×

தீபங்கள் பேசும் தீபாவளி

கண்ணன் மனம் கனித்தோட்டம்
கன்னியர் காதல் வண்டாட்டம்
கன்னம் மின்னும் வைரமதில்
பொன்னிதழ் முத்தம் -அந்த
கருத்தோவிய பிரகாசத்தில்
நின்றொளிரும் தீபம் வெட்கும்
ஐந்து குண தீபச்சுடரை
நான்கணி  குலமங்கையர் போற்றுவர்!

கருத்தில் நிறைந்து
காரியம் புரிந்து
காலம் தானென
காட்டும் கண்ணபிரான்!
நீர்துளியில் பிறந்தோம்
தீயில் கலந்தோம் எனும்
தத்துவ உலக நெறியை
தனஞ்செயனுக்கு
உரைத்து உயிரில்
கலந்த கண்ணபிரான்!

ஆசை ஆடை கட்டி
பாசப்பட்டு மிளிர
அன்பெனும் சங்குசக்கரம் சுழலட்டும்
அக்கம்பக்கம் ஒளி பரவட்டும்!
அச்சமெனும் மத்தாப்பை  கொளுத்தி
பேராசை, அகங்காரம் விலக்கி
பரந்தாமனை சரண்புகும் தீபாவளி!

அசுர மனமேடை மீதாடும்
அழுக்காறு கவர்ச்சி மங்கை-அதன்
இருள்முகம் விலக்கும் தீபங்கள்
இறைவனாம்  உத்தமன்
இதயம் தொடும் ராகங்கள்
இல்லம்தோறும் பாடுங்கள்!
எண்ணெய் எனும்
விதியுள்ளவரை
உயிர்தீபம் எரியும்
கண்ணன் பாதம்
அடைக்கலம் புகுவோம்
அன்பு மட்டுமே
ஆயுள் கடந்து வாழும்!

ஆசையிருக்கு மனதிலே
அழகு இனிப்பு கண்ணனை
அள்ளி அள்ளி உண்ணத்தான்
ஓசையின்றி வெண்ணெய்
திருடும் பிஞ்சு கையை
முத்தமிட்டு கொஞ்சத்தான்!

தீபம் பேசும் தீபாவளி
இறை பேசும் இதயஒலி
பெண்ணாய் இருந்தால்
கோபிகையில் நானும் ஒருத்தியே!
ஆணாய் பிறந்ததால்  
அந்த ஆழ்வார்களில்
அடியேன் இளையவனே!

விஷ்ணுதாசன்

Tags : fires ,Diwali ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது