மல்டி மில்லியனர் முருகப்பா சென்றாயர் (தம்பி ராமய்யா), விசாகா என்ற இளம்பெண்ணுடன் தம்பி ராமய்யாவுக்கு தொடர்பு ஏற்படும் நிலையில், அப்பெண் கிரிஷ்சை கரம் பிடிக்கிறார். பிறகு கணவரைப் பிரியும் விசாகா, தம்பி ராமய்யாவிடம் உதவி கேட்கிறார். அவரோ கிரிஷ்சை தீர்த்துக்கட்டும்படி சொல்ல, உதவியாளர்களும் கிரிஷ்சை கொடைக்கானல் மலையில் வைத்து கொன்று விடுகின்றனர். அந்த கொலைப்பழி தம்பி ராமய்யா மீது விழ, அவரது வாழ்க்கை சரிகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
மனநிலை பாதிக்கப்பட்டு, குப்பையில் இருப்பதைச் சாப்பிடும் தம்பி ராமய்யாவின் கேரக்டர் பரிதாபத்தை வரவழைக்கிறது. மிகப்பெரும் செல்வந்தராக அவர் செய்யும் அலப்பறையும், முருக பக்தர் என்று சொல்லிக்கொண்டு 2 இளம்பெண்களுடன் கொட்டமடிக்கும் அவரது அட்டகாசங்களும், ‘ரத்தக்கண்ணீர்’ எம்.ஆர்.ராதாவை நினைவில் கொண்டு வருகிறது. அன்பால் அரவணைக்கும் சமுத்திரக்கனி, இறுதியில் அட்வைஸ் செய்கிறார்.
மற்றும் தீபா சங்கர், ‘ஆடுகளம்’ நரேன், சுபா, ஸ்வேதா, அருள்தாஸ், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபுலேட்டி, வெற்றிக்குமரன், பாடகர் கிரிஷ், கிங்காங் ஆகியோர், கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்துள்ளனர். எழுதி இசை அமைத்துள்ளார் தம்பி ராமய்யா. பாடல்கள் கேட்கும் ரகம். சாய் தினேஷின் பின்னணி இசை, காட்சிகளின் நகர்வுக்கு உதவியிருக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் எஸ்.கேதார்நாத், எஸ்.கோபிநாத் ஆகியோரின் கேமரா, இயல்பாகப் பதிவு செய்துள்ளது. உமாபதி ராமய்யா இயக்கியுள்ளார். டபுள் மீனிங் டயலாக்குகளை தவிர்த்திருக்க வேண்டும்.