×

நல்ல நேரம் கூடி வர கால நேர கோயில்

மதுரையிலிருந்து 60 கிமீ தொலைவில் டி.கல்லுப்பட்டி-திருவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எம்.சுப்புலாபுரம் உள்ளது. இங்கிருந்து எரிச்சநத்தம் செல்லும் சாலையில் 3 கிமீ தொலைவில் கால நேர கோயில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி (எ) சாமிதாசன் கடந்த 1980ல், 15 ஏக்கரில் இந்த கோயிலை கட்டினார். இந்த கோயிலில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும் என்பது தனி சிறப்பு.

பூஜைகள், ஆராதனைகள் அனைத்தும் இரவிலேயே நடக்கின்றன. இந்த கோயிலில் வழிபட்டால் துன்பங்கள், நீண்டநாள் நோய்கள், தோஷங்கள் என அனைத்துக்கும் நல்ல தீர்வு கிடைப்பதோடு, இங்குள்ள கால தேவி அம்மனை வழிபட்டால் நல்ல நேரம் கை கூடி வரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால் இந்த கோயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரபல சினிமா நடிகர்கள், நடிகைகளும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கால தேவி அம்மனுக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் விசேஷ தினங்களாகும். அந்த நாட்களில் அம்மனின் சக்தி அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். தொடர்ந்து 3 பவுர்ணமி, அல்லது அமாவாசை தினங்களில் அம்மனை வணங்கினால், நல்ல நேரம் கை கூடி வந்து, தீராத பிரச்னைகளும் தீரும் என கூறப்படுகிறது.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கோயில் சுற்றுப் பிரகாரத்தை இடமிருந்து வலமாக 11 முறை, வலமிருந்து இடமாக 11 முறை என 22 முறை பக்தியுடன் சுற்றி வருகின்றனர். பின்னர் கோயில் வளாகத்தில் காணிக்கை செலுத்தி, நெய் விளக்குகளை வாங்கி தீபம் ஏற்றுகின்றனர். அதன் பின்னர் சன்னிதானம் முன்புள்ள காலச்சக்கரத்தில் ஏறி நின்று, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றக் கோரி காலதேவி அம்மனை வழிபடுகின்றனர். காலச்சக்கரத்தின் மீதான வேண்டுதலை பக்தர்கள் 11 வினாடிகளில் முடித்து கொண்டு கீழே இறங்க வேண்டும். இந்த முறையில் வழிபட்டால் நல்ல நேரம் கை கூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

11 வினாடிகளை தாண்டி வழிபட்டால் மீண்டும் கெட்ட நேரம் துவங்கி விடும் என கூறப்படுவதால், அருகிலேயே நிற்கும் பூசாரி பக்தர்களை 11 வினாடிகளில் காலச்சக்கரத்தில் இருந்து இறக்கி விடுகிறார்.இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உருவான நேரம் இங்கு குறிக்கப்பட்டுள்ளது என்கிறார் பூசாரி. கோயில் பூசாரி கூறுகையில், ‘‘இக்கோயிலின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை பார்த்து விட்டு, பிரபலங்கள் அதிகளவில் கோயிலுக்கு வருகின்றனர்’’ என்று தெரிவித்தார். இக்கோயிலுக்கு டி.கல்லுப்பட்டி மற்றும் எம்.சுப்புலாபுரத்தில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோக்களில் செல்லலாம்.

Tags :
× RELATED சுந்தர வேடம்