×

உருவம் கொண்ட பாவம் - கூனி

* காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

இது சரி; இது தவறு என்று தீர்மானி்க்க நாம் யார்? ஒருவருக்குச் சரியாக இருப்பது, அடுத்தவருக்குத் தவறாகத் தெரியும். உதாரணமாக, நண்பர் ஒருவரின் வீட்டிற்குப்போகிறோம். வாசற்கதவைத் திறக்கும்போது, ‘கிர்றீச்’ என்ற ஒலி நாராசமாகக் காதில் விழுகிறது. மனது கேட்கவில்லை உடனே ஐந்து நிமிடங்கள் செலவழித்து, தாழ்ப்பாளுக்கு எண்ணெய் போட்டு, அது சத்தம் எழுப்பாதபடிச் செய்துவிட்டு, நண்பரைப் பார்க்க உள்ளே போகிறோம்.

போனதும் நண்பரைப் பார்த்து, நம் பெருமையைப் பறை சாற்றிக்கொள்கிறோம் “என்னடா இது? கதவத் தொறந்தா... நாராசமா இருக்குது. எண்ணெய் போட்டு, சத்தமே கேக்காதபடி பண்ணிட்டேன்” என்று பெருமைபாராட்டிக் கொண்டு, நண்பரும் பாராட்டுவார் என எதிர்பார்க்கிறோம். நண்பரோ’காச் மூச்’சென்று கத்தி விட்டார் “அறிவு இருக்காடா ஒனக்கு! ஒன்ன யாரு அதெல்லாம் செய்யச்சொன்னாங்க? கதவத் தொறக்கறது தெரியணுங்கறதுக்காகத்தான, அப்படியே வெச்சிருந்தேன். யாராவது வந்தா ‘பளிச்’சினு தெரியும். சத்தம் காட்டிக்குடுத்துடும். இப்ப நீ எண்ணெய் போட்டு சத்தமே கேக்காதபடி செஞ்சிட்ட! எவன்வறான்?எப்ப போறான்னு தெரியாது. மூஞ்சியப்பாரு! பெரீய்...ய சாதனையாளர் மாதிரி பாராட்டு வேற எதிர்பாக்கற?” என்று திட்டி விட்டார்.

ஒருமாதிரி ஆகி விட்டது நமக்கு. நம் நிலைமையில் இருந்து பார்த்தால், நாம் செய்தது சரி அவர் நிலையில் இருந்து பார்த்தால், அவர் செய்தது சரி. ஆகையால் அவரவர் செயல், அவரவர்க்கு நியாயம்தான் சரிதான்.  இவ்வளவு பீடிகை எதற்காக? கூனியைப்பற்றிப் பார்க்கப்போகிறோம் அதற்காகத்தான்! கூனி கொடியவள் மிகவும் கொடியவள். கைகேயியின் மனதைக்கெடுத்து, ராமருக்குப் பட்டாபிஷேகம் நடக்க விடாமல் செய்தவள்- என்ற எண்ணம்தான் பொதுவாகப் பலரின் மனதில் படிந்திருக்கிறது. உண்மையிலேயே கூனிஎன்பவள் யார்? அவள் ஏன் அவ்வாறு செய்தாள்? பார்க்கலாம் வாருங்கள்!

கூனியின் அறிமுகம், ராமருக்குப் பட்டாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்படும் போது தான் நடக்கிறது. ராமருக்குப் பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடக்கின்றன. நகர மக்கள் அனைவரும் வீட்டையும் வீதியையும் அலங்கரிக்கிறார்கள். அந்த நேரத்தில், ராவணன் செய்த பாவமெல்லாம் திரண்டு ஒரு பெண் வடிவாகி வந்ததைப்போலக் கூனி தோன்றினாள்.
‘இன்னல்செய் ராவணன் இழைத்த தீமை போல் துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்’(கம்பர்)

கூனியின் வருகை, ராவணன் கதையை முடிப்பதற்காகத் தான் என்பது, கூனியை அறிமுகப்படுத்தும் போதே நமக்குத் தெரிகிறது. அதெல்லாம் சரி! ராமருக்கான பட்டாபிஷேகம் தடைபட்டு, அவர் காட்டிற்குப்போனால் தான், ராவண சங்காரம் நடைபெறும். அந்த ராவணன் பெண்களிடம் முறை கேடாகச் செயல்பட்ட பாவமெல்லாம் திரண்டு கூனியாகி வந்திருக்கிறது என்பதும் சரி!
 
