கோவையில் சிறப்பு புலனாய்வுத்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரி சிதம்பரம் நெடுமாறன் (சரத்குமார்), ஒரு விபத்துக்குப் பிறகு ‘அல்சைமர்’ என்ற ஞாபக மறதி நோயால் அவதிப்படுகிறார். ஒரு வருடத்தில் அவரது எல்லா நினைவுகளும் அழிந்துவிடும் என்று டாக்டர் எச்சரிக்கிறார். இந்நிலையில், அந்த நகரில் `ஸ்மைல் மேன்’ என்ற சீரியல் கில்லரால் தொடர்ந்து பல கொலைகள் நடத்தப்படுகின்றன. அப்போது சிபிசிஐடி பிரிவுக்கு புதிதாக வரும் அரவிந்த் (குமார்), அந்தக் குற்றவாளியைப் பிடிப்பதற்காக, இந்த வழக்கை இதற்கு முன்பு திறம்பட கையாண்ட சரத்குமாரிடம் சென்று உதவி கேட்கிறார். இருவரும் சேர்ந்து குற்றவாளியைக் கண்டுபிடித்தார்களா என்பது மீதி கதை.
தனது 150வது படம் என்பதால், சிதம்பரம் நெடுமாறன் கேரக்டரில் அழுத்தம் திருத்தமாக நடித்துள்ள சரத்குமார், அந்த சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்கும் பணி களை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். அவரது வசனங்களும், ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பு சேர்த்துள்ளன. சிபிசிஐடி பிரிவுக்கு வரும் குமார், வசனங்கள் பேசுவதோடு சரி. மற்றும் இனியா, ஓய்வுபெற்ற போலீஸ் ஜார்ஜ் மரியன், விசாரணை அதிகாரி சிஜா ரோஸ், குமார் நடராஜன், ராஜ்குமார், பேபி ஆழியா, கலையரசன், சுரேஷ் மேனன் ஆகியோர், அந்தந்த கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர்.
ஒரு சீரியல் கில்லர் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை விக்ரம் மோகன் கேமரா வழங்கியுள்ளது. சான் லோகேஷின் எடிட்டிங்கும், கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசையும் படத்துக்கு உதவியுள்ளன. ஷியாம், பிரவீன் இணைந்து இயக்கியுள்ளனர். சீரியல் கில்லர் கதையைச் சொல்ல முயற்சித்ததில், லாஜிக்குகளைப் பற்றி கவலைப்படவில்லை. கமலா அல் கெமிஸ் எழுதியுள்ளார். பல காட்சிகள், வசனங்களால் சாதாரணமாக கடந்து சென்றுவிடுகின்றன.