×

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே... என் ஐயனே...

குறளின் குரல் 105

பிச்சையெடுத்து வாழ்வதற்கு மனிதர்கள் அஞ்ச வேண்டும் என்பது திருவள்ளுவர் வலியுறுத்தும் பல முக்கியமான கருத்துகளில் ஒன்று. இரவு என்ற சொல், தற்காலத்தில் இரவு நேரத்தைக் குறிக்க மட்டுமே பயன்படுகிறது. வள்ளுவர் காலத்தில் `இரவு’ என்பது பிச்சையெடுப்பதைக் குறிக்கும் சொல்லாக விளங்கியது.   `பிச்சையெடுத்து வாழலாகாது’ என்ற கருத்தை வலியுறுத்த `இரவச்சம்’ என்ற ஒரு தனி அதிகாரத்தைப் படைத்துள்ளார் வள்ளுவர். (அதிகாரம் 107). தம் கருத்தைப் பத்துக் குறட்பாக்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

‘கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.’
(குறள் எண் -1061)

 தம்மிடம் உள்ள பொருள் எதையும் மறைக்காமல் கொடை கொடுக்கும் நண்பர்களிடத்தும் கூட, இரந்து பொருள் பெறுவது சிறப்பானதல்ல. அதைவிட வறுமையடைதல் கோடிப்பங்கு நன்மை உடையது.

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.’
(குறள் எண் - 1062)

 இவ்வுலகத்தைப் படைத்த கடவுள் பிச்சையெடுத்து வாழ்வதற்கென்றே சிலரைப் படைத்திருப்பான் என்றால் அந்தக் கடவுள் பிச்சையெடுப்பவர்களைப் போலவே எங்கும் திரிந்து துன்பப்படுவானாக!

‘இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.’
(குறள் எண் - 1063)

வறுமைக் கொடுமையைப் பிச்சை கேட்டு வாங்கியே தீர்த்துக்கொள்ளக் கருதுவதைப் போன்ற தீய குணம் வேறில்லை.

‘இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு..’
(குறள் எண் -1064)

வசதி இல்லாத நிலையிலும் பிறரிடம் எதையும் கேட்டுப் பெறாத நற்குணம், உலகம் முழுவதிலும் அடங்காத பெருமையுடையது.

‘தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்..’
(குறள் எண் 1065)

சமைத்த உணவு வெறும் தண்ணீரைப் போன்ற கஞ்சியே என்றாலும், உழைத்துக் கிடைத்த அந்த உணவை விடச் சுவையானது எதுவுமில்லை.

‘ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.’
(குறள் எண் -1066)

வளர்க்கின்ற பசுமாட்டிற்குத் தண்ணீர் வேண்டும் என்று இரந்தாலும் கூட, நாவிற்கு அதைவிட இழிவான செயல் வேறொன்றும் இல்லை. இந்தக் குறளை விளக்கும்போது பழந்தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் `இரப்பது இழிவு என்றதால் இரந்து வாழ எண்ணுவது மனத்திற்கு இழிவு, இரக்க நடப்பது காலிற்கு இழிவு, ஏந்திப் பெறுவது கைக்கு இழிவு, பெற்று உண்பது வாய்க்கு இழிவு, பெறக் கேட்பது நாவிற்கு இழிவு’ என்கிறார். எனவே அனைத்துப் புலன்களுக்கும் இழிவு தரும் இரத்தலைச் செய்யலாகாது என்கிறது வள்ளுவம்.

‘இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.’
(குறள் எண் - 1067)

பிச்சையெடுத்து வாழ்பவர்களிடம் நானொரு பிச்சை கேட்கிறேன் என்கிறார் வள்ளுவர். அவர் என்ன பிச்சை கேட்கிறார் என நாம் வியக்கும்போது அவர் விளக்குகிறார். `வைத்துக் கொண்டே மறைப்பவர்களிடம் சென்று பிச்சை கேட்க வேண்டாம் என்று பிச்சையெடுத்து வாழ்பவரிடம் நான் ஒரு பிச்சை கேட்கிறேன்!’ என்கிறார்.

‘இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.’
(குறள் எண் - 1068)

பிச்சை என்னும் பாதுகாவல் இல்லாத மரக்கலம், செல்வர் தம்மிடம் இருப்பதை மறைத்து வைத்து இல்லை என்று சொல்லும் பாறை
தாக்குதலால் சுக்கு நூறாகும்.

