத் தூக்கியும், ஓர் யானை மண்டியிட்டு வணங்கும் அதிசய அமைப்பும் சிலிர்க்க வைக்கிறது. தர்மபுரி கோட்டை கோயில் எனப் புகழ் பெற்ற இத்தலம் தர்மபுரி பேருந்து நிலையத்தி லிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவருள் பொழியும் திருமீயச்சூர் லலிதாம்பிகை

தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள் பெருங்கோயில், மாடக்கோயில், மணிக்கோயில் என பல்வேறு வகையாய் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஆலயத்தினுள்ளேயே மற்றொரு ஆலயம் உள்ள அமைப்பு இளங்கோயில் எனப்படும். திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் ஆலயம் இத்தகைய இளங்கோயில் அமைப்பில் உள்ளது. அருணாசலேஸ்வரரை மேகநாதசுவாமி என்றும், லலிதாம்பிகையை சாந்தநாயகி என்றும் பக்தர்கள்  வழிபடுகின்றனர்.

ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு பார்த்த மேகநாத சுவாமி ஆலய ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் நான்கு புறங்களிலும் தேரோடும் அழகிய வீதிகள். தேர்நிலைக்கு அருகில் தென்திசை நோக்கி சித்தி விநாயகர், தனி ஆலயத்தில் கோயில் கொண்டிருக்கிறார். அதனருகில், சந்நதித் தெருவில் சூரியன் உருவாக்கிய சூரியதீர்த்தம் உள்ளது. சூரியன் இத்தலத்தில் கஜவாகனனாக ஈசனை வழிபட்டதால் ஆலய விமானம் யானையின் பின்பாகம் போன்ற கஜப்ருஷ்ட அமைப்புடன் மூன்று கலசங்களுடன் காட்சியளிக்கிறது. வெளிப்பிராகாரம் கடந்து உள்ளே சென்றால் மேகநாதர் கலைநயத்துடன் காட்சி தருகிறார்.

கோயிலில் லலிதாம்பிகைக்கு தனி சந்நதி உள்ளது. அகலமான கருவறையின் நடுநாயகமாக வலதுகாலை மடித்து, இடதுகாலை கீழே பீடத்தில் ஊன்றி பேரெழிலுடன் அமர்ந்திருக்கிறாள் லலிதை. திருவாசி பளபளக்க, வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து தரிசனம் தருகிறாள். தனிக்கோயிலில், அமைதியான திருவுருவில் லலிதை தரிசனமளிக்கின்றாள்.  

காச்யப முனிவரின் மனைவிகளான கத்துருவும் வினதையும் மழலை வரம்  வேண்டித் தவமிருந்தார்கள். வினதைக்கு பட்சி ராஜனான கருடனும் கத்துருவுக்கு உடற்குறையுள்ள அருணனும் பிறந்தனர். அதனால் மனம் நொந்த அவர்கள் இறைவனிடம் மீண்டும் சரணடைய, பறவை குழந்தை மகா விஷ்ணுவின் வாகனமான கருடனாக  பெரிய திருவடியாகும் பேறு பெற்றது. கத்துருவின் குழந்தை அருணன் சூரியனின் சாரதியாக பதவி பெற்றார். அருணன் உடற்குறையுள்ளவராக இருந்ததால், அதை நிவர்த்தி செய்துகொள்ள விரும்பினார். தன் விருப்பத்தை நிறைவேற்றவல்ல ஈசனை தரிசிக்க, மோகினி வடிவம் கொண்டு அருணன் சென்றபோது, அவள் அழகில் மயங்கிய  இந்திரன் அவளை பலாத்காரம் செய்ததால், இறைவனின் சாபத்தை இந்திரன் பெற்றான்.

இந்த செய்தி அறிந்த சூரியனுக்கோ தன் சாரதியை மோகினியாக பார்க்க ஆசை வந்தது. கதிரவனுக்கு காமம் தலைக்கேற, மீண்டும் மோகினி, வடிவமெடுக்க அருணனை வற்புறுத்தினான். இதைத் தெரிந்துகொண்ட ஈஸ்வரன் சூரியனை சபித்தார். சூரியன் உடல் கறுமையாகி உலகம் இருண்டு விட்டது. தன் தவறை உணர்ந்து ஈசனிடம் மனமுருக வேண்டிக் கொண்டான் சூரியன். மீண்டும் மீண்டும் இறைவனை சரணடைந்து மனமுருக வேண்டினான்.

அதற்கு இறைவன், ‘திருமீயச்சூர் சென்று சூர்ய புஷ்கரணி என்னும் நீர்நிலையை உருவாக்கி, பூஜைகள் செய்’ என்று ஆணையிட்டார். அதன்படி தலையில் எருக்கு இலை, அறுகம்புல், பசுஞ்சாணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து விசேஷமாக பூஜைகள் செய்தான். ஏழு மாதம் இப்படிச் செய்தும் அவன் உடலின் கறுமையும், கடுமையும் மாறவில்லை. ஈஸ்வரனை நோக்கி கதறினான். சுவாமியும் அம்பாளும் ஏகாந்தமாக இருக்கும் ஒரு அமைதியான வேளையில் சூரியனின் அலறல் அபஸ்வரமாக ஒலித்தது. அம்பாளுக்கு கோபம் வந்து சூரியனை சபிக்க நினைத்தபோது ஈசன் அவளைத் தடுத்தார்.

‘இப்போதுதான் சாப விமோசனம் பெறும் நிலைக்கு வந்திருக்கிறான் சூரியன், மீண்டும் சபித்து விடாதே! மீண்டும் உலகம் இருளில் மூழ்கிவிடும். எனவே  நீ சாந்தமடைந்து, உலகம் பிரகாசிக்கத் தவமிருப்பாயாக!’ என்று கேட்டுக் கொண்டார். அம்பிகையும்  சாந்த நாயகியாக, லலிதையாக திருமீயச்சூர் பகுதியில் தியான கோலத்தில் அமர்ந்தாள்.

அன்னை பராசக்தியின் உத்தரவின் பேரில் வசின்யாதி வாக் தேவதைகள் தோன்றி லலிதா ஸஹஸ்ரநாமம் எனும் லலிதையைப் புகழும் அதியற்புதமான தோத்திரத்தை இத்தலத்தில் அரங்கேற்றினர். அதில் வரும் ஸ்ரீமாதா எனும் முதல் நாமத்தின்படி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய், இந்த அகிலத்திற்கே அன்னையாய், தேவி அருள்கிறாள். ஹயக்ரீவர் சொற்படி அகத்திய முனிவர், திருமீயச்சூர் வந்தார். சூரியன் அப்போது சாந்தநாயகிக்கு பூஜை செய்துகொண்டிருந்ததை பார்த்தார். தானும் அன்னையை வணங்கி, ‘லலிதா நவரத்ன மாலை’ என்கிற பாடல் தொகுப்பைப் பாடினார். லலிதா நவரத்னமாலையை இத்தலத்தில் பாடினால் லலிதாஸஹஸ்ரநாம பாராயண பலன் கிட்டும் என்பார்கள்.

இத்தேவியின் சந்நதி, கொலுமண்டபம் போல, ஒரு ராஜதர்பார் போல் தோற்றமளிக்கிறது. அழகு, கம்பீரம், கருணை தவழ பேரெழிலுடன் தேவி அமர்ந்திருக்கும் காட்சியில் மனம் குவிகிறது. காண்பவரைப் பரவசப்படுத்தும் தரிசனம். சாந்தித்யம் நிறைந்த இந்த சந்நதி பக்தர்களை நெக்குருக வைத்து கண்களில் நீர் திரள வைப்பது நிஜம்.

மனதில் நினைக்கும் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தருவது மனோன்மணி. அந்த மனோன்மணி வடிவில் பக்தர்களின் கோரிக்கை எதுவானாலும் நிறைவேற்றித் தருகிறாள் இந்த லலிதாம்பிகை.  சித்திரா பௌர்ணமியும் சுவாதி நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாள் மிக விசேஷமானது. அன்று வானில் இருந்து விழும் மழைத்துளி சிப்பியினுள் நுழைந்தால் அது நல்முத்தாக மாறிவிடும். அந்நாள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அந்த நந்நாளில் இத்தல லலிதாம்பிகைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

வாழ்க்கையில், அமைதியையும் அர்த்தத்தையும் கண்டுபிடிக்கத் தெரியாமல் அல்லற்படும் நம்மை கருணையுடன் அழைத்து அருட்பாலிக்கிறார் லலிதாம்பிகை. வணங்கும் பக்தர்களுக்கு இல்லற நலம், குழந்தைகளின் கல்வி வளம், செய்தொழிலில் வெற்றி, மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள், குறைவற்ற உடல்நலம், போன்றவற்றை அருளி தீவினை பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறாள் தேவி. கும்பகோணத்திலிருந்தோ மயிலாடுதுறையிலிருந்தோ திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பேரளம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது திருமீயச்சூர் திருத்தலம்.

ஓவியம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்    

பரணிகுமார்

Tags :
× RELATED இந்த வாரம் என்ன விசேஷம்?