×

இறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைத்து வழிபடுவது?

நம் வீட்டு பூஜை அறை என்று சொன்னாலே, அதில் எந்த பொருளை வைத்துக்கொள்ளலாம், எந்த பொருளை வைத்துக் கொள்ளக் கூடாது, என்ற பல சந்தேகங்கள் இன்றளவும் நம் மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. சிலபேருக்கு எவ்வளவுதான் ஆலோசனைகள் கேட்டு இறைவனை வழிபட்டாலும், அதில் மன திருப்தி என்பது கிடைக்கவே கிடைக்காது. வீட்டு பூஜை அறையில் இருக்கும் பொருட்களுக்கு சரியான முறையில் தான் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகின்றோமா? அல்லது ஏதேனும் தவறான முறையை பின்பற்றி வருகின்றோமா? என்ற சந்தேகத்தோடு இறைவனை வழிபடுவார்கள். இப்படிப்பட்ட சந்தேகம் மனப்பான்மையோடு இறைவனை வழிபடுவது என்பது மிகவும் தவறான ஒன்று. ஏனென்றால் நாம் அறிந்து எந்த தவறையும் இறைவனுக்காக செய்வதில்லை.

அறியாமல் செய்யும் தவறுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, மன நிறைவோடு அந்த இறைவனை வழிபட தொடங்குங்கள். உங்கள் வேண்டுதல்களுக்கான பலன் நிச்சயம் உண்டு. நாம் பூஜை அறையில் செய்யும் அறியாத சில தவறுகளை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேர் கோவிலில் பூஜை செய்துவிட்டு வேல், சூலம், அரிவாள் இவற்றை தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். சில பேர் வீடுகளில் தங்கத்தாலான வேலைக்கூட பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். முடிந்தவரை ஆயுதங்களாக கருதப்படும் எந்த பொருட்களையும் வீட்டில் வைத்து வழிபடலாமல் இருப்பது நல்லது.

கோவில்களில் இருந்து நேர்த்தி கடனுக்காக பூஜை செய்துவிட்டு அந்த பொருட்களை எடுத்து வந்தாலும், ஓடும் நீர் நிலைகளில் விட்டுவிடுவது நல்லது. வீட்டில் வைத்துதான் பூஜை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் சிலருக்கு இருந்தால், அதற்கான பூஜை புனஸ்காரங்களை முறைப்படி செய்ய வேண்டும். அதாவது அந்த ஆயுதத்தின் கூர்முனையில் தினமும் எலுமிச்சை பழத்தை குத்திவைக்க வேண்டும். அந்த ஆயுதத்திற்க்கு எலுமிச்சை பழத்தை காயப்படுத்தி பலி கொடுத்திருக்கின்றோம் என்பதுதான் இதற்கு அர்த்தம். தினம்தோறும் அந்த எலுமிச்சை பழத்தை புதிதாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான அபிஷேக ஆராதனைகளும் முறைப்படி செய்வது நல்லது. அடுத்ததாக சிலரது வீடுகளில் எந்திரங்கள், சாலிகிராமம், சங்கு, கோமதி சக்கரம் இவைகளை வைத்து வழிபடும் பழக்கம் இருக்கும். இவைகளை எல்லாம் வீட்டில் வைத்து வழிபட்டால் முறையான பூஜை புனஸ்காரங்கள் மிகவும் அவசியம்.

இந்த பொருட்களுக்கெல்லாம் ஜீவன் உள்ளது என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இவைகளுக்கு எந்தவிதமான குறையும் வைக்காமல் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருவது சிறந்தது. முடிந்தவரை பாரம்பரியமாக நீங்கள் வழிபட்டு வரும் பொருட்களுக்கு உங்கள் முன்னோர்கள் எந்த முறைப்படி பூஜைகளை செய்து வந்தார்களோ அந்த முறையை மாற்றாமல் வழிபடுவது மிகவும் சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நம் வீட்டில் இறந்தவர்களின் படத்தை எங்கு வைத்து வழிபடுவது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு. வீட்டு பூஜை அறையில் இறந்தவர்களின் திருவுருவப் படத்தை வைக்கக்கூடாது. அப்படியே சிலர் வைத்திருந்தாலும் கிழக்கில் வைத்து மேற்கு பக்கம் பார்த்தவாறு வைக்கக்கூடாது. தெற்கில் வைத்து வடக்கையும் பார்த்தவாறு இருக்கக்கூடாது.

பூஜை அறையில் இறந்தவர்களின் படம் வைப்பதாக இருந்தால் கட்டாயம் வடக்கில் வைத்து தெற்கு திசை பார்த்தவாறு வைப்பது மிகவும் நல்லது. முடிந்தவரை இறந்தவர்களின் படத்தை பூஜை அறையில் வைப்பதைத் தவிர்த்து கொள்ளவும். உங்களது வீட்டில் வேறு எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இறந்தவர்களின் படத்தை மாற்றிக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் வடக்கு திசையில் மாட்டி தெற்கு திசை பார்த்தவாறு இறந்தவர்களின் படத்தை வைத்து வழிபட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED வென்டிலேட்டர் தயாரிக்க வாகன ஆலைகளுக்கு உத்தரவு