×

தமிழகத்தில் தசமஹா தேவியர்

* கீழாந்துறை - அரக்கோணம்

அண்ட சராசரம் அனைத்துமாகி, அவற்றிலுள்ள உயிர்க்குலம் யாவுமாகிய, பிரபஞ்ச வாழ்வை நடத்தி வைக்கும் மகாசக்தியை அநுபூதிமான்கள் பலப்பல தெய்வ வடிவங்களில், பலப்பல வீலாவிநோதங்கள் புரிவதாகக் கண்டிருக்கிறார்கள். பிறருக்கும் அவற்றைக் கொடுப்பதற்கான உபாசனாக் கிரமங்களை முறையாகக் கொடுத்திருக்கின்றனர். இவையே தந்திர சாஸ்திரங்கள் எனப்படும். அவற்றில் பராசக்தியின் பத்து வடிவங்கள் ‘தசமகாவித்யா’ என்ற பெயரில் சிறப்பிக்கப்படுகின்றன.

பத்து உருவங்கள்: காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, திரிபுர பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பத்துச் சக்திகளிலிருந்தே திருமாலின் தசாவதாரங்களும் தோன்றின என்பர். அந்த தசமஹாவித்யா தேவியரும் திருவருள் புரியும் திருத்தலம் பூஜ்ய ஸ்ரீ நாராயண தீர்த்தர் எனும் கங்கோத்ரி ஸ்வாமிகளால் தேவியின் திருவுளப்படி 48 நாட்களில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11 அன்று தமிழக ஆளுநர் மேதகு. பன்வாரிலால் ப்ரோஹித் அவர்கள் முன்னிலையில் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த தேவியரின் மகிமைகளை அறிவோம்.
 
1. காலமெல்லாம் காளி...

காலம் என்கிற விந்தைத் தத்துவத்தின் தெய்வ வடிவமே காளி. காலம் என்றால் கருநிறம் என்று ஆகும். இவள் கரு நிறத்தவள். காலத்தின் மாற்றத்தை இவள் செய்துவருகின்றாள். இறப்புக்கு ரூபமாக இருக்கிறாள் காளி. உலகையே மகா மயானமாக்கி, மயான ருத்திரனார் மீதே நின்றாடுகிறாள் காளி, கோரமும் இறைவன் செயல் என்று தெளிந்து, அழகைப் போலவே கோரத்தையும் ஏற்கும் பொருட்டுப் பயங்கரத்தை உருவகித்துக் காட்டுகிறாள். காளியன்னை கூரிய நகங்களும், கொடூர ஏளனமான நகையும், தொங்கும் நாவு கொண்டு நிர்வாணமாயிருப்பாள்.  அல்லது சவங்களைப் பின்னிய ஆடை, முண்டமான கபாலரத்ன தலையணி இவற்றை அணிந்திருப்பாள். கரத்தில் கத்தியும், கத்தியால் வெட்டிய தலையையும் பிடித்திருப்பாள். ஆயினும் மற்ற இரு கரங்கள் அபயமும் வரதமுமாக இருக்கக் காண்கிறோம்.பலன்கள்: இக்காளியை தரிசித்தால் மனதில் அமோகமான தைர்யமும், வாக்கில் நல்ல வல்லமையும், முன்கூட்டறியும் தன்மையும், நிகரற்ற செல்வமும், நோய் நொடியற்ற நீண்ட வாழ்வும் சாஸ்திர ஞானமும் அதனால் முக்தியும் கிடைக்கும்.
 
