×

யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்

ஜாதகம் என்று எடுத்துக் கொண்டால். நிறை குறைகள், ஏற்ற இறக்கங்கள். யோக அவயோகங்கள், லாப நஷ்டங்கள் என இணைந்துதான் இருக்கும். ஒவ்வொரு லக்னத்திற்கும். சில கிரகங்கள் சுபயோகத்தை தரும். சில கிரக சேர்க்கைகள் அவயோகத்தை தரும். எந்த ஜாதகமும் முழுமையான யோகத்தை தராது. அந்தந்த கால கட்டங்கள் கிரக தோஷதசா புக்திகளில் சில பிரச்னைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். நம்முடைய திட்டங்கள் எதிர் பார்ப்புக்கள் சரியாக கூடி வரும் போது கால நேரம் நமக்கு சாதகமாக இருக்கிறது. தடைகள், பிரச்னைகள் என்று ஏற்படும் போது நமக்கு கிரக நிலைகள். எதிராக வேலை செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் பொதுவான கிரக சேர்க்கைகள் நமக்கு எப்படி பலன்களை தரும். என்பதை தெரிந்து கொள்ளலாம். ஜாதக கட்டத்தில் லக்னம் என்று சொல்லக் கூடிய இடம் முதல் இடமாகும். இதன் அதிபதி லக்னாதிபதி. இந்த லக்னாதிபதி எந்த கிரகமாக இருந்தாலும். பலமாக இருப்பது மிக மிக முக்கியம். பலம் என்பது ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம்,வர்கோத்தமம் என பல விஷயங்கள் உள்ளது. ராசிக் கட்டத்திலும், நவாம்ச கட்டத்திலும். இரண்டிலும் பலம் பெற வேண்டும். லக்னாதிபதி 5 ஆம் இடத்திலும் அல்லது ஒன்பதாம் இடத்திலும் இருப்பது மிகச் சிறப்பான யோகமாக ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. இது அனுபவ ரீதியாகவும் மிகச் சரியாக இருக்கிறது. லக்னாதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் சுகவாசி, கல்விச் செல்வம், பொன், பொருள், வீடு, வண்டி, நிலம், தோட்டம், தோப்பு என ராஜயோக அமைப்பு உண்டு.

தாய், தாய் வழி உறவுகளால் ஆதாயம் அடைவார்கள். அரசியலில் வட்ட செயலாளர், கவுன்சிலர் முதல் மந்திரி வரை பல பட்டம் பதவிகள் அனுபவிக்கும் யோகம் உண்டு. லக்னாதிபதி, ராசி, இரண்டாம் இடம் இந்த மூன்றிற்கும் ஏதாவது ஒருவகையில் சம்பந்தம், தொடர்பு ஏற்பட்டால். நல்ல பேச்சாளர், ஆசிரியர், விரிவுரையாளராக வருவார்கள். பிறருக்கு யோசனை சொல்லக்கூடிய பரந்த விசாலமான ஞானம், அறிவு, ஆற்றல் இருக்கும். வக்கீல்கள், ஆடிட்டர்கள், வாய் ஜாலம் காட்டி சம்பாதிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ராகு- கேது

ராகு - கேது இந்த இரண்டு கிரகங்களும் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும் இந்த இரண்டு கிரகங்களும் நல்ல நிலையில், யோக கிரக சேர்க்கை, சாரம் பெற்று சுப ஸ்தானங்களில் அமர்ந்து விட்டால் அந்த ஜாதகரை மிக அதீத உச்சத்தில் கொண்டுபோய் உட்கார வைத்து விடும். கல்வி, அறிவு அது சம்மந்தமான தொழில்கள், வேலைகள் தருவதில் ராகு, கேதுவுக்கு அதிகாம் உண்டு. ஜோதிட விதிப்படி தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டில் ஏதாவது ஒரு கிரகம் இருப்பது அவசியம். பத்தில் பாம்பு இருந்தால் பல தொழில்கள் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஜாதகத்தில் ராகு - கேது ஆதிக்கமும், அதே நேரத்தில் திருவாதிரை, சுவாதி, சதயம், அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் பிறப்பவர்கள். 4, 13, 22, 31 மற்றும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறப்பவர்கள் நிழல் கிரகங்களின் ஆளுமையில் பிறந்தவர்கள்.

இன்றைக்கு மருத்துவத்துறையில் கால்பதிக்க வேண்டுமென்றால் மருத்துவ கிரகமான கேது பகவானின் பரிபூரண அருள் ஒருவருக்கு தேவை. ஒருவர் மரு்ததுவராக, மருந்து சம்மந்தப்பட்ட துறையில் சேர்ந்து பட்டம் பெறுவதற்கு பல கிரகங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். அடிப்படை கல்வியானMBBS, B.PHARM, M. PHARM, D. PHARM. மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி படிப்புக்கள், கெமிஸ்ட்ரி ரசாயனம் பற்றிய உயர் கல்விகள் ரத்தப் பரிசோதனை சம்மந்தமான ஸ்கேன், எக்ஸ்ரே சம்மந்தமான படிப்புகள் மருந்துக் கடை, ஸ்கேன் சென்டர், பரிசோதனை கூடம், மற்றும் மருத்துவ சம்மந்தமானஅறிவியல் படிப்புக்கள் படித்து தேர்ச்சி பெற்று மருத்துவராக சேவை செய்யவும், பொருளீட்டவும், புகழ் பெறவும் ஜாதகத்தில் ராகு, கேது இருவரின் வலிமையும், யோக அமைப்பும் தேவை.

ராகு போகத்திற்கும், யோகத்திற்கும், கேது ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் அதிகாரம் பெற்றவர்கள். ராகு மறைந்து இருக்கின்ற பொருள், உள் விஷயங்கள் மற்றும் விஷத்தை குறிக்கின்ற கிரகம். மருந்து, மாத்திரைகள் எல்லாம் பல ரசாயனங்களின் கலவை, விஷம் சம்மந்தப்பட்டவை. ஒரு ரசாயனம் மற்றொரு ரசாயணத்துடன் கலக்கும்போது அது நோய்க்கு மருந்தாகிறது. நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும், மாத்திரையும் விஷத்தன்மையுடையது தான். அதனால் தான் மருந்து அளவுக்கு மீறி போகும்போது வேறு விதமான உப, துணை நோய்கள் உண்டாகின்றன. அதன் காரணமாக ஒருவரின் வாழ்க்கை முடக்கப்பட்டு விடுகிறது. இந்த செயலற்ற தன்மை, முடக்கத்திற்கு காரணம் ராகு. ராகு, கேது தமிழ் மருத்துவம், கைவைத்தியம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி என எல்லா மருத்துவத்திற்கும், ரசாயணங்களுக்கும், வேதிப் பொருட்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ராகு, கேதுவுடன் மற்ற கிரகங்கள் 1, 2, 4, 5, 9, 10 ஆகிய வீடுகள் அந்த வீட்டின் அதிபதிகள் சம்மந்தம் பெறும் போது மருத்துவத்துறையில் நுழையும் பாக்கியம் உண்டாகிறது. பல கிரகங்களின் சேர்க்கை, பார்வை, ஆட்சி, உச்சம், கேந்திரம் போன்ற பலம் சேரும் போது பல்வேறு பிரிவுகளில் மருத்துவராக, அறுவை சிகிச்சை நிபுணராக வரக்கூடிய ராஜயோக அமைப்பு ஏற்படுகிறது.

சுக்கிர தோஷம்!

