×

அனுபவம் அபூர்வ பாடம்

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது: 30

சம்பவங்களால் ஆனது தான் வாழ்க்கை என்று ஒரு சித்தாந்தம் உண்டு. ஆனால் அந்த சம்பவங்களை அப்படியே நாம் கடந்து வந்த விடுகிறோமா என்ன? நிச்சயம் இல்லை. அந்த சம்பவங்கள் ஒரு வகை புரிதலையோ படிப்பினையையோ விட்டுச் செல்கின்றன. இனி ஒரு முறை அதேபோல ஒரு சூழல் நமக்கோ பிறருக்கோ ஏற்பட்டால் அதை எப்படி கையாள்வது என்கிற படிப்பினையை நமக்கு பரிசளித்துவிட்டு தான் எல்லா சம்பவங்களும் முடிகின்றன. மனிதர்கள் சம்பவங்களை பார்க்கிறபோதெல்லாம் அவற்றிலிருந்து ஏதேனும் ஒரு படிப்பினையை பெறுகிறோமா என்பதை சேர்த்துப் பார்த்தால் பரந்துபட்ட இந்த வாழ்க்கையே ஒரு பல்கலைக்கழகம் என்பது புலனாகும். என் கனவு நிறைவேறியது என் கனவு நிறைவேறவில்லை என்றெல்லாம் பேசுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். “எல்லோருக்கும் தான் கனவுகள் நிறைவேறுகின்றன. ஆனால் அவர்கள் விரும்புகிற அதே வடிவத்தில் எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை”. உண்மைதான். விமானப்படை தளபதியாக பதவி ஏற்க விரும்பிய டாக்டர் அப்துல் கலாம் அந்த கனவு நனவாகவில்லை என்று கவலைப்பட்டார். ஆனால் பின்னாளில் பாரதத்தின் குடியரசுத் தலைவர்  ஆனார். அதன் மூலம் பாரதத்தின் முப்படைகளுக்கும் தலைவராக உயர்ந்தார்.

கடவுளிடம் நாம் விரும்பி கேட்பவை வேறு வடிவங்களிலோ அல்லது இன்னும் மேன்மையான வடிவங்களிலோ நம்மை வந்து சேர்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் இந்தச் சம்பவம். பள்ளியில் படிக்கும்போது என் நெருங்கிய நண்பர் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்னும்  கனவை வளர்த்துக்  கொண்டார். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அவ்வளவாக விருப்பம் இல்லாமலேயே பொறியியல் துறையில் சேர்ந்து படித்தார். பின்னர் மேல்படிப்புக்கு அமெரிக்கா சென்றார். மேல் படிப்பு முடிந்ததும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ரேடியாலஜி துறையில் அவர் மேற்கொண்ட ஆய்வு மிகவும் புகழ்பெற்ற நிலையில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவருடைய ஆய்வுகள் பயன்பட்டன. இன்று ஃபிலெடெல்ஃபியவில்  ஏறக்குறைய பத்துப்பதினைந்து மருத்துவர்கள் அவருடைய ஆலோசனையின் கீழ் செயல்படுகிறார்கள்.

நாம் காண்கிற கனவுகள் நனவாக தான் செய்கின்றன ஆனால் நம் கனவுகளின் வடிவம் வேறு அவை செயல்முறைக்கு வருகிற வடிவம் வேறு என்பது இதுபோன்ற சம்பவங்களால் புரிகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் எல்லோருமே ஏறக்குறைய அடிக்கடி கடந்து வந்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் ஒரு சம்பவம் நடந்து முடிந்ததும் மறந்து விடுகிறோமே தவிர அவற்றை நம் வாழ்வுக்கு ஏதோ ஒன்றை சொல்லித் தரும் விஷயமாக நாம் காண்பதில்லை. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக வாழ்க்கை நடத்துகிறது. சொல்லப் போனால்  மண்ணில் விழும் விதைகள் தண்ணீர் பருகி முளைக்கின்றன. ஆனால் எல்லா விதைகளும் ஒன்று போலவே தண்ணீர் பருகி வளர்வதில்லை. விதைகள் அனைத்தையுமே பூமி ஒன்று போல் நடத்துவதில்லை. நான் போகின்ற பாதையெல்லாம்  பன்னீர் தெளிக்கப்பட்ட பரம சுகமாக தானிருக்கும்.

ஆனால் எப்போதாவது வாழ்க்கை நம்மில் வெந்நீர் தெளித்து வந்தார் அது ஏதோ ஒன்றுக்காக நம்மை பக்குவப்படுத்தி முளைக்க வைக்கும் முயற்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் தனக்கு வருட அனுபவங்களை நல்ல அனுபவங்கள் கெட்ட அனுபவங்கள் என்று பிரிக்கிறான் இவற்றில் எதிர்பார்த்த விளைவை தரும் அனுபவங்களை நல்ல அனுபவங்கள் என்கிறான். எதிர்பாராத விளைவுகள் ஏற்படுத்தும் சம்பவங்களை தீய அனுபவங்கள் என்கிறான். உதாரணமாக புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஒருவரின் இசை நிகழ்ச்சியை நேரடியாக போய் கேட்கிறீர்கள் அவரும் நன்றாக பாடுகிறார் ஆனால் இருக்கைகள் சரியாக இல்லை ஒலி ஒளி அமைப்புகள் சரியாக இல்லை என்றால் அந்த நிகழ்ச்சியை உட்கார்ந்து கேட்டதை ஒரு மோசமான அனுபவம் என்று மனம் வகைப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் பார்த்தால் அந்த நிகழ்ச்சி இசைக் கலைஞருக்கு மட்டுமல்ல அதனை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் அத்தனை பேருக்குமே மிகப்பெரிய பாடத்தை பரிசாக வழங்கியிருக்கும். அந்த வகையில் அந்த அனுபவமும் பொருட்படுத்த தக்கது தான்.

எனவே அது சிலருக்கு மோசமான அனுபவமாக பட்டாலும் இன்னும் சிலருக்கு நல்ல அனுபவமாக மாறிவிடுகிறது ஒரு மனிதன் பெரிதும் பயன் பெறுவது என்பது அவன் பெற்ற அனுபவங்களால் தான். அனுபவங்களை வகை பிரித்து ஒதுக்கி விடாமல் அவை தரும் நேரடி பாடங்களை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் ஒருவன் இயல்பாகவே உயர முடியும். பல அரசியல் இயக்கங்களில் தலைமை பொறுப்பில் இருக்கிறவரோடு சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் முரண்பட்டு வீராப்பு பேசி வெளியேறுபவர்களை நிறையவே பார்க்கிறோம். அப்படி  வெளியேறுபவர்கள் பலர் அதன்பிறகு சரியான பிடிமானம் இல்லாமல் தடுமாறுவது உண்டு. அதற்கு காரணம் தன்னினும் வலிமை வாய்ந்த ஒருவரை பகைத்துக் கொண்டதும் அந்த பகைக்கு ஈடு தரும் விதமாக தன்னை வளர்த்துக்  கொள்ளாததும் ஆகும்.இந்த சூழலை எப்படி கையாள்வது என்று பழமொழி நானூறு நமக்கு பாடம் எடுக்கிறது. கோபம் மிக்க ஒரு வேந்தன் வேண்டாததை செய்தாலும் அதை நாம் மனதில் கொள்ள வேண்டுமே தவிர செயலில் காட்டக்கூடாது. எவ்வளவு துன்பத்தில் இருந்தாலும் தூங்கும் புலியை எழுப்பக் கூடாது என்கிறார் முன்றுரையரையனார்.

'வெஞ்சின மன்னவன் வேண்டாத செய்யினும்
நெஞ்சத்து கொள்வ சிறிதும் செயல் வேண்டாம்
என் செய்(து) அகப்பட்ட கண்ணும் எழுப்புவவோ
துஞ்சும் புலியைத் துயில்'

இது  படிப்பறிவாலோ புலமையாலோ மட்டும் வந்த தெளிவு அல்ல. முழுமையான பட்டறிவு பின்புலமாய் நின்றால் தான் இவ்வாறு சிந்திக்க முடியும்.
எங்கெல்லாம் விவாதங்கள் உதவாது என்று நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் ஆழ்ந்த மௌனத்தை  வெளிப்படுத்துங்கள். அது ஆயிரம் சொற்களுக்கு சமம். மகாபாரதத்தில் பாண்டவர்கள் சார்பாக கௌரவர்களிடம் கண்ணன் தூது சென்ற கதை உங்களுக்கு தெரியும் இழிவாய் ஏசி இடித்துப் பேசி ஏளனம் செய்தான் துரியோதனன். கண்ணன் மௌனமாகவே இருந்தான். ஒரு கட்டத்தில் கண்ணனைக் கொல்ல அவன் ஆசனத்துக்குக் கீழே பாதாள அறை அமைத்து சதி செய்தபோது கண்ணன் விஸ்வரூபம் எடுத்தான். துரியோதனன் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் ஆடிப் போனார்கள்.

இதில் கண்ணனை என்றுமே வணங்காத சிலரும் அன்று வணங்கினர் என்பதை உணர்த்தவோ என்னவோ “அன்று துதித்தனரே” என்கிறார். மௌனத்தின் விஸ்வரூபம் விவாதங்களை தொடை நடுங்கச் செய்யும் என்பதற்கு இது ஓர் அடையாளம். வாழ்க்கையை சம்பவங்களின் தொகுப்பாக மட்டும் பார்க்காமல் அனுபவங்களின் தொகுப்பாகவும் பார்க்க தொடங்குபவர்கள், பட்டறிவின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நமக்கு பிடித்தமான பாடங்களை சொல்லித் தரும் ஆசிரியர் மேல் பிரியம் அதிகம் இருக்கும். பிடிக்காத பாடங்களை சொல்லித் தரும் ஆசிரியர் மேல் வெறுப்பு இருக்கும். பிரச்னை பாடத்திடமும் இல்லை. ஆசிரியரிடமும் இல்லை. மனதில் தான் இருக்கிறது. வாழ்க்கை என்னும் ஆசிரியர் வித்தியாசமானவர். அவரே எல்லாப் பாடங்களையும் எடுக்கிறார். விருப்பும் வேண்டாம். வெறுப்பும் வேண்டாம். புரிதலின் ஒளியே போதும்.
(தொடரும்)

-மரபின் மைந்தன் முத்தையா

Tags :
× RELATED காமதகனமூர்த்தி