×

அம்மனுக்கு அகல் விளக்கு ஏற்றினால் தம்பதியரிடையே அன்யோன்யம் கூடும்

?கடந்த இரண்டு ஆண்டுகளாக கடன் பிரச்னை மிகவும் அதிகமாக உள்ளது. மூச்சுவிடக் கூட முடியாத அளவிற்கு கடன் கொடுத்தவர்கள் நச்சரிக்கிறார்கள். என் மனைவியின் பெயரில் உள்ள  சொத்தை விற்று கடனை அடைக்க முயற்சிக்கிறேன். விலை போகாமல் தடைபட்டுக் கொண்டே வருகிறது. நான் கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், சொத்திற்கு நல்ல விலை கிடைக்கவும் உரிய பரிகாரம் கூறுங்கள்.
- சுந்தரம், திண்டுக்கல்.

உங்கள் இருவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் தற்போது நடைபெற்று உள்ள குருபெயர்ச்சி மிகவும் சாதகமான பலனைத் தருகின்ற வகையில் அமைந்துள்ளது. உங்கள் ஜாதகத்தில் ராகு தசையில் சுக்கிர புக்தியும், உங்கள் மனைவியின் ஜாதகத்தில் சுக்கிர தசையில் ராகு புக்தியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் விலையை விட சற்று கூடுதலாகவே உங்கள் சொத்து விலைபோகும். உங்கள் கடன்கள் மொத்தமும் அடைபடுவதோடு மட்டுமல்லாது நீங்கள் புதிதாக மற்றொரு சொத்து வாங்கும் வாய்ப்பும் வந்து சேரும். புதிய சொத்து வாங்கும்போது கிழக்கு திசை நோக்கிய வாயிற்படி அமையும் வண்ணம் வாங்குவது நல்லது. உங்கள் இருவரின் ஜாதக பலத்தின்படியும் பழைய கடன்களிலிருந்து விடுபட்டு வெகு விரைவில் புதிய சொத்துக்களை நிச்சயம் சேர்ப்பீர்கள். கவலை வேண்டாம். வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று நரசிம்மர் சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கி வாருங்கள். சுவாதி நட்சத்திர நாளில் அன்னதானம் செய்வதும் நல்லது. நவம்பர் 2020ற்குள் கடன் பிரச்சினை தீர்ந்துவிடும்.
'லக்ஷ்ம்யா லிங்கித வாமாங்கம்
பக்தாநாம் வரதாயகம் ஸ்மரணாத்
ஸர்வ பாபக்நம் தத்ரூஜ விஷநாசநம்'.

?இரட்டைப் பிறவிகளான எனது மகன்களில் ஒருவருக்கு சொந்தத்தில் திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகனுக்கு திருமணம் செய்ய மூன்று வருடங்களாக முயற்சித்து வருகிறேன். தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. திருமணம் ஆன மூத்த மகனுக்கும் அவனது மனைவிக்கும் இடையே அவ்வப்போது மனஸ்தாபம் உண்டாகிறது. இளையவனுக்கு திருமணம் நடக்கவும் மூத்தவன் நல்லபடியாக குடும்பம் நடத்தவும் வழிகாட்டுங்கள்.
- கருணாகரன், கிருஷ்ணகிரி.

உங்கள் பிள்ளைகளின் ஜாதகப்படி அவர்கள் இருவருக்கும் நீங்கள் தனியாக வெளியில் பெண் தேட வேண்டிய அவசியம் இல்லை. இரட்டைப் பிறவிகளில் மூத்தவருக்கு தாய் வழி சொந்தத்தில் மணம் முடித்ததைப் போல மற்றொருவருக்கு தகப்பனார் வழி சொந்தத்தில் பெண் காத்திருக்கிறார். சொந்தங்கள் கூடுகின்ற ஆலயத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சி ஒன்றினில் சம்பந்தம் பேசி முடிப்பீர்கள். 07.08.2020 வாக்கில் இளையவரின் திருமணம் முடிவாகிவிடும். குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் இருவரின் குடும்பமும் சிறப்பாக வாழும். உங்கள் மூத்த மகன்- மருமகள் இருவருக்கும் இடையே உள்ள மனஸ்தாபம் கூட தற்காலிகமானதே தவிர நிரந்தரமானது அல்ல. அது குறித்து கவலைப்படாதீர்கள். அவர்கள் இருவரையும் ஆறு வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று ஆறு அகல் விளக்குகள் ஏற்றிவைத்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். தம்பதியருக்குள் இருக்கும் பிணக்கு நீங்கி அன்யோன்யம் கூடும். இளையவர் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை தினமும் காலையில் மூன்று முறை சொல்லி பெருமாளை வணங்குவதால் அவருக்குரிய மணமகளை விரைவில் காண்பார்.
“வனமாலி கதீசார்ங்கீ சங்கீ சக்ரீ சநந்தகீ
ஸ்ரீமந் நாராயணோர் விஷ்ணு: வாஸூதேவோ அபிரக்ஷது.”

?இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகிய என்னை எனது கணவர் சந்தேகப்படுகிறார். வீட்டின் அருகில் வசிக்கும் வேறொரு ஆணுடன் இணைத்து பேசுகிறார். இதனால் குடும்பத்தில் சண்டையும், தேவையில்லாத மன உளைச்சலும் நிலவுகிறது. நல்ல தீர்வு சொல்லுங்கள்.
- ஒரு வாசகி, திருச்சி.