2. தடைகளை தகர்க்கும் தாரா
பத்து விதமான வித்யா தேவதைகளில் ஒருத்தியான தாராவிலேயே ஐந்து வகையர் உண்டு. அவர்கள் நீலசரஸ்வதி, உக்ரதாரா, சுக்லதாரா, நீலதாரா, சித்ரதாரா என்போர். உண்மை நிலை: உணர்வுகள் நசிக்கிற பேருணர்வு வடிவினள் என்பதை உணர்த்தவே இவள் ஒரு காலால் சவத்தை மிதித்துக் கொண்டிருக்கிறாள். வாழ்க்கை முடிச்சை வெட்டுவதற்காகக் கத்திரிக்கோலும், அகங்கார நீக்கத்தைக் காட்ட மண்டை ஓடும் வைத்துள்ள இவளது இன்னொரு கரத்தில் ஞான வாளும், இந்த பயங்கரங்களுக்கு ஈடு செய்வதைப்போல எஞ்சிய கரத்தில் ஆன்ம மலர்ச்சியைக் காட்டும் குளிர் நீலத்தாமரையும் தரித்திருக்கிறாள். மூவுலகை அறியாமையையும் கபாலத்தில் வாங்கிக்கொண்டு ஒரு நொடியில் அழித்து விடுவாளாம்.
பலன்கள்: போக, மோக்ஷங்கள் இரண்டையும் இத்தேவியை தரிசித்தால் அடையலாம். முக்கியமாக வாக்ஸித்தி, கவிதாலாபம், ராஜ ஸன்மானம், செல்வம், பதவி இவைகளை சுலபமாக அடைய வழியாகும். கடைசியில் வேதாந்த வாக்ய ஞானத்தினால் மோக்ஷமும் பெறலாம். ஆக்ஞானத்தை அகற்றித் தன் கையிலுள்ள கபாலத்தில் போட்டு பொசுக்கி மூவுலகத்தை காப்பாற்றும் ஸ்வரூபமல்லவா தேவியின் வடிவம்.
 
3. திருவருள் புரியும் திரிபுரசுந்தரி...

பொதுவாக ஸ்ரீ வித்யா என்றாலே இவளைத்தான் எண்ணுவர். லலிதை என்றும், ராஜராஜேஸ்வரி என்றும் காமாட்சி என்றும், காமகோடி என்றும் போற்றப்படுபவள் இவளே. திரிபுரசுந்தரி என்றால் மூவுலகிலும் அழகி என்பது வெளிப்பொருளாம்.திருவுருவம்: நமது ஆசையை அடக்கப் பாசமும், துவேஷத்தை அடக்க அங்குசமும்,  ஐம்புலன்களைக் கவர ஐந்து மலர்ப்பாணங்களும், மனத்தை இழுக்கக் கரும்பு வில்லும் கொண்டு விளங்குகின்றாள் திரிபுரசுந்தரி. அமரும் சிறப்பு: இவள் பரம புனிதமான  சக்கரத்தின் மத்தியில் சகல சக்திகளும் பற்பல வெளிச்சுற்றுகளில் தன்னைச் சேவிக்கும்படியாக விளங்குகின்றாள். இப்போது தசமாக வித்யைகளில் வேறு இருவரான மாதங்கீயும் பகளா முகியும் முறையே இவளுக்கு மந்திரிணியும், சேனாநாயகியும் ஆகிறார்கள். இவளே ஐந்தொழில் புரிகிறவள் என்பதால் பிரம்மனும், விஷ்ணுவும் ருத்திரனும், மாயைக்கு அதிபனாம் மகேசுவரனும் இவளது மஞ்சத்தின் நாலு கால்களாகவும் அமரும் பீடமாகவும் ஆகிறார்கள்.
பலன்கள்: சகல ஸெளபாக்கியங்கள்.

4. பொன்னாக்கும் புவனேஸ்வரி...
காலமாக விரிந்தவள் காளி, இடமாக விரிந்தவள் புவனேஸ்வரி. காலவெள்ளத்தில் புவனவெளிகளைப் பூக்கச் செய்தவள் இவளே. உடனே புவனங்களை நிரப்ப பசு, பட்சி, மிருகம், பாம்பு, ஆண், பெண், என்று அனைத்து ஜீவராசிகளும் தோன்றிவிட்டனர். அவர்களுக்கு உருவங்களும் பெயர்களும் வந்தது இவளால்தான். அவைகளை ஆளும் புவனேஸ்வரியாக இவள் ஆனாள். இவளையே பிரகிருதி அல்லது இயற்கை எனலாம். இவள் மாயை ஆயினும் நாம் பிரார்த்தித்தால் இவளே மாயை நீக்கி மெஞ்ஞானத்தை நல்குவாள். ‘தேவீ ப்ரணவம்’ எனப்படும். ‘ஹ்ரீம்’ காரத்தை மந்திரமாகக் கொண்டவள் இம் மகாமகாசக்தி.பலன்கள்: புவனேஸ்வரியின் தரிசனத்தினால் உலகங்களை ஜெயிக்கும் ஆற்றலை சாதகன் அடைகிறான். அளவில்லா செல்வமும், வாழ்க்கை வளமும், பதவி உயர்வும் நிச்சயமாகப் பெறுவான், உலகங்கள் எல்லாம் தன் ஆத்மாவே என்ற சர்வாத்மபாவம் (எங்கும் நானே உள்ளேன் என்கிற நிச்சயம் பெறுகிறான்.
 
