×

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

சப்த ரிஷிகளும் ஆறு இடங்களில் ஈசனை நிறுவி வழிபட்ட தலங்கள் ஷடாரண்ய தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, பாலாற்றங்கரையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரம். வன்னிமரக் காட்டில் அகத்திய மாமுனி தன்  திருக்கரங்களால், மணலைக் கொண்டு உருவாக்கிய ஈசனை ஸ்தாபித்து வழிபட்ட தலம் இது. தான் நிறுவிய லிங்கத் திருமேனியை வழிபட்டு வந்தார் குறுமுனி. அவர் பூஜித்த இத்தலம் மிகவும் தொன்மையானது. காலப் போக்கில் அந்த லிங்கத் திருமேனி புற்றால் மூடப்பட்டது. புற்றினுள் அருளும் புண்ணியனை அடையாளம் கண்டு  கொண்ட காராம் பசு ஒன்று, அவருக்கு தன் மடியினால் தினமும் பால் சொறிந்து, அபிஷேகித்து மகிழ்ந்தது. கொட்டடியில் அனைத்து பசுக்களும் பால் சுரக்க, அந்தக் காராம்பசு மட்டும் பால் தராததேன் என்ற சந்தேகம் வலுத்தது  சொந்தக்காரருக்கு. மறுநாள் அதைப் பின் தொடர்ந்தபோது காரணம் புரிந்தது. புற்றின் உள்ளே சிவலிங்கத் திருமேனி இருப்பதை அறியாமல், ஆவேசமாக புற்றை கம்பால் அடித்தான். அன்று பிட்டிற்கு மண் சுமந்து பாண்டிய மன்னனால் பட்ட  அடியே பரவாயில்லை எனும் அளவிற்கு பலத்த அடி வாங்கிய ஈசனின் லிங்கத் திருமேனியிலிருந்து வெள்ளமென குருதி வழிந்தோடியது. திகைத்துப் போன மாட்டு சொந்தக்காரர், தன் மன்னனிடம் நடந்த சம்பவங்களை கூற மன்னனும் சம்பவ இடத்திற்கு விரைந்தான். அப்போது அங்கிருந்த ஒரு சிறுவனின் மேல் அருள் வந்து, ஈசனுக்கு ஆலயம் எழுப்பினால் குருதி நிற்கும் எனக் கூற, அவ்வாறே மன்னனும் இத்  தலத்தை கட்டியதாக தல வரலாறு கூறுகிறது.

அதன்பின் பல காலம் திருக்கோயிலில் வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன. அன்னியர்கள் படையெடுப்பால் கவனிப்பாரின்றி இருந்த ஆலயம், பிற்காலத்தில் சில ஜமீன்தார்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. 1993ம் வருடம் சி(வ)ல  அன்பர்களால் உழவாரப் பணி செய்யப்பட்டு  ஈசனின் அருளால் திருப்பணிகள் தொடங்கின. மெய்யன்பர்களும், சிவனடியார்களும் இணைந்து திருக்கோயிலின் சுற்றுச் சுவர்கள், மூலஸ்தான கோபுரங்கள், கருவறை போன்றவற்றை சீர் செய்து  1997ம் வருடம் கும்பாபிஷேகம் செய்தனர். அதன்பின் திருக்கோயிலில் வன்னிமரத்தின் கீழே விநாயகர், சனிபகவான் சந்நதிகளும், அஷ்டதிக்பாலகர்கள், நவகிரக மண்டபம். கொடிமரம் ஆகியவற்றை அமைத்து, கருவறைக்கு வலது புறம்  சரபேஸ்வர மூர்த்தியையும் பிரதிஷ்டை செய்தார்கள். 1999ம் வருடம் பெரியோர்கள் நல்லாசியுடனும், ஈசனின் ஈடில்லா கருணையுடனும் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அடுத்ததாக, மிக பிரமாண்டமான, நேர்த்தியான கொலு  மண்டபம் கட்டப்பட்டது. அகத்திய மாமுனிக்கு லலிதா த்ரிசதியை உபதேசித்தருளிய ஹயக்ரீவரும் இங்கு எழுந்தருளியுள்ளார். மூலவரான அகத்தீஸ்வரரை திங்கட்கிழமைகளில் சந்திர ஹோரையில் பச்சை கற்பூரம் கொண்டு அபிஷேகம் செய்தால் கிரக தோஷங்களிலிலிருந்து நிவாரணம் கிட்டுவதாகவும், செல்வ வளம் பெருகுவதாகவும் பக்தர்கள் அனுபவபூர்வமாக  நம்புகின்றனர். அம்பிகை புவனேஸ்வரி எனும் திருநாமம் கொண்டு ஆவுடையார் மீது நின்ற நிலையில் அபூர்வமான திருமேனியளாக தரிசனம் அளிக்கின்றாள். பவுர்ணமி அன்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவர் வாழ்வில் ஒளியேற்றுபவளாம்  இந்தத் திருவினள். மேலும், அத்தினத்தில் ஸப்த ரிஷிகளுக்கும் விசேஷமான நைவேத்தியங்களுடன் பூஜை நடக்கிறது. பூஜை முடிவில் வழங்கப்படும் அந்த பிரசாதங்கள், நோய் நீக்கும் மருந்தாக பக்தர்களால் விரும்பி அருந்தப்படுகின்றன.

ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் இத்தல சரபேஸ்வர மூர்த்தியை வணங்க கண் திருஷ்டி, நோய் நொடிகள் தீர்கிறதாம். ஏழரைச் சனி, ஜென்ம சனி, சனி தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், திருமணத் தடை, மக்கட் பேறு தடை  உள்ளவர்களும் இத்தல வன்னிமர விநாயகரையும், சனிபகவானையும் வணங்க, அதிசயக்கத்தக்க வகையில் தடைகள் நீங்குகின்றனவாம். வெள்ளிக்கிழமைகளில் ஹயக்ரீவர் சந்நதியில் நெய்தீபம் ஏற்றி வணங்கினால், தேர்வில் வெற்றி, வெளி நாட்டில் வேலை மற்றும் உயர் கல்வி படிக்க வாய்ப்பு கிட்டுவதாக பயனடைந்தவர்கள் கூறுகின்றனர்.இங்கே, எட்டுத் திக்குகளிலும் அருளும் அஷ்ட திக்பாலகர்களைத் தரிசிக்க, வாஸ்து குறைபாட்டால் வீட்டில் ஏற்படும் துன்பங்கள் தொலைகின்றனவாம். மேலும் வீடு, மனை பாக்யமும் கிடைக்கிறதாம்.
மகாசிவராத்திரி அன்று ஈசனுக்கும், நவராத்திரி ஒன்பது நாட்கள் அம்பிகைக்கும் வெகு விமரிசையாக உற்சவங்கள் நடக்கின்றன. இல்லை என்னாது வரமருளும் அகத்தீஸ்வரரையும், புவனேஸ்வரி அன்னையையும் வணங்கி வாழ்வில் வளம்  பெறுவோம்.
இத்தல முருகபெருமானுக்கு பீட்ரூட் சாதம் நிவேதித்தால் செவ்வாய் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2
பாஸ்மதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகதூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்                
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, மூடி போட்டு மூடி, 3 விசில் விட்டு இறக்குகிறார்கள். பிறகு பீட்ரூட்டை துருவி,  தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்கிறார்கள். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்  கொள்கிறார்கள். பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்கு வதக்குகிறார்கள். பிறகு அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, துருவி வைத்துள்ள பீட்ரூட்டை  போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வேக வைக்கிறார்கள். பீட்ரூட் வெந்ததும் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, கொத்தமல்லியைத் தூவி நிவேதிக்கிறார்கள். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாவில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் வன்னிவேடு செல்லலாம். வாலாஜாவிலிருந்து 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

- ந.பரணிகுமார்

Tags :
× RELATED விரைவு தபால் மூலம் சபரிமலை கோயில் பிரசாதம்