×

தோல்விப் படமெல்லாம் இங்கே ஹிட்டோ ஹிட்டு யூடியூபில் கலக்கும் இந்தி டப்பிங் தமிழ் படங்கள்

சென்னை: தியேட்டரில் தோல்வி அடைந்த தமிழ் படங்கள் யூடியூபில் இந்தி டப்பிங்கில் பெரும் சாதனை படைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பல படங்கள் தியேட்டர்களில் ஓடுவதில்லை. கடும் விமர்சனங்களுக்கு உள்ளான அப்படங்கள், ஓடிடியில் கூட வரவேற்பை பெறுவதில்லை. ஆனால் அந்த படங்களை யூடியூப் சேனலில் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடும்போது, வடஇந்திய ரசிகர்கள் அந்த படங்களை கொண்டாடி வருவது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோல்ட்மைன்ஸ் என்ற யூடியூப் சேனல் வட இந்தியாவில் மிகவும் பிரபலம். இந்த சேனலில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்கள் இந்தியில் டப் செய்து வெளியிடுவார்கள். அதுபோல் வெளியிடப்பட்ட பல படங்கள் பல மில்லியன் பார்வைகளை பெற்று சாதித்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் வட இந்தியாவில் சினிமாவுக்கான யூடியூப் சேனலில் கோல்ட்மைன்ஸ் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

தமிழில் வெளியாகி தோல்வி அடைந்த அஜித்தின் ‘அசல்’, விஜய்யின் ‘பைரவா’, சூர்யாவின் ‘அஞ்சான்’ மற்றும் ‘மாற்றான்’, தனுஷின் ‘மாரி 2’, ஜெயம் ரவியின் ‘பூமி’, கார்த்தியின் ‘சகுனி’, ஜீவாவின் ‘கீ’, ஜோதிகாவின் ‘ராட்சசி’, அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் 1’ உள்ளிட்ட படங்கள் இந்த யூடியூப் சேனலில் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. அவை பல மில்லியன் பார்வைகளை பெற்று பெரும் சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக, ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ படம் தியேட்டர்களிலும் ஓடிடியிலும் வரவேற்பை பெறவில்லை.

இந்த படம் யூடியூபில் ‘மேடம் கீதா ராணி’ என்ற பெயரில் இந்தியில் டப்பாகி 382 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. ‘அஞ்சான்’ படம் ‘கத்தர்நாக் கில்லாடி 2’ என்ற பெயரில் வெளியாகி 16 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. விஜய் நடித்த ‘பைரவா’ படம் அதே பெயரில் இந்தியில் வெளியாகி 22 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. ஜீவா நடித்த ‘கீ’ படம் 74 மில்லியன் பார்வைகளை அடைந்திருக்கிறது. தனுஷின் ‘மாரி 2’, 209 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

நயன்தாராவின் தோல்விப் படமான ‘டோரா’, இந்தியில் ‘காஞ்சனா தி வொண்டர் கார்’ பெயரில் வெளியாகி 19 மில்லியன் பார்வைகளை ரீச் செய்திருக்கிறது. இது குறித்து கோல்ட்மைன்ஸ் சேனலின் உரிமையாளர் மணிஷ் ஷா கூறும்போது, ‘பல தமிழ் படங்களை நாங்கள் அப்படியே டப்பிங் செய்யாமல், எடிட் செய்து பிறகு டப்பிங் செய்கிறோம்.

‘அஞ்சான்’ படம் நான் லீனியர் பாணி கதை. அதை எடிட் செய்து லீனியர் படமாக மாற்றினேன். யூடியூபில் அது சக்கை போடு போட்டது. மேலும் இந்த இந்தி டப்பிங் செய்யப்பட்ட தமிழ் படங்களை அதிகம் பார்ப்பது உ.பி மற்றும் பீகாரை சேர்ந்த ரசிகர்கள்தான். அவர்கள் ரசனையே வேறு மாதிரியாக உள்ளது. அவர்களுக்கு லாஜிக் எல்லாம் தேவையில்லை. பக்கா மசாலா படங்களை எதிர்பார்க்கிறார்கள். அதனால் இந்த படங்கள் யூடியூபில் ஹிட்டாகி, நானும் பணம் பார்க்கிறேன்’ என்றார்.

Tags : youtube ,CHENNAI ,OTD ,
× RELATED தமிழை விமர்சனம் செய்தாரா? சங்கீதாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்