×

தெளிவு பெறுஓம்

?முன்னோர்கள் வழிபாடு முக்கியமாகச்  செய்யவும் என்று சொல்கிறார்கள். எனக்கு எப்படி செய்வது என்று புரியவில்லை.  தயவுசெய்து எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.
- செல்வம், பரப்பனங்காடி.

பெற்றவர்களுக்கு  வருடந்தோறும் தவறாமல் சிராத்தம் என்று அழைக்கப்படும் திவசத்தினை சரிவரச்  செய்ய வேண்டும். அதே போல பிரதி மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில்  விரதம் இருந்து சமைத்த உணவினை படையலிட்டு வழிபட்டு காகத்திற்கு உணவு வைத்த  பின்பு விரதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே முன்னோர் வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. தந்தை இல்லாதவர்கள் மட்டுமே இதனைச் செய்ய இயலும். தந்தை  உயிருடன் இருந்து தாயார் மட்டும் இல்லாதவர்கள் இந்த அமாவாசை விரதத்தினை  கடைபிடிக்க இயலாது. அதே நேரத்தில் தாயார் உயிருடன் இருந்தாலும், தந்தை இல்லாதவர்கள் கண்டிப்பாக அமாவாசை தோறும் விரதம் மேற்கொண்டு மேற்சொன்னவாறு  உணவினைப் படையலிட்டு வணங்க வேண்டும்.

சிலர் மாதந்தோறும் வருகின்ற அமாவாசை  நாட்களிலும், தமிழ் மாதப் பிறப்பு நாட்களிலும், கிரஹணம் மற்றும்  புண்யகாலங்களிலும் தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். இன்னும் சிலரோ  புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை, தக்ஷிணாயண காலத்தில் வருகின்ற  முதல் அமாவாசை ஆன ஆடி அமாவாசை, உத்தராயண சமயத்தில் வருகின்ற முதல் அமாவாசை ஆன தை அமாவாசை ஆகிய நாட்களிலும், ஒரு சிலர் மாசிமகம் வருகின்ற நாட்களிலும்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவார்கள். இது அவரவர் சம்பிரதாயத்திற்கு உட்பட்டது. இதுபோக  காசி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் போன்ற புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்பவர்கள்  தாங்கள் செல்லும் நாள் எந்த நாளாக இருந்தாலும் அங்கே அந்த புண்ணிய  தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

இதனை  சிறப்பு வழிபாடாக கணக்கில் கொள்ளலாம். இந்த தர்ப்பணம், திவசம் முதலானவற்றை  புரோகிதர்களின் துணைகொண்டு செய்ய வேண்டும். வீட்டினில் அமாவாசை நாட்களில்  படையலிட்டு வணங்கும்போது புரோஹிதரின் துணை அவசியமில்லை. இவ்வாறு பிரதி  வருடந்தோறும் தவறாமல் தன்னை பெற்றவர்களுக்கு திவசம் செய்தும், அமாவாசை  தோறும் தவறாமல் படையலிட்டு வணங்கி வருவதுமே முன்னோர் வழிபாடு ஆகும். இதனைச்  சரிவர செய்பவரின் வீட்டில் முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் வம்சம் தழைக்கும்,  செல்வ வளம் பெருகும், மனதில் நிம்மதி என்பது நிறைந்திருக்கும் என்பதில்  எந்தவிதமான ஐயமும் இல்லை.

?ஆண்கள் விளக்கேற்றினால் ஆண்களே குளிர்விக்கக் கூடாது, தானே குளிரட்டும் என்று சொல்கிறார்கள். வேலை நிமித்தமாக நான் வெளியூரில் தனியாக தங்கியிருக்கிறேன். எரிகின்ற விளக்கை அப்படியே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல தயக்கமாக உள்ளது. என்னுடைய சந்தேகம் நீங்க வழி சொல்லுங்கள்.
- விஜயா செல்வம், கேரளா.

தயக்கமே தேவையில்லை. ஆண்கள் விளக்கேற்றினால் அதனை குளிர்விக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. வேலைக்குச் செல்லும் நீங்கள் பூஜையை முடித்த பிறகு தாராளமாக விளக்கினை குளிர வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம். இதில் எந்த விதமான தவறும் இல்லை. தயக்கமோ, சந்தேகமோ வேண்டாம். சிரத்தையுடன் பூஜையை முடித்து விட்டு விளக்கினை குளிர வைத்து விட்டு வேலைக்குச் செல்லுங்கள். அதனால் எந்த விதமான குறையும் உண்டாகாது. இந்த விதி ஆண் - பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

?சிவனுக்கு மட்டும் உருவம் இல்லாமல் எல்லா சிவன் கோயில்களிலும் லிங்கம் மட்டுமே வைத்து பூஜை நடக்கிறது. இது ஏன்? இதற்கான அர்த்தம் என்ன?
- மு. வேம்புநாதன், பட்டாபிராம்.

