சென்னை: பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, மாஸ்டர் விஜய், பாவெல் நவகீதன் உட்பட பலர் நடித்து 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘குற்றம் கடிதல்’. வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் அடுத்த பாகம் இப்போது ‘குற்றம் கடிதல் 2’ என்ற பெயரில் உருவாகிறது. இதை, பார்த்திபன் நடித்த ‘புதுமைப்பித்தன்’, கார்த்திக் நடித்த ‘லவ்லி’ படங்களை இயக்கியவரும் வசந்தபாலன் இயக்கிய ‘அநீதி’ படத்துக்கு வசனம் எழுதியவருமான ஜீவா இயக்குகிறார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிக்கும் ஜே.சதீஷ்குமார், கூறும்போது, “கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் நேரத்தில் குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார். இந்தப் படத்துக்கு சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டிகே இசை. பிரேம்குமார் எடிட்டிங்.