 5. திருப்பங்கள் தரும்திரிபுரபைரவி...
திரிபுர சுந்தரி அன்பின் வடிவம், பைரவம் என்றால் அச்சமூட்டுதல், திரிபுர பைரவி, ஆனால் கோரச் செயல் செய்து அச்சமூட்டவில்லை.  தங்களது மகிமை காரணமாகவே சிலர் தம்மை நாம் அணுகவொட்டாமல் அச்சுறுத்தவில்லையா? அப்படித்  தபோசக்தியாலேயே நமக்கு பைரவி ஆனவள்.

திருவுருவம்: மூலாதாரத்தில் இவள் தபோக்கினியானாலும் சிரத்தில் ஸஹஸ்ரார உச்சிக்கு ஆரோகணித்து சுந்தரி ஆகும்போது அமுதமழை வர்ஷிக்கிறாள். இவள் ஞானமாவதாக விளங்குகிறாள் எனக்காட்டவே ஜபமாலையும் ஞான முத்திரையும் தாங்கியிருக்கிறாள். அபயம் தந்து வரத முத்திரையும் காட்டுகிறாள். நெற்றியில் ஞானக்கண்ணோடும் இதழ்களில் புன்னகையோடும் காணப்படுகின்றாள். ஞானாமுதம் பாய்ச்சுவேன் எனக் காட்டவே அமுதத்தைப் பிறப்பிக்கும் மதியைத் தலையில் சூடியிருக்கிறாள்.பலன்கள்: ஜாதவேதஸே என்கிற வேத மந்த்ரத்தினால்  இத்தேவியை உபாஸித்தால் பீடாபரிஹாரமும், தனலாபமும், சகல சம்பத்தும் ஏற்படும். லௌகீக, சாஸ்திரீய, ஞான விருத்தியும் அடையலாம். முக்தியையும் இத்தேவியை வணங்கினால் பெறலாம்.
 
 6. தியாக தேவி சின்ன மஸ்தா
காளியின் பயங்கரத்தையும் அற்பமாக்கும் ஒரு கோரம் உண்டெனில் அது சின்னமஸ்தாவே ஆகும். தியாக சொரூபம்: ஒரு கையில் வெட்டப்பட்ட ஒரு தலை யாருடைய தலை? சாட்சாத் அவளுடையவரேதான்! அதனால்தான் இவளுக்கு சின்ன மஸ்தா என்றே பெயர். (சின்ன-துண்டித்த; மஸ்தா தலையினள்) இந்திரியங்கள் போனால் போதாது, அகங்கார மனம் தொலைய வேண்டும் என்று காட்ட தன் தலையையே கொய்து கொண்டிருக்கும் தியாக ஸ்வரூபி இவளே. வெட்டிய கழுத்திலிருந்து முன்பு சொன்ன மூன்று நாடிகளினின்று மூன்று குருதி ஊற்றுக்கள் வெளிவருகின்றன. ‘வாருணி’, ‘டாகினி’ என்ற இவளது சேடியர் இருவர் இடை பிங்கலையிலிருந்து வரும் குருதியைப் பருகுகின்றனர்.இவளது வெட்டுண்ட தலையே மத்ய நாடியாம். கழுமுனையின் சக்தியைப் பருகுகிறது. இடி, மின்னல், என்ற அடையாளங்களைக் காட்டி, ஒலி, ஒளி என்ற இரு சக்திகளைத் இறைத் தன்மையிலிருந்து பேதப்படுத்தி வெளிக்கொணர்ந்த மகாசக்தி ஆவாள்.

