×

தென்னங்கூர் பாண்டுரங்கன் -ஒடிஸாபாணி கோபுரம்

தென்னாங்கூர், எழில் நிரம்பிய கிராமம். ஒடிசா மாநிலத்து பூரி ஜெகந்நாதர் ஆலயத்தைப் போன்ற பிரமாண்ட தோற்றத்துடன் இங்கு
பாண்டுரங்கன் கோயில் அமைந்திருக்கிறது. 120 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் உச்சியில், ஒன்பதரை அடி உயரமுள்ள தங்க கலசமும் அதன் மேல் அற்புதமான சுதர்சன சக்கரமும், பட்டொளி வீசி பறக்கும் காவி வண்ணக்கொடியும் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தும். அதேசமயம், கிழக்கே உள்ள ராஜகோபுரத்தில் தமிழக கட்டிடக் கலை அம்சம் திகழ்கிறது.

ஞானானந்தகிரி சுவாமிகளின் சீடரான ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் உருவான தெய்வீக சாம்ராஜ்யம்தான் தென்னாங்கூர். கோயிலினுள் நுழைந்ததும் பலிபீடமும், அடுத்து நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபமும் உள்ளன. நடுவில் கருடாழ்வார் சேவை சாதிக்கிறார். முழுவதும் சலவை கற்களால் அமைக்கப்பட்ட தியான மண்டபம். விழாக்காலங்களில், பாண்டுரங்கன், இந்த மண்டப ஊஞ்சலில் எழுந்தருளுகிறார்.

 மகா மண்டபத்தினுள் கண்ணனின் லீலா வினோதங்கள், கண்ணாடியில் இழை ஓவியங்களாக காட்சியளிக்கின்றன. மேற்கூரையில் விஷ்ணு தன் பத்து அவதார வண்ண ஓவியங்களால் நம்மை ஆசிர்வதிக்கிறார். பலவகை ஆபரணங்கள் அணிந்து பாண்டுரங்கனும், ரகுமாயியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி அருள்கின்றனர். வெள்ளிக்கிழமையில் விசேஷ திருமஞ்சனத்திற்குப் பின், கவசம், ஆபரணம் ஏதுமின்றி எளிமையாகக் காட்சியளிக்கிறார் பாண்டுரங்கன்.

அன்று பாத தரிசனமும் காணலாம்.சனிக்கிழமையில் சங்கு, சக்கரம், சாளகிராம மாலை, ஸஹஸ்ரநாம மாலை, வக்ஷஸ்தலத்தில் மகாலட்சுமி, மரகதப் பதக்கம், உடைவாள், மகரகண்டி, நாகாபரணம், ஸ்வர்ண மயமான கிரீடம், நெற்றியிலே பச்சைக்கற்பூரத் திருமண் காப்பு, இடையில் பீதாம்பரம் தரித்துக்கொண்டு எம்பெருமானும், கிரீடம், குண்டலங்கள், புல்லாக்கு, அட்டிகை, காசுமாலை, ரத்ன ஆரங்களுடன் பட்டாடை உடுத்தி எம்பெருமாட்டியும் திருப்பதி ஏழுமலையான்-அலர்மேல் மங்கைத் தாயாராகக் காட்சியளித்து, பக்தர்களின் ஏழ்மையை விரட்டி பாதுகாப்பு தருகிறார்கள்.
 
துவாபர யுகத்தில் கிருஷ்ணன், தமால மரத்தடியில் நின்று புல்லாங்குழல் கானம் இசைத்திருக்கிறார் கண்ணன். அந்த தமால மரமே இத்தலத்தின் விருட்சம். இங்கு மட்டுமே இந்த விருட்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது. வந்தவாசி-காஞ்சிபுரம் வழியில் உள்ளது தென்னாங்கூர்.

Tags : Thennangur Pandurangan-Odisabani Tower ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்