இறை வழிபாட்டில் உருவ வழிபாடு, அருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு என்று மூன்று வகை உண்டு. உருவ வழிபாடு என்பது முழுமையான உருவத்தினை வைத்து வழிபடுவது. நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் விநாயகர், முருகன், அம்மன், பெருமாள் முதலான தெய்வங்களை உருவ வழிபாட்டின் மூலம் வழிபடுகிறோம். உருவமே இன்றி அருவ வழிபாடு என்பதும் உண்டு. அதாவது இறைவனை மனதில் மட்டும் தியானித்து ஒரேயொரு விளக்கினை மட்டும் ஏற்றி வைத்து அந்த விளக்கொளியில் இறைவனை மானசீகமாகக் கண்டு வழிபடுவார்கள்.

இவ்வாறு உருவமும் இன்றி, அருவமும் இன்றி இடையில் உருவமும் அருவமும் இணைந்த ஒரு நிலையே அருஉருவ வழிபாடு என்பது. இந்த அருஉருவ வழிபாட்டில் முதன்மையானதே சிவலிங்க வழிபாடு. மனித வடிவில் இறைவனை உருவகப்படுத்தாமல், இறைசக்தியை ஒரு கல்லில் கொண்டு வந்து வழிபடுவது. இந்த சிவலிங்கம் என்பதற்குள் ஆயிரக்கணக்கான தத்துவங்கள் அடங்கியிருக்கிறது. அதில் முக்கியமானது சிருஷ்டி என்பது.

அதாவது ஆணும், பெண்ணும் இணையும்போது அங்கே சிருஷ்டி என்பது உருவாகிறது, ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே இந்த உலகமானது இயங்கும், சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கருத்தினை வெளிப்படுத்துவதே சிவலிங்க தத்துவத்தின் மையக்கருத்து ஆகும். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் சிவசக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடே சிவலிங்கம். இந்த சிவலிங்கத்திற்குள் இந்த உலகில் உள்ள அனைத்து சக்திகளும் அடங்கிவிடுகிறது. அந்த சிவலிங்கத்தை வழிபடுவதால் உலகின் ஆதிமூலத்தையே, அதாவது ஆதார சக்தியையே வழிபடுவதற்கான பலன் வந்து சேரும் என்பதே லிங்க வழிபாட்டின் தாத்பர்யம் ஆகும்.

?குளிகை என்பது என்ன? அந்த நேரத்தில் இறுதிச் சடங்கை நடத்தாமல் நிறுத்திவிடுவது ஏன்?
- அயன்புரம் த. சத்தியநாராயணன்.

ராகுகாலம், எமகண்டம் போல குளிகை என்ற காலத்தையும் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். ஒரு நாளின் பகல்பொழுது அளவான 12 மணி நேரத்தை எட்டு பாகங்களாக அதாவது ஒன்றரை மணி நேர கால அளவாகப் பிரித்து நவகிரஹங்களில் நிஜகிரஹங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோருக்கு தலா ஒரு பகுதியும், ராகு, கேதுக்கு ஒரு பகுதியும் ஆக மொத்தம் எட்டு பகுதிகளாகப் பிரித்து அளித்திருக்கிறார்கள். இந்த கால அளவுகளை கிரஹங்களின் துணைகோள்களுக்கு உரிய காலமாகச் சொல்வார்கள்.

சூரியனுக்கு காலன், சந்திரனுக்கு பரிவேடன், செவ்வாய்க்கு ம்ருத்யு, புதனுக்கு அர்த்தப்ரகணணன், குருவிற்கு எமகண்டன், சுக்கிரனுக்கு இந்திரதனுசு, சனிக்கு குளிகன், ராகு/கேதுவிற்கு ராகுகாலம் என இந்த கால அளவு பிரிக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு சனிக்கிழமை அன்று காலை ஆறு மணி முதல் ஏழரை மணி வரை சனியின் துணைக்கோள் ஆன குளிகனின் காலமாக குளிகை என்று குறிப்பிட்டிருப்பார்கள். அப்படியே தலைகீழாக வெள்ளி அன்று ஏழரை முதல் ஒன்பது வரை, வியாழன் அன்று ஒன்பது முதல் பத்தரை மணி வரை என்று இந்த அளவு குளிகையின் அளவு தொடர்ந்து கொண்டிருக்கும்.

இது குளிகனுக்கு உரிய காலம் என்ற பெயரில் குளிகை என்று அழைத்தார்கள். இந்த நேரத்தில் எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் அது தொடர்ந்து கொண்டிருக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இறுதிச்சடங்கினைச் செய்தால் தொடர்ந்து அந்த வீட்டினில் இறுதிச்சடங்குகளாக நடந்து கொண்டிருக்கும் என்று நம்புவதால் குளிகை நேரத்தில் அசுப நிகழ்வுகளைச் செய்வதைத் தவிர்க்கிறார்கள். குளிகைக்கு உரிய கால அளவினை அன்றாடம் உபயோகிக்கும் நாட்காட்டிகளிலும் நம்மால் காண முடியும். பெரியவர்கள் வாக்கின்படி குளிகைக்கு உரிய கால நேரத்தில் அசுப நிகழ்வுகளைத் தவிர்ப்பதே நல்லது.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

Tags :
× RELATED காமதகனமூர்த்தி