ஒருவர். இல்லற வாழ்க்கையில், குடும்பத்தில் பிரச்னைகளைசந்திக்கிறார் என்றால் அந்த கணவன், மனைவி இருவரின் ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம் இருப்பதுதான் காரணம். இதில் சுக்கிரனின் லீலா விநோதங்கள் எந்த வகையிலாவது இருக்கலாம். சுக்கிரன் நீசமாக இருக்கலாம் அல்லது நீச கிரகத்தின் சேர்க்கை, பார்வை பெற்று இருக்கலாம். இது ஒரு காரணம். ஆனால் இதைவிட முக்கியமான அமைப்பு. ஒன்று உள்ளது அது தான் ராகு, கேது. சுக்கிரனுடன் சேர்ந்து இருப்பது சுக்கிரனுடன் இந்த சர்ப்ப கிரகங்கள் ராசிக் கட்டத்திலோ, நவாம்ச கட்டத்திலோ சேர்ந்திருந்தால் இல்லறம் இனிக்காது. எப்போதும் ஏதாவது பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். நித்ய கண்டம் பூரண ஆயுள் என்ற நிலைதான். அற்ப விஷயத்தில் இருந்து அதிமுக்கியமான விஷயம் வரை எல்லாவற்றிலும் எதிரும் புதிருமான நிலையே இருக்கும். உடல் உறவிலும், மன உறவிலும் திருப்தி இருக்காது. விவாகரத்து, ஜீவனாம்ச வழக்குகளுக்கு எல்லாம் இந்த கிரகச் சேர்க்கையே முக்கிய காரணம். ஆகையால், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது இந்த சுக்கிரனின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை கவனமாகப் பார்த்து இரண்டு ஜாதகங்களையும் சேர்ப்பது
உத்தமம்.

பொருத்தங்கள்

திருமணம் என்றவுடன் முந்திக்கொண்டு நிற்பது ஜாதகம்தான். ஜாதகம் பார்த்தீர்களா? கால நேரம் எப்படி உள்ளது. திருமண பாக்கியம் கூடி வரும் நேரமா, குரு பலம் வந்து விட்டதா, செவ்வாய் தோஷம் இருக்கிறதா, சர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று பலர் பலவிதமான கேள்விகள் கேட்பார்கள். ஆண், பெண் இருவரின் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது பொதுவாக எல்லோரும் நட்சத்திரப் பொருத்தம் பற்றி கேட்பார்கள். எத்தனை பொருத்தம் இருக்கிறது, குழந்தை பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் நன்றாக இருக்கிறதா என்று கேட்பார்கள்.

பொருத்தங்கள் என்பது பல வகைகளாக பிரித்து பார்க்கப்படுகிறது. ஒரு கால கட்டத்தில் 30க்கும் மேல் பொருத்தங்கள் இருந்ததாகவும் அதன் பின்பு 21 பொருத்தங்கள் என்று குறைந்து. தற்போது தச வித பொருத்தங்கள் என்று சொல்லும் 10 பொருத்தங்கள் என்ற நிலையில் உள்ளது இந்த நட்சத்திர பொருத்தங்கள் என்பது சாஸ்திர அமைப்பின்படி ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் உள்ள குண விசேஷங்களை பற்றி தெரிவிப்பதாகும். இது ஸ்தூல பொருத்தம். அதாவது பொதுவான பலன்களை போன்றது. இதை ஒரு உப பொருத்தமாக வைத்துக் கொள்ளலாம். நட்சத்திரப் பொருத்தம் என்பது பொதுவானவை, ஜாதக அமைப்பு என்பது தீர்க்கமானவை. ஜாதகக் கட்டத்திலுள்ள லக்னம் முதல் அதைத் தொடர்ந்து வரும் 12 வீடுகள் ஒருவரின் வாழ்க்கை அமைப்பை தீர்மானிக்கிறது.

ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகள்தான் ஒருவருக்கு யோக, அவயோகங்களை தருகிறது. ஆண் ஜாதக அமைப்பை ஆராய்வதற்கும். பெண் ஜாதக அமைப்பை ஆராய்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஜாதக பலத்துடன் தசா புக்தி பலம் என்பது மிகவும் முக்கியமானதாகும். தசா என்பது ஒவ்வொரு கிரகத்தின் ஆளும் கால அளவை குறிப்பதாகும். ஒரு ஜாதகத்தில் நல்ல ராஜயோக தசைகள் நடைபெறும் போது குற்றங்கள், குறைகள் இருந்தாலும் பெரிதாக பாதிப்பது கிடையாது. அது போல சில கிரக சேர்க்கைகள், பார்வைகள், பரிவர்த்தனைகள் உள்ள ஜாதகங்கள் கிரக பலம் காரணமாக பல தோஷங்கள் அடிபட்டுப் போய்விடுகிறது அல்லது நிவர்த்தி ஆகிவிடுகிறது.

ஆகையால், ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் என்ன குறை என்ன நிறை என்பதை ஆராய்ந்து பார்த்து அதன்படி ஜாதகங்களை சேர்ப்பதே உத்தமமான பொருத்த வகை ஆகும். குறிப்பாக 2, 4, 5, 7, 8 ஆகிய ஸ்தானங்கள் எப்படி இருக்கின்றது என்பதை வைத்ததுத்தான். இல்லறம் இல்வாழ்வு எப்படி என்பதை தீர்மானிக்க முடியும். மேலும் குரு, சுக்கிரன், செவ்வாய் இந்த மூன்று கிரகங்களின் அமைப்பையும் வைத்துத்தான். ஒருவரின் மண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும். பெண்களின் ஜாதகத்தில் நான்காம் இடம், ஐந்தாம் இடம் மிக முக்கியமானது இந்த நான்காம் வீடு என்பது பல விஷயங்களை உள்ளடக்கி உள்ளது. குறிப்பாக சுகஸ்தானம் அதாவது எல்லாவிதமான சுகங்களை பற்றிப் பேசும் இடம். வயிறு சம்மந்தமாக இந்த இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அது சம்மந்தப்பட்டது தான் கர்ப்பப்பை. இந்த ஸ்தானம் பலமாக இருந்தால்தான் கர்ப்பம் தரிப்பதில்
பிரச்னைகள் இருக்காது.

4, 5 ஆகிய ஸ்தானங்களில் நீசக் கிரகம், 6,8,12ம் அதிபதிகள், ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தால் புத்திர தோஷம் காட்டும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். ஆண் ஜாதகத்திலும் 4, 5ம் இடங்கள் வலுவாக அமையவில்லை என்றால் குழந்தை பாக்கியம் என்பது கடினமான விஷயம்தான். அதேபோல் புதன், சனி இந்த இரண்டு கிரகங்களும் நபும்ச கிரகங்கள் அதாவது அலி கிரகம். புதன் பெண் அலி கிரகம், சனி ஆண் அலி கிரகம். நான்காம் அதிபதி மற்றும் ஐந்தாம் அதிபதி புதன், சனியுடன்தொடர்பு ஏற்பட்டால் புத்திர தோஷம் காட்டும். 5ஆம் அதிபதி புதன், சனி வீட்டில் இருந்தால் புத்திர பாக்கியம் தாமதமாகும். அல்லது குறையுள்ள குழந்தை பிறக்கும். புத்திர காரகன் குரு, சனி, புதன் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம். ஆகையால் இவற்றை எல்லாம் தீர்க்கமாக ஆராய்ந்து அதற்குரிய பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியமானதாகும்.

கோடீஸ்வர யோகம்

யோகங்கள் என்பது பல விதமான கிரக சேர்க்கைகள், பார்வைகள், ஆட்சி, உச்சம், கேந்திரம், கோணம், என பல வகை ஜோதிட விதிகளின் கீழ் ஏற்படுவதாகும். அதே நேரத்தில் சில கிரகங்கள் சேரும் போது பல யோகங்கள் ஏற்படுகிறது. அந்த சேர்க்கை மூலம் நிறைகுறைகள் கலந்து தான் இருக்கும். இந்த கோடீஸ்வர யோகம் என்பது ஒருவருக்கு பல வகைகளில் உண்டாகும். அதில் ஒரு வகைதான் குரு, கேது இருவரும் மூலம் உண்டாகும் கோடீஸ்வர அமைப்பாகும். குரு, கேது இணைந்த தொடர்பு கொண்ட ஜாதகங்கள் பல வகைகளில் மிகப் பிரபலமாக இருப்பதை அனுபவபூர்வமாக பார்க்க முடிகிறது.

