‘‘கருக்கினில் அமர்ந்தாள்’’

காஞ்சிபுரம்

மகிஷாசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கியது. எல்லாவற்றினுள்ளும் நிறைந்த சக்தி ஒன்றாகத் திரண்டது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவருக்குள் பொலிந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் பின்னிப் பிணைந்தது. சட்டென்று பிரபஞ்சத்தையே மறைத்து நிற்கும் பேரொளி உதயமாயிற்று. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷத்துடன் ‘துர்க்கா... துர்க்கா...’ என்று தலைமீது கரம் கூப்பித் தொழுதனர். ‘து’ எனும் எழுத்திலுள்ள ‘த்,’ சத்ரு நாசத்தையும், ‘உ,’ கர்மவினை அழிவையும், ‘ர்,’ நோயை விரட்டுவதையும், ‘க,’ பாவங்கள் பொசுங்குவதையும், ‘ஆ’ பயத்தை வெற்றிகொள்வதையும் குறிக்கின்றன. மகிஷனை அறைந்து தனது சூலத்தை பாய்ச்சி, தலையை வெட்டி அதன்மீதேறி நின்றாள் தேவி. அவளே மகிஷாசுரமர்த்தினியாகி பார் முழுதும் தன் அருளை பரப்பினாள். பிரபஞ்ச சக்தியான துர்க்கையின் அம்சமாக அவளிலிருந்தே பல்வேறு சக்திகள் வெளிப்பட்டு பல்வேறு துர்க்கை ரூபங்களாயின. ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு மந்திரம், உப தேவதைகள், வாகனம், தனித்த உருவம் ஆகியவற்றுடன் திகழ்ந்தன. அவர்களில் காலராத்ரி துர்க்கை என்பவள் தனித்துவம் மிக்கவளாக பொலிந்தாள். அவளையே அழகுத் தமிழில் கருக்கினில்
அமர்ந்தாள் என்று அழைத்தனர்.

கருக்கினில் கிராமிய வழக்கு மொழியில் கருக்கல் வேளை என்பது பொருள். அதாவது இருள் சூழ்ந்திருக்கும் நேரம் என்பதாகும். ஆகமங்கள் இவளை இருட்டில் வழிபாட்டிற்குரியவளாக சொல்கின்றன. மாலையும் இருளும் சந்திக்கும் நேரத்தையும் கருக்கல் என்று சொல்லலாம். முற்காலத்தில் இரவு பூஜைகள் இங்கு சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. மரங்களில் தெய்வங்கள் உறைவதாக வேத நூல்கள் உரைக்கின்றன. உதாரணமாக வாழைத் தண்டின் உட்புற மத்திய பாகத்தில் காளி உறைவதாகவும், அவளே ‘கதலீ கர்ப்ப மத்யஸ்தா காளி’ என்றும் சொல்வார்கள். வாழைத் தோப்பு காளியின் ஆட்சிக்குட்பட்டது. வேம்பில் அம்மன் குடி கொண்டிருப்பதை நம் அன்றாட வழிபாடுகளில் உணர்கிறோம். அதேபோல  பனைமரத்திலுள்ள கருக்குகளில் தன் கூர்மையான சக்தியோடு இவள் உறைவதால் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர். பனை மரக்காட்டில் நிலைகொண்டவள் என இவளை சில நூல்கள் குறிப்பிட்டுப் பேசுகின்றன. அதற்கு ஆதாரமாக இந்த கருக்கினில் அமர்ந்தாள் ஆலயத்தைச் சுற்றி நிறைய பனைமரங்கள் இருந்ததாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.  

    காண்பதற்கு அபூர்வமானவளும், அருள் செய்வதில் இணையில்லாதவளுமான கருக்கினில் அமர்ந்தாள் கோயிலுக்குள் செல்வோமா? கோயில் வளாகத்திலேயே மேற்கில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ‘‘கருக்கமர்ந்த பட்டாரியார் கோயில்’’ என்று காஞ்சி கல்வெட்டுக்கள் இக்கோயில் பற்றி பேசுகின்றன. கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகியவை பாங்குற அமைந்துள்ளன. கோயிலுக்கு வெளியே, வாயிலருகில், கருவறைக்கு நேராக பத்மாசனத்தில் புத்தர் தியானத்தில் ஆழ்ந்துள்ள சிலை வடிவங்களும், கத்தி, கேடயத்துடன் வீரன் சிற்பமும், நாகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலின் இருபுறமும் சுதையில் செய்யப்பட்ட துவாரபாலகர் நின்றிருக்கின்றனர். பக்கத்திலேயே நவகிரக சந்நதி அமைந்துள்ளது. கோயிலின் அர்த்த மண்டபம் நீள் சதுர வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஐந்தடி உயரமுடைய துர்க்கையின் சிற்பத்தைப் பார்க்க உடல் சிலிர்க்கிறது.

தேவி மாகாத்மியம், காலராத்ரி துர்க்கை எனும் கருக்கினில் அமர்ந்தாளை அழகாக வர்ணிக்கிறது. இருளைப்போல கருத்த மேனியை உடையவளாக பயங்கர ரூபத்தோடு விளங்குகிறாள். போர்க்களத்தின் மையத்தில் நெடிய உருவத்தோடு பலத்த காற்றினில் அலைந்தபடி இருக்கும் ஈட்டிகளைப் போன்ற கேசங்கள் இவளுக்கு. கழுத்தில் மின்னலைப் போன்று ஒளிவீசும் மாலை. கண்கள் நெருப்புப் பந்துகள் போல சுழன்று கொண்டிருக்கின்றன. மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை தெறிக்கிறது. துஷ்டர்களுக்கும் பகைவர்களுக்கும் பயத்தை உண்டாக்குகிறாள். அதேசமயம், பக்தர்களுக்கு அபய ஹஸ்தம் காட்டி இன்னருள் புரிகிறாள். இந்த வர்ணனைக்குட்பட்ட அதே உருவத்தை இங்கு மூல தேவியாக  வடித்திருக்கிறார்கள். எண்கரத்தவளான இவளுக்கு மெல்லிய தேகம்தான்; ஆனால் உறுதியோடிருக்கிறாள்.  கண்களில் கோபம் தெரிந்தாலும், அதன் மையத்தே கருணை ஊற்றும் கொப்பளிக்கிறது. காலடியில் வீழ்ந்திருக்கும் மகிஷாசுரன் மீது அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் தொன்மையும் காலராத்ரி தேவியின் சாந்நித்தியமும் மனதை நிறைக்கின்றன. துர்க்கையின் அம்சங்களில் சற்று உக்கிரமான தேவி இவள். அனுக்கிரகம் செய்வதில் தாயுள்ளம் படைத்தவளும் இவள்தான். காலம் கடந்த சக்தியான கருக்கினில் அமர்ந்தாளை காலம் தாழ்த்தாது வணங்கினால், அன்னையின் அருட்சக்தி, நம் உடலிலும் வாழ்விலும் மென்மையாக ஊடுருவுவதை சுகமாக உணர முடிகிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் வீதி வழியாக வள்ளல் பச்சையம்மன் சாலை, மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகே இக்கோயில் உள்ளது.

Tags :
× RELATED ஈசனின் அடிமுடி காண முயன்றபோது திருமால் வணங்கிய திருமாமுடீஸ்வரர்