×

குடும்ப நலம் காப்பார் குருவாயூரபபன்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயில் உலகப் பிரசித்திப்பெற்றதாகும். இத்தல கிருஷ்ணன் நான்கு திருக்கரங்களுடன் பாஞ்சஜன்யம் எனும் சங்கையும் சுதர்சன சக்கரத்தையும் கௌமோதகி எனப்படும் கதையையும் தாமரை மலரையும் ஏந்தி குழந்தை வடிவில் திருவருள் புரிகிறான். இக்கண்ணனை பக்தர்கள் உண்ணிக்கண்ணன், உண்ணிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், குருவாயூரப்பன் என்றெல்லாம் அழைத்து பரவசமடைகின்றனர். நாராயண பட்டத்ரியின் நோய் தீர்த்த இக்குழந்தை கண்ணன் நாராயணீய பாராயணத்தினால் தம் பக்தர்களின் நோய் தீர்க்கிறான்.

திருப்பதி கோயிலில் சுப்ரபாத சேவை எவ்வளவு புகழ்பெற்றதோ அவ்வளவு புகழ் பெற்றது கேரளாவில் உள்ள குருவாயூர் ஆலய விளக்கு பூஜை. வருடம் 365 நாட்களும் மாலையில் நடைபெறும் இந்த விளக்கு பூஜை உலகப்புகழ் பெற்றது. தீபத்தில் தெய்வங்களை ஆவாஹனம் செய்து பூஜை செய்வது நமது பாரத தேசத்தில் தொன்று தொட்டு வழங்கி வருகிறது. ஒளி என்பது ஞானத்திற்கும் இருள் என்பது அஞ்ஞானத்திற்கும் அறிகுறியாகும். ஆகவேதான் ‘தமஸோ மா ஜ்யோதிர் கமய’ என்று வேதம் கூறுகிறது. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி போன்றோரை தீபத்தில் ஆவாஹனம் செய்து பூஜிக்கும் பகவதி சேவை கேரளத்தில் பிரசித்தி பெற்றது.

திருச்சூர் - எர்ணாகுளம் செல்லும் பாதையில் உள்ள குடியிருப்புகளில் இன்றும் சாயங்கால வேளைகளில் வாசலில் தீபங்களை ஏற்றி வைத்து நமசிவாய, நாராயணாய, அச்சுதாய எனும் நாமங்களை மக்கள் பாராயணம் செய்வதைக் காணமுடியும். நரகாசுரன் எனும் இருட்டை கிருஷ்ணன் எனும் தீபம் அழித்து ஒளி பரப்பிய நாளே தீபாவளித் திருநாள். அதனால்தான் இருட்டான சதுர்த்தசி திதியன்று தீபாவளிப் பண்டிகையை நரகாசுரன் வதம் செய்யப்பட்டதன் நினைவாகக் கொண்டாடுகிறோம். மேலும் வெளிச்சம் ஏற்பட்டு இருள் அகன்றால்தான் இருக்கின்ற பொருட்கள் நம் கண்களுக்கு நன்கு புலப்படும். அதே போல அஞ்ஞான இருள் அகன்றால்தான் ஞானம் என்ற சூரியன் நமக்குள் உதயமாகும்.

குருவாயூர் ஆலயத்தில் நடைபெறும் விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் சாயங்காலம் 6 மணிக்கு குருவாயூரப்பன் கருவறையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான தீபங்களை ஆலய ஊழியர்கள் மிகவும் நீளமான தீப்பந்தங்கள் மூலம் ஏற்றுவர். பின் அலங்கரிக்கப்பட்ட யானை மீது குருவாயூரப்பன் ஆரோகணிப்பார். இருபுறம் பூப்பெய்தாத சிறுமிகள் தீபங்கள் ஏந்திய தாலத்தட்டு ஏந்தி அணிவகுக்க, பஞ்சவாத்தியங்கள் முழங்க, ஆலயத்தை குருவாயூரப்பன் ஐந்து முறை வலம் வருவார். இது சீவேலி பூஜை என போற்றப்படுகிறது. அப்போது ஆலயத்தில் நிறபணி எனப்படும் பெரிய படியில் அரிசியை நிரப்பி தென்னங்குருத்தால் அலங்கரித்து இருபுறங்களிலும் மலையாளக் குத்துவிளக்குகளை ஏற்றி வைப்பார்கள்.

படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் போன்ற ஐந்தொழில்கள் புரியும் தேவதைகளின் வடிவமாகக் குத்துவிளக்கு போற்றப்படுகிறது. ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம ஸ்வரூபம், நடுத்தண்டாகிய மத்ய பாகம் விஷ்ணு ஸ்வரூபம், நெய் ஏந்தும் அகல் பகுதி சிவ ஸ்வரூபம். அதற்கு மேலே சிகரமாக உள்ள உச்சிப்பகுதி மகேஸ்வரன். நெய் நாதமாகவும், திரி பிந்துவாகவும், சுடர் திருமகளாகவும், தீப்பிழம்பு கலைமகளாகவும், தீ சக்தி வடிவமாகவும் திகழ்கிறது. கவியரசர் கண்ணதாசன், ‘குருவாயூருக்கு வாருங்கள்...’ எனும் தன் பாடலில் ‘மாலை நேரத்தில் சீவேலி, மாளிகை முழுதும் நெய்வேலி’ என இந்த தீப அலங்காரத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விளக்கில் குருவாயூரப்பனை ஆவாஹனம் செய்து 16 விதமான உபசாரங்கள் செய்து பின் அவரை யதாஸ்தானம் செய்து, ‘மீண்டும் நாங்கள் அழைக்கும் போது வருவாய் குருவாயூரப்பா,’ என பட்டத்ரிகள் வேண்டிக்கொள்வர். பஞ்சபூதத்தலங்களில் திருவண்ணாமலையைத் தவிர மற்ற நான்கு தலங்களில் பிறக்க, இறக்க முக்தி என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆனால், திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று கூறியிருப்பது அந்த மலையே தீப ஜோதிஸ்வரூபமாய் உள்ளதால்தான். குருவாயூரில் ஏகாதசி விளக்கு பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சந்திரன், பௌர்ணமி-அமாவாசை இரவுகளுக்கு இடையே வரும் பதினொன்றாம் நாள்தான் ஏகாதசி.

வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வருகின்றன. அவற்றில் மலையாள விருச்சிக மாத ஏகாதசி (தமிழில் கார்த்திகை மாதம்) குருவாயூரைப் பொறுத்தவரை புனிதமான நாளாகும். இந்த ஏகாதசிக்கு 18 நாட்கள் முன்னதாகவே விழா தொடங்கிவிடும். ஒன்பதாவது நாளான நவமியன்று, அனைவரும் சேர்ந்து விளக்குகளை ஏற்றி குருவாயூர் கண்ணனை வழிபடுகின்றனர். பத்தாவது நாளான தசமியன்று சமோரின் ராஜா வகையினர் விளக்கு ஏற்றும் வைபவம் குருவாயூரப்பன் சங்கீர்த்தன சமாஜம் எனும் அமைப்பின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அந்நாளில் விடியற்காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்காக கதவுகள் திறந்தபிறகு, இரு நாட்கள் கழித்து பன்னிரண்டாம் நாள், துவாதசியன்று காலை 9.00 மணிக்கே கதவுகள் மூடப்படுகின்றன.

இப்படியாக தசமி மற்றும் ஏகாதசி நாட்களில் பக்தர்கள் அனைவரும் குருவாயூரப்பனை கண்குளிர தரிசிக்கலாம். வேதகாலத்து பாரம்பரியங்களை இன்றும் தொடர்ந்து கச்சிதமாகவும் நேர்மையாகவும் பேணப்பட்டு வருவதே இக்கோயிலின் சிறப்பம்சமாகும். இத்தலத்தில் சுமார் 50 யானைகள் உள்ளன. இங்கு யானைதான் சந்நதியை திறந்து வைக்கும். விழாகாலங்களில் சுவாமியை யானையே சுமந்து செல்லும். அதற்காக யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெறும் யானைதான் சுவாமியை சுமக்கும் பாக்கியத்தைப் பெறும். இவ்வாறு பல வித்தியாசமான நடைமுறைகள் இத்தலத்தில் உண்டு.

தினமுமே குருவாயூர் ஆலயத்தில் கருவறையைச் சுற்றி ஆயிரக்கணக்கான தீபங்கள் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். தினமும் மாலை 6.15-6.45 மணிக்குள் ஆலய விளக்குகளை ஏற்றி கற்பூர தீபம் காண்பித்து குருவாயூரப்பனை ஆராதிப்பர். குருவாயூர் கோயிலில் சாயங்காலம் மட்டுமே தீபாராதனை. ஏழுஅடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகபட விளக்கு, ஒற்றைத்திரி விளக்கு என பல விளக்குகளை ஏற்றி கண்ணனை ஆராதிக்கின்றனர். இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது வலம்புரிச்சங்கை ஊதி, மத்தள மேள, பஞ்சவாத்தியங்கள் முழங்க குருவாயூரப்பனின் அழகே உருவான திருவடிவை ஆராதிப்பர்.

எவ்வளவு தொலைவிலிருந்தாலும் பிரகாசமான வடிவில் ஜொலிக்கும் குருவாயூரப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும். சர்வாலங்காரங்களுடன் தலையில் கிரீடம், கழுத்தில் மரகதம், இடுப்பில் சிவப்புப் பட்டு கௌபீனம் தரித்து குருவாயூரப்பன் அருட்கோலம் காட்டுவார். தினமும் அர்த்தஜாம பூஜை முடிந்த பின் பிராகாரத்தில் நிர்த்தம் எனுமிடத்தில் வாரியார் ஒருவர், ஓலையில் எழுதிய அன்றாட வரவு செலவு கணக்குகளை படித்து பகவானிடம் ஒப்புவிக்கும் வழக்கம் உண்டு. அந்நிகழ்வு திருத்தோலை வாசித்தல் எனப்படுகிறது. சீவேலி முடிந்ததும் இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெறும்.

அப்போது நெய்யப்பம், இலைஅடை, பால் பிரதமன் போன்றவை குருவாயூரப்பனுக்கு நிவேதிக்கப்பட்டும் பின் சுற்று விளக்கு பிரார்த்தனை நடைபெறும். ஆலயமெங்கும் விளக்குகள் எரிய பஞ்சவாத்தியங்கள் முழங்க மூன்று அல்லது ஐந்து யானைகளுடன் குருவாயூரப்பன் பக்தர்களுடன் ஆலய வலம் வருவார். இவ்வளவு மகிமை வாய்ந்த தீபத்தை தினமும் போற்றி ஆராதிக்கும் குருவாயூர் தலத்தில் குரு வடிவாய் நம் அக இருளைப் போக்கி, வாழ்வில் வெளிச்சம்  தந்து நம்மைக் காக்கும் குருவாயூரப்பனின் பூஜையை தரிசித்து குருவருளுடன் திருவருளும் பெறுவோம்.

Tags : Family Welfare Guruvayoorappan ,
× RELATED காமதகனமூர்த்தி