உங்கள் ஜாதகப்படி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சனி தசை நடந்து வருகிறது. அது முதலே நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறீர்கள் என்பது புரிகிறது. உங்கள் ஜாதகத்தில் சுப கிரஹங்களான சுக்கிரன், குருவோடு செவ்வாயும் வக்கிரம் பெற்ற நிலையில் சஞ்சரிப்பது சற்று சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது. வக்ரம் பெற்ற சனியோடு ராகுவும் இணைந்திருப்பதால் நீங்கள் நல்லது செய்தாலும் அது மற்றவர் கண்களுக்கு தவறாகப்படுகிறது. யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாது படபடவென்று செயல்படும் உங்களது குணமே உங்களுக்கு பலமாக உள்ளது. அதை மாற்றிக் கொள்ள வேண்டாம். மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி நாளில் திருச்சி மலைக்கோட்டையை மூன்று முறை கிரிவலம் வாருங்கள். முடிந்தால் உங்கள் கணவரையும் உடன் அழைத்துச் செல்ல முயற்சியுங்கள். கிரிவலம் செய்து முடித்துவிட்டு தெப்பக்குளம் அருகில் உள்ள நாகநாதர் ஸ்வாமி ஆலயத்தில் வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கணவரின் மனதில் உள்ள சந்தேகங்கள் நீங்குவதோடு
குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி பொங்கும்.

?2012ல் நடந்த என் பேத்தியின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவது திருமணம் எப்போது நடைபெறும்? 89 வயதாகும் நான் கொள்ளுபேத்தியை பார்த்துவிட்டு கண்ணை மூட ஆசைப்படுகிறேன்.
- பாலகிருஷ்ணன், ஈரோடு.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் புதன் புக்தி நடப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுடைய ஜோதிட அறிவை கடிதத்தில் வெளிப்படுத்தியிருப்பதுடன் பலமுறை எழுதியும் உங்கள் கடிதம் பிரசுரிக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். அது மட்டுமில்லாது பெண் பார்க்க வருகின்ற மாப்பிள்ளை வீட்டாரையும் வெகுவாகக் குறை கூறி எழுதியுள்ளீர்கள். குறைகளை மட்டுமே கருத்தில் கொண்டு மாப்பிள்ளை தேடும் பட்சத்தில் சம்பந்தம் அத்தனை எளிதாக அமைந்துவிடாது. அதோடு நான் இன்னும் ஆறுமாதம்தான் இருப்பேன், அதற்குள் என் பேத்தியின் 2வது திருமணத்தை நடத்திவிடவேண்டும், உரிய பரிகாரம் சொல்லுங்கள் என்றும் வினவியுள்ளீர்கள். உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகத்தில் வக்ரம் பெற்ற குருவுடன் கேது இணைந்திருப்பதும், ஏழாம் பாவக அதிபதி சந்திரன் எட்டில் அமர்ந்திருப்பதும் அத்தனை சாதகமான அம்சம் கிடையாது. 31வது வயதில் துவங்கும் சந்திர தசையின் காலத்தில்தான் அவரது மணவாழ்வு நல்லபடியாக அமையும். உங்களுடைய அவசரத்தை அவரது வாழ்வினில் பிரதிபலிக்கக் கூடாது. உங்கள் பேத்தியிடம் திங்கட்கிழமை தோறும் அபிராமி அந்தாதி பாடல்களை படித்து வரச் சொல்லுங்கள். அம்பிகையின் அருளால் அவரது மணவாழ்வு நல்லபடியாக அமையும்.

? 28 வயதாகும் என் மகன் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்து வருகிறான். வயதான காலத்தில் பெற்றோர் ஆகிய நாங்கள் அவனுக்கு திருமணம் செய்துவைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். அவன் மனம் திருந்தி திருமணத்திற்கு சம்மதிக்க என்ன செய்ய வேண்டும்?
- ஒரு வாசகி, காவேரிப்பட்டிணம்.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் அவரது மனதில் ஏற்கெனவே திருமணம் ஆகி வாழ்க்கையை இழந்த ஒரு பெண்ணைப் பற்றிய சிந்தனை இருப்பதாகத் தெரிய வருகிறது. உங்கள் மகனிடம் மனம் விட்டுப் பேசி அவரது மனக் குழப்பத்தினை தீர்க்க முயற்சியுங்கள். அவருடைய மனதிற்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணையே நீங்கள் அவருக்குத் திருமணம் செய்து வைக்கலாம். வாழ்க்கையை இழந்த ஒரு பெண்ணிற்கு வாழ்வளிப்பது என்பது பல மடங்கு புண்ணியத்தைத் தரும். அவருக்கு தற்போது ஏழரை சனி நடந்து வந்தாலும் இதுபோன்ற புரட்சிகரமான திருமணத்தினை சனிபகவான் தடைசெய்ய மாட்டார். உண்மையில் சனியின் தாக்கம் இருப்பவர்களால் மட்டுமே இதுபோன்ற வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள இயலும். ஆகவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்ன பேசுவார்களோ என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் மகனின் ஆசைப்படியே அவரது திருமணத்தை நடத்துங்கள். திருமண நாள் அன்று ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதாக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வருகின்ற 25.08.2020ற்குள் உங்கள் மகனின் திருமணம் நல்லபடியாக நடந்தேறும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார், திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

Tags :
× RELATED விஷம் குடித்த தாய் சாவு: மகளுக்கு சிகிச்சை