ஆனால் கூனி, ராம பட்டாபிஷேகத்தைத் தடைசெய்து அவரைக் காட்டிற்கு அனுப்ப வேண்டுமானால், அவளுக்கும் ராமருக்கும் ஏதாவது பிரச்னை இருக்க வேண்டுமல்லவா? சிறுவயதில் ராமர், அம்பின் நுனியில் (களி)மண் உருண்டைகளை வைத்து, கூனியின் முதுகில் அடிப்பாராம். அந்த வெறுப்பை மனதிலேயே வைத்திருந்த கூனி, ராம பட்டாபிஷேகத்தைத் தடுத்து நிறுத்தி, ராமரைக்காட்டிற்கு அனுப்பத் தீர்மானித்து விட்டாள் .
 
‘பண்டை நாள் ராகவன் பாணி வில்லுமிழ்   
  உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உன்னுவாள்’ (கம்பர்)

கூனி, உடலில் மட்டும் கூனல் கொண்டவள் அல்ல. உள்ளமும் கூனலாகக் கொண்டவள்.ஆகையால், ராமர் சிறுவயதில் செய்த செய்கையை மனதில் நினைத்துக் கோபம் கொண்ட கூனி, உதட்டைக்கடித்துக் கொண்டு, வெகு வேகமாகப் போகிறாள். எங்கு? கைகேயியிடம் போனாள். அவள்போன நேரம், கைகேயி நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.அதனால் என்ன? கைகேயியின் மென்மையான பாதங்களைத் தீண்டினாள் கூனி.

திடுக்கிட்டுக் கண் விழித்தாள் கைகேயி. கூனி தன் சாமர்த்தியம் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தத் தொடங்கினாள்.” கைகேயி! சற்று நேரத்தில் ராகு என்னும் பாம்பு தன்னைப்பிடிக்கப் போகிறது; கிரகணம் பிடிக்கப்போகிறது என்பது தெரியாமல், முழுநிலவு ‘பளபள’வென்று ஔி வீசிக் கொண்டிருந்ததாம். அதுபோல, உனக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல், ஆனந்தமாகத் தூங்கிக்கொண்டு இருக்கிறாயே! இது என்ன நியாயம்?’’ என்றாள் கூனி.

கைகேயியோ சற்றும் கலங்கவில்லை. ‘‘நற்புதல்வர்களைப் பெற்றவள் நான். உலகிற்கே வேதம் போன்ற, ராமனைப்பெற்ற எனக்குத் துயரம் ஏது?’’ என்று அழுத்தமாகக் கூறுகிறாள். எந்த ராமருக்கு இடர் விளைவிக்க வேண்டும் என்று கூனி வந்திருக்கிறாளோ, அந்த ‘ராமனைப் பெற்றவள் நான்’ என்கிறாள் கைகேயி.
 
ராமரைப் பெற்றவள் கோசலையா. கைகேயியா? சந்தேகம் வருகிறதல்லவா? ராமரைப் பெற்றவள்தான் கோசலை. வளர்த்தது கைகேயியே! ‘தாய் கையில் வளர்ந்திலன். வளர்ந்தது கேகயர்கோன் மாமகள் தவத்தால்’என்ற கம்பர் வாக்குப்படி, ராமரை வளர்த்தது கைகேயி. பெற்ற பாசத்தை விட வளர்த்த பாசம் அதிகமல்லவா? அதன் காரணமாகவே, ராமரைத் தான்  பெற்றதாகக் கூறினாள் கைகேயி. அதற்காகக் கூனி தன் முயற்சியை விடவில்லை, எடுத்த காரியத்தை முடிப்பதில் ஊக்கமாக இருந்தாள்.

உண்மைதான்! நல்லவைகளைச் செய்ய எண்ணும் போது, உற்சாகமும் விடாமுயற்சியும் உண்டாவதில்லை. அதே சமயம் தீமைகளைச் செய்வதென்றால், உற்சாகமும் விடாமுயற்சியும் எங்கிருந்துதான் வருமோ தெரிய வில்லை. அபரிமிதமாகப் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. சாதாரணமானவர்களின் நிலையே - அதாவது நல்லதும் கெட்டதும் கலந்த மனநிலை கொண்டவர்களின் நிலையே இதுவென்றால். மனதிலும் கூனல்கொண்ட, தீமையே வடிவமான கூனியின் நிலை எப்படியிருக்கும்?
 
கூனி தன் முயற்சியை விடவில்லை; பெண்களின் மனதில் பொறாமையைத் தூண்டக்கூடிய ஓரகத்தியின் பெருமையைப் பேசினாள்; ‘‘கைகேயி! எல்லாம் வீழ்ந்தது. பொருள் போனது; நாடு போனது. ஆனால் இப்படிப்பட்ட இழப்பெல்லாம் உனக்குத்தான்; கோசலைக்கு அல்ல. அவள் தன் அறிவால் பிழைத்துக்கொண்டாள்’’ என்று தூபம்போட்டுப் பொறாமையைத் தூண்டினாள் கூனி.
 