இந்த ஒலி ஒளிகளோடு ஞானமாகவும் புகுகிறாள். இம்மூன்று நாடிகள் மூலமாக, அதையே இந்த மூவரின் ரத்த பானம் சித்தரிக்கிறது. மீண்டும் மூலத்தில் தோய வேண்டுமாயின் ஜீவ (உயிர்) முடிச்சை வெட்ட வேண்டும். அதனால்தான் இவள் ஒரு கரத்தில் ‘கத்ரிக்கோல்’ வைத்திருக்கிறாள். ஆக இவளது உருவம் கொடுமையாக இருப்பினும் செயலோ மதுரமாக இருக்கிறது. அபயவரதங்களை இவளும் கொண்டுள்ளான்.சின்ன மஸ்தாவின் சின்னாபின்னமான மஸ்தகமே ரேணுகை என்றும், தலையை வெட்டிக்கொண்ட இவளே பரசுராம அவதாரத்தின் மூல சக்தி என்றும் கருதப்படுகிறது. பஞ்ச இந்திரியங்கள், மனம் ஒன்று ஆக இந்த ஆறினை அடக்கும் இவள் ‘ஷஷ்டி தேவி’  என்றே சிறப்பிக்கப்படுகிறாள்.’’ பலன்கள்: இந்த தேவியின் க்ருபையால் ஸாதகன் சிவத்தன்மையை அடைவான். புத்ர தனதான்யாதிகளை வெகு சீக்கிரம் அடைவான். அம்பாளின் அனுக்ரஹத்தினாலேயே கவித்வம், பாண்டித்யம் அடைந்து தன்யன் ஆகிறான் இந்த உபாஸனத்தால் பெற முடியாதது ஒன்றும் இல்லை. சகல சம்பத்துகளையும் அடைந்து நிஷ்காம த்யானத்தால் வேதாந்த வாக்ய ஞானமும் அதனால் பரமானந்த லாபமும் அடைவான்.
 
7. துயர் துடைப்பாள் தூமாவதி
சின்னமஸ்தாவிடம் எந்த அளவு வேகம் பொங்குகிறதோ, அந்த அளவு சோம்பி, சோம்பிக் கிடப்பவள் ஒருத்தி உண்டெனில், அவளே தூமாவதி. ஒன்று அழிவதற்கும் மற்றொன்று உண்டாவதற்கும் இடையில் செயலற்றதோர் இடைவெளி உண்டல்லவா? அதுவே இவள்.இது உண்மையில் பாழிடம்தானா? ஒன்று நிறைவும் அதில்தான். இன்னொன்றின் வித்தும் அதில்தான்,அதை எப்படி சூனியம் எனலாம்? எனவேதான் இவளை ‘இருட்சக்தி’ என்னாமல் ‘புகை சக்தி’ என்பர். (தூபம் - புகை), புகை, இருள் போலத்தான் இருக்கிறது. ஆனால் ஒளிமய அக்கினி இன்றி இது இல்லையே! மகா விஷ்ணுவின் யோக நித்திரை இவளேயாவாள். இந்த சந்நதி மட்டும் காலை ஏழு மணி முதல் ஏழேகால் வரையிலும் மாலை ஆறு மணி முதல் ஆறேகால் வரையிலும் திறந்திருக்கும். தப்பர்த்தம் கற்பித்துக் காட்டுகிற  ஏமாற்றுச் சக்திக்கும் தூமாவதி அதிதேவதையாகக் கூறப்படுகிறாள். இது ஆக்க சக்தி அல்லவா! இதனால்தான் இவள் வெளிறிப் போனவளாகச் சித்தரிக்கப்படுகிறாள்.

இவள் தளர்ந்தவளாக அங்கங்கள் தொங்கித் தளர்ந்து பல்விழந்து சீவாத முடியும், அழுக்கு உடையுமாகக் காட்சி தருகிறாள். மேலும் காக்கைக் கொடியையும் கொண்டுள்ளாள். மேலும் ஒரு கரத்தில் முறத்தையும் மற்றொரு கரம் வரம் நல்கும் உத்தம பாவத்திலும் உள்ளாள். தூமாவதியானவள் நம் சிந்தனை என்கிற தவிட்டைப் புடைத்து, உண்மை நாமமான ஆத்ம அரிசி மட்டுமே நிற்கிற தூக்க நிலையை நமக்கு என்றென்றும் அளித்துக் களைப்பாற்றும் கருணைத்தாயாக விளங்குகின்றாள். இவள் ஒருத்தியே தசமகா வித்யாக்களுள் நெற்றியில் திலகமில்லாது புருஷன் அற்றவள் போல சித்தரிக்கப்படுகிறாள். பலன்கள்: ஊர்த்வாம்னாய தந்த்ரத்தில் தூமாவதீ ஸ்தோத்ரம் உள்ளது. அதில் பலச்ருதியில் பெருங்கஷ்டத்திலும், மஹா சங்கடத்திலும், ரோகத்தால் அவதிப்படும் காலத்திலும் சத்ருக்களை நிக்ரஹம் செய்ய நினைக்கும்போதும் தூமாவதீ ஸ்தோத்ர பாடம் கார்ய ஜயமளிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
 
8. சிந்திப்பதை சீராக்கும் பகளாமுகீ

காளி முழுவதையும் அழிக்கின்றாள். பகளாமுகியோ, செயல் முன்னிலும் திறம்பட நடைபெறும் பொருட்டுச் செயலைத் தடைப்படுத்துபவள். பிறகு விட்டு விடுகிறாள். மூச்சை இறுக்கிப் பிடித்து தடை போடத்தான். ஆனால் இம்மாதிரி சிறிது போது செய்து பிறகு அதை விட்டால் அதுவே உயிர் வளர்க்கும் பிராணாயாமம் ஆகிறதல்லவா? இப்படிப் பிடித்து வைப்பதனை ‘ஸ்தம்பனம்’ என்பர். பகளாமுகி தேவியானவள். ‘வாக் ஸ்தம்பனக்காரி’. அதாவது பேச்சைத் தடுத்து நிறுத்துபவள். பின்னர் சிந்திக்கச் செய்திடுவாள்.

இவள் தனது இடதுகையால் ஒருவனின் நாவைப் பிடித்திழுப்பதாகவும் வலது கையால் கதை என்னும் ஆயுதத்தினைத் தாங்கி அவனது சிந்தனையை அடித்து வீழ்த்தத் தயாராக இருப்பதாகவும் சித்தரிக்கப்படுகிறாள். ‘வல்கா’ என்றால் ‘லகான்’. எதிரியின் வாயில் (முகத்தில் லகான் போட்டு திணர அடிக்கும் வல்கா முகியே வகலா முகியானதாகச் சொல்வார் உளர்.) வடமொழியின் ‘வ’வும் ‘ப’வும் ஒன்றுக்கொன்று மாறும். பலன்கள்: சத்ரு ஜயம் முக்ய ப்ரயோஜனம். காம க்ரோதாதி அகச் சத்ரு நிக்ரஹமும், சமாதி லாபமும் பிரயோஜனங்கள். சமாதி லாபத்தால் ஆத்ம ஞானமும் மோக்ஷமும் கிடைக்கும். பீதாம்பராதேவியின் அருளால் குபேரன் போன்ற செல்வமும், நல்ல பதவியும், உலகத்தை ஆட்டி வைக்கக்கூடிய சக்தியும் கிட்டும்.
 
9. மங்களமே மாதங்கி
காஞ்சி காமாட்சியை அரசி எனில் அவளது மந்திரிணியாக உள்ளவளே மாதங்கி. ஆனால் இவளே பூரண மகாசக்தியாக சக்ரவர்த்தினியாக மதுரையில் மீனாட்சியாகப் பிரகாசிக்கிறாள். பிறக்கும் சங்கீதம் முதலான கலைகளுக்கு அதிதேவதையாவாள். இவள் கரத்தில் பிடித்துள்ள வீணையும் பச்சைக் கிளியுமே இதைச் சொல்லிவிடும். ஒரு நிலையில் மந்திரிணி என்றாலும் இப்போது இவள் ராணி என்பதால்தான் ராஜமாதங்கி ராஜசியாமளா எனப்படுகின்றாள்.சண்டாளரான மாதங்கர் மாதவம் புரிந்து மதங்க முனிவரானார். அவர் தவத்துக்கு அருள் கூர்ந்து அவரது மகளாகப் பிறந்தவளே மாதங்கி. ‘சண்டாளி’ இவள் உயர்வினும் உயர்வானவள் என்பதற்கே ‘உத்சிஷ்ட’ என்ற அடைமொழியும் கொண்டாள்.

