×

இந்த முகமா அந்த முகம்?

உண்மை பேசுபவனது வாய்ச்சொற்கள் இதயத்திலிருந்து வருகின்றன. அவன் பேச்சில் வஞ்சனை இல்லை. கபடம் இல்லை. சூது இல்லை. அவனது

வாய்ச்சொற்கள் அவனது மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. பொய் பேசும் அளவிற்கு எதையும் நாம் செய்யாதிருப்போம். உண்மையை விட உயர்ந்த தர்மம் இல்லை. ஒழுக்கத்தின் அடித்தளம் உண்மை. உண்மை எளிதாகத்தோன்றும். ஆயினும் அதன் ஆழத்தைக் காண்பது அரிது. சத்தியத்தைப்பற்றிய தெளிவான பார்வை இருந்தால்தான் எதையும் பூரணமாகக் கடைபிடிக்க முடியும். அறநெறியையும், நீதிநெறியையும் வாழ்க்கையில் பூரணமாகக் கடைபிடிக்க வேண்டும். நேர்மை, துணிவு, பாரபட்சமின்மை, அனைவரையும் அரவணைத்தல், நீதி மற்றும் நியாயம் ஆகியவை சத்தியத்தில் அடங்கி இருக்கின்றன. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செய்பவன் நல் வாழ்க்கை வாழ்பவன் ஆகிறான்.

‘‘கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை. நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை.’’ ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே
அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப்பழங்களை பறிப்பாருமில்லை, முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.

நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக்கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக்கொடுப்பர்.

உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை ஆண்டவரே, ஆண்டவரே என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பிடுவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். அவர் ஆழமாய்த் தோண்டி பாறையின் மீது அடித்தளம் அமைத்து வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை. ஏனென்றால், அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது. நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ அடித்தளம் இல்லாமல் மண் மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். அது பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது. அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.’’ - (லூக்கா 6: 43-49)

ஓர் ஓவியர் தனது ஓவியத்துக்காகத் தெய்வீகமுடைய ஒரு குழந்தையைத் தேடினார். நீண்ட நாட்கள் பல இடங்களில் தேடி ஒரு குழந்தையைக்

கண்டுபிடித்தார். அந்த தெய்வீக முகத்தை ஓவியமாக வரைந்தார். ஓவியம் பலரையும் கவர்ந்தது. பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்தன. பல வருடங்கள்

உருண்டோடின. இப்போது அதே ஓவியர் ஒரு பயங்கரமான கொடுங்கோலனை ஓவியமாகப் படைக்க விரும்பினார். அப்படிப்பட்ட தோற்றமுடைய

ஒருவனைக் கண்டுபிடித்தார். அவனை அமர வைத்து ஓவியத்தை வரைந்து முடித்தார். பிறகு அவர் அவனிடம் கேட்டார்.நான் உன் முகத்தை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கு என்றுதான்  என் நினைவிற்கு வரவில்லை என்றார். அவன் ஒரு சோகச்

சிரிப்பை உதிர்த்தபடி சொன்னான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, பல வருடங்களுக்கு முன்னால் தெய்வீக முகமுடைய சிறுவனை நீங்கள் வரைந்தீர்களே! அச்சிறுவன்தான் நான்! ஆனால் இன்று கொடுங்கோலனாக மாறி இருக்கிறேன்.

பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளுமே தெய்வக்குழந்தைகள்தான். அவர்கள் வளரும்போது...?

‘‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே...’’
‘‘எது எப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் ஆண்டவர் அவரவர்களுக்குப் பகிர்ந்தளித்த கொடையின்படியும், அவர் விடுத்த
அழைப்பின்படியும் வாழட்டும்.’’
‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Tags :
× RELATED காமதகனமூர்த்தி