கைகேயி மனம் மாறவில்லை. ‘‘அப்படி என்னடி புதிய வாழ்வு வந்து விட்டது கோசலைக்கு?என் கணவர் சக்கரவர்த்தி! என் மகனோ... ராமன்! இதற்குமேல் என்ன வாழ்வு வந்து விட்டது கோசலைக்கு?’’ என்றாள். தொடர்ந்தாள் கூனி. ‘‘என்ன வந்துவிட்டது என்று கேட்கிறாயே! ஆண்களெல்லாம் சிரிக்கிறார்கள். அவன்(ராமன்) ஆண்மைக்கு இழுக்கு வரும்படியாகப் பெண்ணை(தாடகையை)க் கொலை செய்தவன். அப்படிப்பட்ட ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம்; அவன் முடிசூடப் போகிறான்’’ என்றாள் கூனி.

ஆடவர் நகையுற ஆண்மை மாசுறத்
தாடகை எனும்பெயர்த் தையலாள் படக்
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை வாழ்வு இது எனச்சொல்லினாள்
(கம்ப ராமாயணம்)

எந்த ராமரைத் தன்மகன் எனக் கைகேயி சொன்னாளோ, அந்த ராமரை எவ்வளவு இழிவாகக்கூனி பேசுகிறாள் பாருங்கள்! கூடவே, ஓரகத்தியான கோசலை பெருவாழ்வு பெறப் போகிறாள் என்றும் சொல்லி, கைகேயியின் மனதில் பொறாமைத் தீயை மூட்டப்பார்க்கிறாள் கூனி. ஆனால் நடந்ததோ வேறு; ராமருக்குப் பட்டாபிஷேகம் என்ற தகவலை அறிந்தவுடன் கைகேயியின் மகிழ்ச்சி எல்லை கடந்து போனது; மதிப்பு-அழகு-ஔி ஆகியவற்றில் உயர்ந்ததான ரத்தின மாலை ஒன்றைக் கூனிக்குப் பரிசாக அளித்தாள்  கைகேயி. மாலையைப்பெற்ற கூனி அசரவில்லை; மாறாகப் பெருமூச்சு விட்டாள். அலறினாள். சீறினாள். கண்ணீர் விட்டாள்; கண்களை அகல விழித்துத் தீப்பொறி சிதறச் செய்தாள். அனைத்திற்கும் மேலாக (கைகேயி தந்த ஔி மிகுந்த) மாலையை ஓங்கித்தரையில் அடித்தாள்; தரையில் பள்ளம் விழுந்து விட்டது.

சுடர்செய் மாலையால் குழித்தனள் நிலத்தை
அக்கொடிய கூனியே
(கம்ப ராமாயணம்)

நிலத்தைக் குழியாக்கிய கூனி, கைகேயிக்குக் குழி பறிக்கும் வேலையைத் தொடர்ந்தாள். ‘‘அறிவிழந்தவளே! பைத்தியக்காரி! ராமன் அரசனானால், கோசலை பெருவாழ்வு பெறுவாள். நீயும் உன் பிள்ளையும்(பரதனும்) பெருந்துயர் அடைவீர்கள்!’’ கோசலையின் வேலைக்காரிபோல ஆவாய் நீ! வேலைக்காரி(உன)க்கு வேலைக்காரியாக இருக்க என்னால் முடியாது.
 
‘‘சீதையும் ராமனும் உயர்ந்த சிம்மாசனத்தில் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்க எல்லோரும் அவர்களைச்சுற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பார்கள். உன் மகன் பரதனோ, தரையில் தனியே அமர்ந்திருப்பான். அதைப்பார்த்து நீ மகிழ்வாயோ?’’என்றாள். இவ்வாறு பேசிய கூனி, இதன்பின் பரதனை எண்ணிக் கூவினாள். ‘‘பரதா! பாவம் நீ! உன் தந்தையும் கொடியவன். உன் தாயும் பொல்லாதவள். இவர்கள் வயிற்றில் வந்து, நீ பிறந்தாயே! உன் துர்பாக்கியத்தை என்னவென்று சொல்லுவது?’’ என்றாள்.
 
பரதனை எண்ணி உருகுவதுபோல் புலம்பிய கூனி, மறுபடியும் கைகேயியிடம் திரும்பினாள். ‘‘கைகேயி! அரச குடும்பத்தில் பிறந்து, எல்லாவிதமான ராஜ போகங்களுடனும் வளர்ந்து, இன்று ஒரு சக்கரவர்த்தினியாக விளங்கும் நீ, துயரக்கடலில் விழுந்து தவிக்கப்போகிறாய்! ஏன்? பரதனுக்கு என்ன?அறிவு இல்லையா?ஆற்றல் இல்லையா?அவன் அரசனாக ஆகக்கூடாதா? அவனுடைய ஆற்றல் எல்லாம் புல்லில் கொட்டிய நீராக, வீணாகத்தான் போகவேண்டுமா?’’ என்று கேட்டாள்.
 