பலன்கள்: ஸாதகன் மேற்கூறிய நிபந்தனைகளுடன் மாதங்கீயை உபாஸனை செய்தால் வெகு சீக்கிரத்தில் உலகத்திலேயே சிறந்தவளாக விளங்குவாள். உலகத்தையெல்லாம் தன்வசமாகச் செய்துகொள்வாள். மாதங்கியே ஸர்வசங்கரி அல்லவா! நாதோபாசனையாலும், சாஸ்திர ஞானத்தாலும் அளவு கடந்த செல்வமும் நல்ல புகழையும் மோக்ஷத்தையும் இத்தேவியை தரிசனத்தால் அடையலாம்.
 
10. கைவிடாள் கமலாத்மிகா
இப்பெயரினைச் சொல்லும்போதே இவள் மகாலட்சுமி என்று விளங்கும். பரம்பொருளின் அழகும் ஆனந்தமும் வெளிப்படையாவதையே ‘கமலாத்மிகா’ என்கிறோம். ஜீவசாரத்தைக் குறிக்கும் க்ஷீரசாகரத்தில் (பாற்கடல்) தோன்றியவள். அமுதத்துடன் அமுதமனத்தாள். இந்து எனும் சந்திரனின் சோதரியாம் இந்திரை இவளே. வாழ்வுக்கடலில் முளைத்த இன்பக்கமலமாக மதிக்கப்படுபவள். கடலிடை கமலத்தே இடம் கொண்டாள். மென்மை, செழிப்பு, சுந்தரம், தூய்மை, மங்கலம் அனைத்துக்கும் உருவான இருகமலங்களைக் கையிலும் தரித்து, மற்ற இரு கரகமலங்களால் அபயவரதம் காட்டும் வரதன் பத்தினி இவளே. இப்பொன்னிறப் பொன்னியை நான்கு  யானைகள் எப்போதும் நீராட்டி, இவளது உள் குளுமையை வெளிக்காட்டுகின்றன.பொருள் வறுமை மட்டுமின்றி அறிவு வறுமையையும் நீக்குவதில் ‘சரஸ்வதி’ அம்சமும் உட்கலந்தவள் ‘கமலாத்மிகா’. நீரிடை வாழும் இந்த நிமலையே மீனாக (மச்சாவதாரம்) வந்த திருமாலின் முதல் அவதாரத்துக்கு எழுச்சி தந்தவள். பலன்கள்:

இந்த கமலாத்மிகா தேவியின் அருளால் உலகத்தில் நிகரற்ற செல்வத்தையும், சரீரத்தில் அழகையும், பதவியையும், ஆன்மிகத்துறையில் முன்னேற்றத்தையும் அடையலாம். வேத காலத்திலிருந்து அனைவராலும் வாழ்நாள் முழுவதும் உபாஸிக்கப்படும் தெய்வம் கமலாத்மிகா ஆவாள். இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேவியர்க்கு புஷ்பயாகம் நடக்கிறது. ஒவ்வொரு பவுர்ணமி அமாவாசையன்றும் மாலை 4 மணிமுதல் 6.30 வரை நவாவரண பூஜையும் நடக்கிறது. அதில் கலந்து கொண்டால் திருமணத்தடை விலகி, சர்வமங்களங்களும் உண்டாகிறது. தொடர்புக்கு: ராஜமாதங்கி குழுமம் சவுந்தர்ராஜன். 9710195285. ராஜமாதங்கி சமேத ராஜராஜேஸ்வரர் ஆலயம். கீழாந்துறை கிராமம். நாகவேடு அருகில். அரக்கோணம். அரக்கோணம் ரயில்வே கேட்டில் இறங்கி வேலூர் ஒச்சேரி பாதையில் 8 கி.மீ.தொலைவில் நாகவேடு உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ தோலைவில் இத்தலம் உள்ளது.

- ந.பரணிகுமார்

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...