குரு, கேது சேர்க்கை என்பது இருவரும் சேர்ந்து ஒரே ராசியில் இருப்பது. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இந்த ராசிகளில் சேர்ந்து இருந்தால் சிறப்பு. கடக ராசியில் சேர்ந்து இருந்தால் நாடாளும் யோகம்.கலைத்துறை, இசைத்துறையில் பிரபலமடைவார்கள். குரு பகவான் கேது சாரம், கேது குரு சாரம், ஒருவருக்கொருவர் கேந்திரம். குருவின் பார்வை கேதுவிற்கு என வகையிலாவது இந்த இரண்டு கிரகங்களின் சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் செல்வாக்கு, பட்டம், பதவி, புகழ், கௌரவம் என யோக பலன்கள் அமையும். குருவுடன்  கேது சேர்ந்து எந்த ராசியில் இருக்கிறார்களோ அந்த ராசிக்கு ஒன்பதாவது இல்லத்தில் புதனும், சுக்கிரனும் சேர்ந்து இருக்க வேண்டும். அல்லது இருவரில் ஒரு வராவது இருக்க வேண்டும். இத்தகைய கிரக அம்சம் உடைய ஜாதகம் கோடீஸ்வர யோகம் என்ற அமைப்பைப் பெறும்.

எந்த ஒரு கிரகத்தின் பலாபலன்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த கிரகத்தின் தசா புக்தி வரவேண்டும். அல்லது அந்த கிரகத்துடன் சேர்ந்த யோகாதிபதிகளின் தசாபுக்தி வர வேண்டும். அது எந்த பருவ வயதில் வருகிறதோ அந்தந்த வயதிற்கேற்ப, அவரவர்கள் பூர்வ ஜென்ம கர்ம அமைப்பு, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப ராஜயோக பலன்கள் அமையும். குரு, கேது மூலம் ஒருவருக்கு பல வகைகளில் பெயர், புகழ் உண்டாகும். சிறந்த மருத்துவராகவும், மருத்துவ சம்மந்தமான தொழில்கள் செய்து பொருளீட்டும் யோகத்தைத் தருவார்கள். ஆன்மீக விஷயங்களில் ஈடுபடவைப்பார், விசாலமான விஷய ஞானம் இருக்கும்.

மதபோதகர், மதபிரசாரகர், சொற்பொழிவாளர்கள், கதா காலட்சேபம், மடாதிபதி, அதீன கர்த்தாக்கள், யோக சாஸ்திர தியானத்தில் அதி உச்ச உன்னத நிலை, கோயில் தக்கார், அறங்காவலர்கள், அறநிலையத்துறையில் உயர் பதவி, அரசு பதவி யோகம் அமையும். கோயில் கட்டுதல், உழவாரப்பணி, பக்தி , ஞான, யோக மார்க்கம், பொதுத் தொண்டு, கும்பாபிஷேகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேத பாட சாலைகள், தர்ம காரியங்கள், தர்ம ஸ்தாபனம் அமைக்கும். பாக்கியத்தைத் தருவார். கலைகளில் தேர்ச்சி, சாஸ்திர ஞானம், ஆராய்ச்சி, ஜோதிடம், குறி சொல்லுதல், அருள்வாக்கு, கணபதி, முருகன். உபாசகராக ஜாதகரை முன்னிலைப்படுத்துவார். இயல், இசை, நாடகம், நாட்டியம், சங்கீதம், பாட்டு என எல்லாம் வரும். கேது இசைஞானி ஆகையால் இசைத்துறையில் பாண்டித்தியம், புகழ் ஏற்படும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

Tags : doshas ,planets ,
× RELATED பங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு