×

சிறப்பு மிக்க ஆலயங்கள்!

சேலம் மாவட்டம் கண்ணூரில் மாரியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த ஆலயத்தின் கருவறையில் ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காரியம்மனும் அமர்ந்து அருட்பாலிக்கிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த அம்மனின் முன்னிலையில் தொட்டில் கட்டி இங்குள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்து அருகிலிருக்கும் தொட்டிலை ஆட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், அம்பாளுக்கு மணிகட்டி மாவிளக்கு எடுத்தால் குறைகள் நிவர்த்தியாகும் என்று நம்பிக்கையோடு
கூறப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுைற செல்லும் சாலையில் உள்ளது மூவலூர் என்ற திருத்தலம். இங்கு மார்க்கசகாயேஸ்வரர் கோயில் உள்ளது. பொதுவாக சிவன் கோயில்களில் தட்சிணாமூர்த்தி தனிச் சந்நதியில் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தின் ஆலய கொடி மரத்தில் தென் திசை நோக்கியபடி காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி பகவான். இந்த திருத்தலத்தில் தனியாக மட்டுமின்றி, கூடுதலாக கொடி மரத்திலும் தட்சிணாமூர்த்தி இருப்பது அபூர்வமான அமைப்பாக பார்க்கப்படுகிறது.

திருக்கொள்ளிக்காடு என்ற திருத்தலத்தில் சனீஸ்வரர் நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார். அவரது வலது கரங்களில் கலப்பையும், அபயஹஸ்தமும் தாங்கியுள்ளார். அதே போல் இடது கரங்களில் காக்கையும், ஊரு ஹஸ்தமும் தாங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கலப்பையுடன் வீற்றிருக்கும் வித்தியாசமான சனி பகவானின் தோற்றத்தை இந்த ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

கோவை மாவட்டம் திருப்பூர் காங்கேயம் பாதையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நல்லூரில் அமைந்துள்ளது ‘பெரிய கோயில்’ என அழைக்கப்படும் விச்வேஸ்வரர் விசாலாட்சியம்மன் திருக்கோயில். இக் கோயிலில் ஒரே கல்லில் அகத்தியர், புலத்தியர், பரத்வாஜர், பராசரர், கௌதமர், கெளசிகர், காசியபர் ஆகிய சப்த ரிஷிகளின் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சப்த கன்னிகள் சிலைகளும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் ஆலத்தியூரில் உள்ள அனுமார் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வசிட்ட முனிவரால் சிருஷ்டிக்கப்பட்டது. மூலஸ்தானத்தில் ராமபிரான் சீதை இல்லாமல் தனித்து காட்சியளிக்கிறார். சீதையைத் தேடிச் செல்லுமாறு அனுமரிடம் சொல்கிறார் ராமன். அப்போது ராமன் சீதையின் அடையாளங்களைச் சொல்ல அதைக் கேட்கும் கோலத்தில் அனுமன் இங்கே வீற்றிருக்கிறார்.

கோவை உக்கடம் உஜ்ஜைனி மகா காளியம்மன் கோயிலில் உள்ள அஷ்ட புஜ துர்க்கையின் தலையில் சிவபெருமானின் திரு உருவம் உள்ளது. சிவனையே தாங்குபவள் என்பதால், இவளுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்றாகிறது. வெளிடம் பக்தியுடன் வைக்கும் நியாயமான கோரிக்கைகள், கிரகதோசங்களை எல்லாம் தாண்டி வெற்றி பெறுகிறது என்பது கூடுதல் சிறப்பு. 

Tags :
× RELATED சுந்தர வேடம்