×

காமெடி குணச்சித்திரம் வில்லன் என அசத்திய டெல்லி கணேஷ் மரணம்

சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 80. 1976ஆம் ஆண்டு பாலச்சந்தரின் பட்டிணப் பிரவேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான டெல்லி கணேஷ், இந்திய விமானப் படையில் டெல்லியில் வேலை பார்த்தவராவார். சினிமாவுக்காக தன் அரசு வேலையைத் துறந்து, முழு நேர நடிகனாக மாறினார். அதற்கு காரணம், நடிப்பு மீது அவருக்கு இருந்த காதல். நாடகங்களில் முதலில் நடித்தார். இவர் டெல்லியில் வேலை செய்த காரணத்தால் டெல்லி என்பது இவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது.

1981ஆம்‌ ஆண்டு வெளியான ‘எங்கம்மா மகாராணி’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் அதிகளவில் நடித்து பிரபலமானவர். சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘அவ்வை சண்முகி’, ‘நாயகன்’, ‘மைக்கேல் மதன காம ராஜன்’, ‘தெனாலி’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கே.பாலசந்தரின் ‘சிந்து பைரவி’ படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கமல்ஹாசன் படங்களில் இவர் இல்லாத கேரக்டர் கிடையாது என சொல்லும் அளவுக்கு கமலின் அத்தனை படங்களிலும் இவர் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அய்யர் கமலுடன் இணைந்து இவர் செய்யும் காமெடிகள் வரவேற்பை பெற்றவை. அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவரை வில்லனாக்கி புது முயற்சி செய்ததும் கமல்தான். அதேபோல், சின்னத்திரை மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். தனது மகனுக்காக ‘என்னுள் ஆயிரம்’ என்ற படத்தையும் தயாரித்தார்.

1979ம் ஆண்டு வெளியான ‘பசி’ திரைப்படத்திற்கு தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதேபோன்று தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருது இவருக்கு கொடுக்கப்பட்டது. சமீபத்தில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் சங்கம் வழங்கியது. 1944 ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்த இவர், மூன்று மாதங்களுக்கு முன் தன் 80 வயதை பூர்த்தி செய்தார். இதற்காக இவருக்கு குடும்பத்தினர் சதாபிஷேக விழா நடத்தினர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

கதாநாயகன், நகைச்சுவை, வில்லன் மற்றும் பல குணச்சித்திர வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வழங்கிய இவரின் இழப்புக்கு திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறது. இவரது இழப்பு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மனைவி, 2 மகள்கள், மகன் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அஞ்சலிக்காக வைக்கப்பட்ட டெல்லி கணேஷ் உடலுக்கு நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்பட திரையுலகினர் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் விடுத்த இரங்கல் செய்தியில், ‘‘டெல்லி கணேஷ் மறைந்த துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

Tags : Delhi Ganesh ,Chennai ,Balachander ,Indian Air Force… ,
× RELATED லஸ் சர்ச் சாலையில் “இயக்குநர் சிகரம்...