×

வாழ்வை வளமாக்குவார் வாதாபி கணபதி

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான் கஜமுகாசுரனை அழித்தவர். கஜமுகாசுரனின் ரத்தம் படிந்து ஊரே செங்காடாக மாறியதால் திருச்செங்காட்டங்குடி என்ற பெயர் உருவானது. கணபதீச்வரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. கஜமுகாசுரனைக் கொன்ற பாவம் தீர விநாயகப் பெருமான் இத்தல உத்திராபதீஸ் வரரை வழிபட்டுள்ளார். இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மண்டபம் உயரம் மிகவும் குறைவாக உள்ளதால் அம்மண்டபத்தில் நின்று கொண்டு விநாயகரை தரிசிக்க முடியாது. மண்டியிட்டுதான் தரிசிக்க முடியும். பல்லவ மன்னனின் சேனாதிபதியாகப் பணியாற்றிய, சிறுத்தொண்டரான பரஞ்சோதி, வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் புரிந்து வெற்றி வாகை சூடிய போது கொண்டு வந்த கணபதிதான் இவர். அதனால் இவர் வாதாபி கணபதி என்றும் வணங்கப்படுகிறார்.

இவரின் துதிக்கை வலம்புரியாக உள்ளது சிறப்பு.பரஞ்சோதியாருக்கு இத்தல ஈசன் அருள் புரிந்ததைக் கேள்விப்பட்ட ஐயடிகள் காடவர்கோன்,  இத்தலத்திற்கு வந்து விநாயகரையும், ஈசனையும் தரிசித்து பேறு பெற்றார். பின்னாளில் இவர் நாயன்மாரானார். தினம் ஒரு சிவனடியார்க்கு உணவு படைக்கும் சிவத்தொண்டைப் புரிந்த  சிறுத்தொண்டரும் அவர் மனைவி திருவெண்காட்டுமங்கையும் ஒரு முறை சிவனடியார் உருவில் வந்த ஈசன் கேட்டபடி தன் மகன் சீராளனையே வெட்டி சமைத்து உணவாக்கி விருந்தளித்து பின் ஈசன் அருளால் அவனை மீண்டும் பெற்ற தலம். இத்தலம் நாகை மாவட்டம் நன்னிலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்