×

பிரதர் விமர்சனம்

சென்னையில் வசிக்கின்ற கார்த்திக் (ஜெயம் ரவி) சட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பெற்றோர் அச்யுத் குமார், சீதாவின் பேச்சைக் கேட்காமல் ஜாலியாக ஊரைச் சுற்றுகிறார். எதற்கெடுத் தாலும் ‘சட்டம்’ பேசுகின்ற அவரால் பெற்றோர் அல்லல்பட, அச்யுத் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். அவரைப் பார்க்க ஊட்டியிலிருந்து வரும் ஜெயம் ரவி அக்கா பூமிகா, தன் தம்பியைப் பொறுப்பான ஒரு ஆளாக மாற்றுவதாக சூளுரைத்து, அவரை தன் மாமியார் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.

எல்லாவற்றுக்கும் அட்டவணை போட்டு வாழ்கின்ற கறாரான கலெக்டர் ராவ் ரமேஷ், அவரது மனைவி சரண்யா பொன்வண்ணன், பூமிகா கணவர் நட்டி ஆகியோருக்கும், ஜெயம் ரவிக்கும் அடிக்கடி கருத்து ேமாதல் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் ஈகோ யுத்தம் வெடித்து, தன் கணவரிடம் இருந்து பிரிகின்ற பூமிகா, தனது மகன், மகளுடன் தனியாக வசிக்கிறார். அவர் மீண்டும் கணவருடன் சேர வேண்டும் என்றால், ஜெயம் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும். கணவருடன் தான் மீண்டும் இணைய வேண்டும் எனில், மாமனார் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பூமிகா நிபந்தனை விதிக்க, இதன் முடிவு என்னாகிறது என்பது மீதி கதை.

ஆக்‌டிங், ஆக்‌ஷன், டான்ஸ் என்று, தனது கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ள ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகனின் காதலுக்காக  ஏங்குகிறார். அவரும் காதலிக் கிறார். பிரியங்கா அருள் மோகன் அளவாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூமிகா, தனது தம்பியின் மீது பாசத்தைப் பொழிகிறார். கணவர் நட்டியை எதிர்க்கிறார். தனது மாமனார் ராவ் ரமேஷிடம் எகிறுகிறார். பிறகு சாந்தமாகிவிடுகிறார். நல்ல கேரக்டர்களை தேடித்தேடி நடிக்கும் நட்டி, இதிலும் மனதில் நிற்கிறார்.

சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், ராவ் ரமேஷ், சீதா, அச்யுத் குமார், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் தங்களது கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கின்றனர். பேமிலி சென்டிமெண்ட் கதைக்கு ஏற்ப நன்கு ஒளிப்பதிவு செய்த விவேகானந்த் சந்தோஷம், ‘மக்காமிஷி’ என்ற பாடலை கலர்ஃபுல்லாகப் படமாக்கியுள்ளார். ‘மக்காமிஷி’, ‘அமுதா’ ஆகிய பாடல்களில் பழைய ஹாரிஸ் ஜெயராஜைப் பார்க்க முடிகிறது. பின்னணி இசையிலும் முத்திரை பதித்துள்ளார். காமெடி படத்தில் லாஜிக்குகள் பார்க்க வேண்டாம். என்றாலும், திரைக்கதை மற்றும் காமெடி காட்சிகளில் இயக்குனர் ராஜேஷ்.எம் கவனம் செலுத்தி மாற்றி யோசித்திருக்கலாம்.

Tags : Karthik ,Jayam Ravi ,Chennai ,Asyut Kumar ,Jali ,Seetha ,
× RELATED தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி...