×

மங்களம் அருள்வார் தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகில் உள்ள கிராமம் தென்கலம். இக்கிராமத்தில் தெற்கு மலையில் எழுந்தருளி அருட் பாலிக்கிறார்  அய்யப்பன். சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தென்கலம் கிராமத்தில் வாழ்ந்து வந்த சுப்பையா குருசாமி  என்பவர் இளமைப்பருவம் முதலே இறைவன் மீது பக்தியும் பணிவும் கொண்டு இறை தொண்டாற்றி வந்த அவர் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வது வழக்கம். முப்பத்து எட்டு ஆண்டுகளாக சபரிமலை யாத்திரை சென்று வந்த அவர், நான் இருக்கும் கிராமத்திலேயே ஐயப்பனுக்கு ஒரு கோயிலை கட்ட வேண்டும். அதுவும் சபரிமலையைப் போன்று பதினெட்டு படிகளுடன் அமைக்க வேண்டும். என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

பின்னர் அதை செயல்படுத்தும் விதமாக  ஐயப்பனை மனதில் எண்ணி கோயில் கட்டும் பணியை 2010ம் ஆண்டு தொடங்கினார் சுப்பையா குருசாமி.
திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே பல இன்னல்கள் பல தடைகள் பொருளாதார நிதி நெருக்கடி ஆகியவை அவரை சோர்வடைய வைத்தது அதனால் கோயில் கட்டுமானப்பணிகள் தடைப்பட்டன. இருந்தபோதும் ஐயப்பனை மனதில் எண்ணி எப்படியாவது கோயிலைக் கட்டவேண்டும் என்று மனமுருக வேண்டினார். நான்கு ஆண்டுகளுக்கு சபரிமலைக்கு சென்ற சுப்பையா குருசாமி அய்யனின் அபிஷேக நெய்யை வாங்கிவருவற்காக ஒரு பாத்திரம் ஒன்றை கொண்டு சென்றார். அதில் அபிஷேக நெய்யை வாங்கிக்கொண்டு திரும்பினார்.

அந்த பாத்திரத்தை தவற விட்டுவிட்டார். முன்பு சபரிமலையில் தவறவிட்ட நெய்யபிஷேகம் பாத்திரமானது. மறுபடியும் சுப்பையா குருசாமி இடம் கிடைத்தது நெய் அபிஷேக பிரியனே நமக்கு ஆசி வழங்கி விட்டார் என்று முழுவீச்சில் இறங்கி 2014ம் ஆண்டு கோயிலைக் கட்டி முடித்தார்.
நெல்லை தாழையூத்து பஸ்நிறுத்தத்தில் இருந்து ரஸ்தா செல்லும் சாலையில் இத்திருக்கோயில் தெற்கு மலையில் அமைந்துள்ளது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. அதன்பின்பு ஐயனின் கொடிமரத்தை தரிசனம் செய்யலாம். இவ்வாலயத்தில் சபரிமலையில் அமைந்திருப்பது போல்  பதினெட்டு படிகள்  அமைந்துள்ளது. படிகளின் இடதுபுறத்தில் காவல் தெய்வம்  கருப்பசாமியும் கருப்பாயி அம்மனும் அருட் பாலிக்கிறார்கள்.

படிகளின் வலதுபுறத்தில் பெரிய கடுத்தசுவாமி கொச்சி கடுத்தசுவாமி எழுந்தருளி இருக்கிறார்கள். மாலை அணிந்து இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் மட்டும் படியேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற பக்தர்கள் அனைவரும் பக்க வாட்டில் வழியே சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
பதினெட்டு படிகளைக் கடந்து மேலே சென்றால் சன்னிதானத்தில் அற்புத ஜோதியாய், ஆனந்த வடிவாய் ஸ்ரீ ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் அருட்பாலிக்கிறார். அவரது முன்னே அழகாக எழுந்தருளியிருக்கிறார் உற்சவ மூர்த்தி. கருவறைச்சுற்றில் விநாயகர், முருகர், நாகர் ஆகியோர் அருட்பாலிக்கின்றனர். கோயிலுக்கு கீழே மாளிகைபுரத்து மஞ்சமாதா கோயில் கொண்டு தனிச் சந்நதியில் அருட்பாலிக்கிறாள். இத்திருக்கோயிலில் சபரிமலையில் உள்ளது போல ஒவ்வொரு தமிழ்  மாதமும்  முதல் 3 நாட்கள் நடை திறக்கப்பட்டு அனைத்து அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறுகிறது.

இத்திருக்கோயில் சித்திரை விசுத் திருவிழா மிகப் பிரம்மாண்டமாக பத்து நாட்கள் நடைபெறும். அதே போல் கார்த்திகை மாதம் முதல் நாள் சுப்பையா குருசாமி அவர்களின் தலைமையில் நடை திறக்கப்பட்டு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் மேற்கொள்வார்கள். இத்திருக்கோயிலில் மண்டல பூஜையானது கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐயனின் உற்சவமூர்த்தி எழுந்தருளி மூன்று நாட்கள் வீதிஉலா நடைபெற்று இறுதியில் படி பூஜையுடன் இம்மண்டல பூஜையானது நிறைவுபெறும். அதன்பின்பு 3 நாள் கழித்து மகரவிளக்கு பூஜைக்கு நடை திறக்கப்பட்டு, மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும் மகர சங்கராந்தி அன்று மாலை ஐந்து மணி அளவில் கோயில் எதிர்ப்புறத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றுவது சுவாமியின் அருள் கடாட்சம் ஆகும்.

சபரி மலையில் எழுந்தருளி அருட் பாலிக்கும் ஐயப்பன் எப்படி மகரசங்கராந்தி அன்று காட்சி அளிக்கிறார் அதேபோல் இந்த மலையிலும் எழுந்தருளிய ஐயப்பன், நம்பிய பக்தர்களுக்கு கேட்ட வரம் வழங்குகிறார். சபரிமலை சென்று ஐயனை தரிசனம் செய்ய முடியாத மக்கள் தென்கலம் தெற்கு மலையில் எழுந்தருளி அருட்பாலிக்கும் ஸ்ரீ தர்மசாஸ்தாவை வணங்கலாம். இத்திருக்கோயில் நெல்லை சந்திப்பில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் தாழையூத்து பஸ்நிறுத்தத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

- ச. சுடலை குமார்
படம்: நெல்லை எம். ராஜா 

Tags : Mangalam Arulvar Thenkalam ,Sri Iyyappan ,
× RELATED தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்