கைகேயிக்குக் கூனியின் மனநிலை புரிந்தது. ‘இவள் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கக் கூடாது; பரதனுக்குத்தான் முடிசூட்ட வேண்டும் என்று, நமக்குத் தீய உபதேசம் செய்கிறாள்’ -என்பதைப் புரிந்து கொண்டாள்; பதிலடி கொடுக்கத் தொடங்கினாள்.
 
‘‘கூனி இப்படியெல்லாம் பேசினால்,உன்னை நல்லவள் என்று நம்பி விடுவேன் என்று நினைக்கிறாயா? நீ எனக்கும் நல்லவள்அல்ல என் மகன் பரதனுக்கும் நல்லவள் அல்ல...’’  என்று தொடங்கிப்பேசி, ‘‘இவ்வாறு பேசிய உன் தீய நாவை அறுக்காமல், போனால் போகிறது என்று பொறுமையாக இருக்கிறேன். போ! என் எதிரில் நிற்காதே! அறிவில்லாதவளே! அடங்கு!’’ என்று ஏசினாள்.
 
கூனி போவாளா என்ன? மேலும் ஆழமாக-அழுத்தமாகப் பேசத் தொடங்கினாள்.‘‘அம்மா! கைகேயி! உனக்கு நன்மையைச்சொல்ல வேண்டியது என் கடமை. கோசலை நல்லவள்தான். நாளை ராமன் அரசனாக ஆனால், அவள் அப்படியே இருப்பாளா என்ன? உன் தேவை களைக்கூட, அவளிடம் இருந்துதான் பெற்றாக வேண்டும்.’’

‘‘முற்கால ராஜபோக செல்வாக்கையும் பிற்கால ஏழ்மை நிலையையும் எண்ணிஎண்ணி ஏங்கி, இறந்து போவாயா? எப்படி வாழ்வாய்? ராமன் முடிசூடினால், அவன் மாமனாரான ஜனகன்,உன் தந்தையின் தேசமான கேகயதேசத்தைக் கைப்பற்றி விடுவான். இப்போது உன் கணவனிடம் பயந்து, ஜனகன் அமைதியாக இருக்கிறான்.’உன் சுற்றமும் கெடச் சுடு துயர்க்கடல் விழத்துணிந்தாய்’’ எனக் கைகேயியின் அதிகாரம் கோசலைக்கு மாறும் எனக்கூனி தொடர்ந்து சொல்லச் சொல்ல, கைகேயியின் மனது மெள்ளமெள்ள மாறத்தொடங்கியது.

அப்புறம் என்ன? கைகேயி இரு வரங்கள் வேண்ட, நிகழ்வுகள் ‘மளமள’வென அரங்கேறி, ராவண சங்காரம் முடிந்து, அதன் பிறகே ராம பட்டாபிஷேகம் நடந்தது. கூனியை, நாம் அனைவருமே திட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், கூனியைத்திட்ட காரணமே கிடையாது. கூனியின் விரிவான வாதங்களால்தான் கைகேயி மனம் மாறினாள்; பிரச்னைகள் விளைந்தன என்பது, பெரும்பாலான அபிப்பிராயம். ஆனால் உண்மை வேறு.

கூனி இல்லையென்றால், ராமாயணம் அயோத்யா காண்டத்தின் தொடக்கத்திலேயே முடிந்திருக்கும். பரத்வாஜர், அத்ரி-அனசூயா தேவி அகத்தியர், சுதீட்சணர் முதலான பல முனிவர்களைப் பற்றியும். குகன்,சபரி, விபீஷணன் முதலான உத்தமமான பக்தர்களைப் பற்றியும்.  அனைத்திற்கும் மேலாக ஆஞ்சநேயர் என்ற மாபெரும் குரு தத்து வத்தைப் பற்றியும், அறிய முடியாமல் போயிருக்கும்.

இத்தனைக்கும் மேலாக, கூனியின் வார்த்தைகளால் கைகேயி மனம் மாறவில்லை.  ராவணன் முதலான அரக்கர்களின் பாவமும், மாமுனிவர்களின் தவமும்தான், கைகேயியின் மன மாற்றத்திற்குக் காரணம். கூனியைத்திட்ட காரணமே கிடையாது என்று கம்பர் தெளிவாகக் கூறுகிறார்.

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அருந்தவமும்
துரக்க நல்லருள் துரந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மையன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன் புரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே  (கம்ப ராமாயணம்) கூனியின் கதா பாத்திரம் ராமாயணத்தில் மிகமிக முக்கியமானது.

(தொடரும்)

Tags :
× RELATED எந்த கோயில்? என்ன பிரசாதம்?