‘இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.’
(குறள் எண் - 1069)

பிச்சை கேட்பதை எண்ணினால் நெஞ்சம் நெக்குருகும். கொடுக்க மறுப்பதை எண்ணினால் அந்த நெஞ்சமே அடியோடு அழிந்து போகும்.

‘கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.’
(குறள் எண் - 1070)

இல்லை என்ற சொல்லைக் கேட்டவுடனேயே இரப்பவர்களுடைய உயிர் போய் விடுகிறது. ஆனால் தம்மிடம் உள்ளதை இல்லை என்று கைவிரிப்பாருடைய உயிர் போகாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்குமோ யார் அறிவார்?

  * நம் புராணங்களில் தெய்வங்களே பிச்சை கேட்கும் நாடகத்தை நிகழ்த்தியுள்ளதைப் பார்க்கிறோம். வாமனாவதாரத்தில் திருமால் மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்ணைப் பிச்சையாகக் கேட்டார். தானம் கேட்ட பாலகனின் ஒளிமயமான தோற்றத்தில் உள்ளம் ஈடுபட்ட மகாபலி, வந்தவர் திருமாலாயிருக்கலாம் என குரு சுக்கிராச்சாரியார் தடுத்தும், `கடவுளே வந்து என்னிடம் தானம் கேட்டால் அதைவிடப் பெருமை எனக்கு வேறில்லை` என தானமளிக்க சம்மதித்தார். ஈரடியால் எல்லா உலகையும் அளந்து மூன்றாமடியை மகாபலி சொன்னபடி அவன் தலையில் வைத்தார் பெருமாள் என்கிறது புராணம். உலகளந்த பெருமாளை பிரமாண்டமான புடைப்புச் சிற்பமாகக் கொண்ட உலகளந்த பெருமாள் கோயில் காஞ்சீபுரத்தில் உள்ளது.....

திருமால் மட்டுமல்ல, சிவபெருமானும் பிச்சையெடுத்ததுண்டு. தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தைப் போக்குவதற்காக கையில் திருவோடு ஏந்தி அழகிய வாலிப உருக் கொண்டு பிச்சையெடுக்கப் புறப்பட்டார் சிவபெருமான். சிவன் எடுத்த வடிவங்களில் பிட்சாடனர் வடிவம்தான் வசீகர மூர்த்தி எனப்படுகிறது. சிவபெருமானின் பிட்சாடன வசீகர வடிவைக் கண்டு சொக்கிய தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகள் அவரையே வைத்தகண் வாங்காது பார்த்தவாறிருப்பது கண்டு முனிவர்கள் சினம் கொண்டனர்.

வந்திருப்பது யாரென்பதறியாது, தாங்கள் வளர்த்த யாக அக்னியிலிருந்து முனிவர்கள் சிவனை எதிர்க்க யானையை உருவாக்கி அனுப்பினார். சிவன் முனிவர்கள் அனுப்பிய யானையைக் கொன்று அதன் தோலை உடுத்திக் கொண்டார். அதுபோலவே அவர்கள் உருவாக்கி அனுப்பிய புலியின் தோலையும் ஆடையாக அணிந்தான். யாக அக்னியிலிருந்து சீறி வெளிப்பட்ட நாகங்கள் சிவனின் கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களாயின. வந்திருப்பது கடவுளான சிவபெருமானே என்றுணர்ந்த முனிவர்கள், பின்னர் அடிபணிந்து அவன் அருள் வேண்டினர் என்கிறது சிவனைப் பற்றிய கதை.....

தானம் கேட்கும் மனிதர்கள் எவ்விதமெல்லாம் இரந்து கேட்பார்கள் என்பதை ஒரு நாடகம்போல் அழகாகத் தீட்டிக் காட்டுகிறது குசேலோபாக்கியானம் என்ற நூலில் வரும் ஒரு செய்யுள்:

‘பல்லெலாம் தெரியக் காட்டி பருவரல் முகத்தில் கூட்டி
சொல்லெலாம் சொல்லி நாட்டி துணைக்கரம் விரித்து நீட்டி
மல்லெலாம் அகல ஓட்டி மானம் என்பதனை வீட்டி
இல்லெலாம் இரத்தல் அந்தோ இழிவிழிவு எந்த நாளும்!’

  செல்வந்தன் ஒருவனிடம் சென்று பல்லிளித்துப் பொருள் பெறச் செல்லும்போது எத்தனை சங்கடம் நேர்கிறது என்பதை திருப்பாடல் திரட்டு நூலில் வரும் ஒரு தனிப்பாடல் புலப்படுத்துகிறது. தானம் கேட்டு நின்றபோது தான் பெற்ற புண்களையெல்லாம் சொல்லிச் சிவனிடம் புலம்புகிறான் ஒரு வறியவன். அவனிடம் தான் பெற்ற புண்களைக் காட்டுகிறார் சிவபெருமான் என அங்கதச் சுவை ததும்ப எழுதப்பட்டுள்ளது பாடல்:

‘வஞ்சகர்களிடம் அலைந்த காலில் புண்ணும்
வாசல்தொறும் முட்டுண்ட தலையில் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சில் புண்ணும்
தீருமென்றே சங்கரன்பால் சேர்ந்தேன் அப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும் கோபமாகப்
பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும்
 பாருமென்றே காட்டி நின்றான் பரமன் தானே!’

ஞானிகள் மகான்கள் போன்றோர் பலர் தங்கள் கையில் திருவோடு வைத்திருந்தனர். பிச்சையெடுக்கும் பாத்திரமாக அதைப் பயன்படுத்தினர். அதில் இடப்படும் உணவு எதுவானாலும் அதை விருப்பு வெறுப்பின்றி உண்டு பசியாறினர். ஒருமுறை பிச்சையெடுக்கச் செல்லும் அவர்கள் பின்னர் அந்நாளில் இரண்டாம் முறை பிச்சைக்குச் செல்வதில்லை. கிடைத்ததை உண்டு எஞ்சிய நேரத்தை தியானத்திலும் தவத்திலும் கழித்தனர். உலகியல் வாழ்வு நடத்த எடுக்கும் பிச்சைதான் இழிவானது. மகான்களோ அருளியல் வாழ்வின் பொருட்டுப் பிச்சையெடுத்தனர். அத்தகைய பிச்சை நம் ஆன்மிக மரபில் உயர்வானதாகக் கருதப்படுகிறது.

  பட்டினத்தாரின் சீடரான பத்திரகிரியார் தங்கள் இருவருக்குமான உணவை நாள்தோறும் பிச்சையெடுத்துப் பெறக் கையில் ஒரு திருவோட்டை வைத்திருந்தார். அந்தத் திருவோடும் உடைமைதான் எனவும் அந்த உடைமையும் தேவையில்லை எனவும் உணர்ந்து பத்திரகிரியார் என்று திருவோட்டைக் கீழே போட்டு உடைத்தாரோ, அன்று அவருக்குச் சிவன் காட்சி தந்து, முக்தி வழங்கியதாக வரலாறு சொல்கிறது. இச்சம்பவம் நடந்த இடம் தமிழகத்தில் உள்ள திருவிடைமருதூர்.

உஞ்சவிருத்தி மரபு என்றொரு வாழ்க்கை மரபு நம் பாரத தேசத்தில் இருந்திருக்கிறது. இறைவன் நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கும் அடியவர்கள் பலர், தங்கள் உடலைப் பராமரிப்பதில் அதிக நாட்டம் செலுத்தியதில்லை. அவர்கள்  உஞ்சவிருத்தி மரபுப்படி தங்கள் வாழ்வை நடத்தியிருக்கிறார்கள்.  இறைவன் பெயரை உச்சரித்தவாறு கழுத்தில் கட்டிய செம்போடு தானம் வேண்டி வீடுகளுக்கு அவர்கள் செல்வார்கள்.  அடியவர்களை வணங்கி அவர்களது பிச்சைப் பாத்திரமான செம்பில் அரிசியை இட்டு, அவர்களிடம் ஆசிபெறுவார்கள் மக்கள்.

  செம்பு, அரிசியால் நிரம்பி விட்டால் அன்று தேவையான அரிசி கிடைத்து விட்டது என்று பொருள். உஞ்சவிருத்தி செல்பவர்கள் அதற்குமேல் அன்று அரிசி தானம் பெற மாட்டார்கள். மறுபடி, மறுநாள் தான் உஞ்சவிருத்திக்கு வருவார்கள். அந்த அரிசியால் ஆன உணவே அன்றைய அவர்கள் உணவு. மகான் தியாகராஜர் தாம் இயற்றிய ராம பக்தித் தெலுங்குக் கீர்த்தனைகளை உள்ளம் உருகப் பாடியவாறு உஞ்சவிருத்தி எடுத்துத்தான் வாழ்வை நடத்தினார் என்பதை அவர் வரலாற்றால் அறிய முடிகிறது.

சமூக நன்மைக்காக இறைவனையே பிரார்த்தித்து வாழ்ந்தவர்களைச் சமூகம் ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அமைந்த ஓர் ஏற்பாடு இது. இங்கே பிச்சை இழிவானதல்ல. உஞ்சவிருத்தி மரபில் வருபவர்களுக்கு அரிசி தானம் அளிப்பதைப் புண்ணியமாகக் கருதி அவ்விதம் தானமளிக்க மக்கள் தாமே விரும்பி முன்வந்தனர். பாடகி ருக்மிணி ரமணியின் தந்தையும் திரைப்படப் பாடலாசிரியருமான பாபநாசம் சிவன் சென்னை மயிலாப்பூர் வீதிகளில் உஞ்ச விருத்தி எடுத்ததுண்டு. அண்மைக் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளரும் பதிப்பாளருமான அ.கி. கோபாலன், தம் இறுதிக் காலங்களில், உஞ்சவிருத்தி எடுத்து வாழ்வது ஓர் உயரிய கலாசாரம் எனக் கருதி அவ்விதமே வாழ்ந்தார்.

ஆதிசங்கரர் இளம்பிராயத்தில் பிட்சை எடுக்கச் சென்றதையும் அப்போது ஓர் ஏழைப் பெண்மணி மிகுந்த கூச்சத்தோடு தன்னிடமிருந்த ஒரே ஒரு வாடிய நெல்லிக்கனியை ஆதிசங்கரரின் பிட்சா பாத்திரத்தில் இட்டு விட்டுக் கண்ணீரோடு வீட்டுக்குள் சென்றதையும் சங்கரர் வரலாறு சொல்கிறது. அந்தப் பெண்மணியின் வறுமை கண்டு உருகிய சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாட, அவள் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகள் பொன்மாரியெனப் பொழிந்த அற்புதத்தையும் சங்கரர் சரிதம் பேசுகிறது.

கொற்கை மன்னனாக விளங்கிய அதிவீரராம பாண்டியன் எழுதிய வெற்றிவேற்கை என்னும் நூல்  `கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே....’ என்கிறது. பிச்சையெடுத்தாகிலும் கல்வி கற்கலாம் என்று அது சொல்வதால் பிச்சையெடுப்பது எத்தனை இழிவானது என்பதையும் மறைமுகமாய் அது தெரிவித்து விடுகிறது.

  *மடிப்பிச்சை ஏந்துவது, அதன்மூலம் கிடைத்த பணத்தில் ஆலய வழிபாடு செய்வது, வீடுதோறும் சென்று பிச்சையெடுத்துக் கிட்டிய தொகை மூலம் ஆலயத்திற்குச் செல்வது என்றிப்படியெல்லாம் கூட பக்தர்கள் வேண்டுதல் செய்துகொண்டு நிறைவேற்றுகிறார்கள். அங்கப் பிரதட்சணம் செய்வது, அலகு குத்திக் கொள்வது போன்றவை உடலை வருத்தும் செயல்கள் என்றால் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தாழ்வது என்பது மனத்தை வருத்தும் செயல். இறையருளைப் பெறுவதற்காக அதையும் நான் ஏற்பேன் என்பதே இந்த வேண்டுதலின் பின்னணியில் உள்ள கருத்தோட்டம்.....

  *‘தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா!’ என்ற கண்ணதாசன் பாடல் கே.வி. மகாதேவன் இசையில் பி.சுசீலா குரலில் ‘சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தில் ஒலித்தறது. பிச்சையெடுக்க நேர்வதன் கொடுமையை விளக்கும் அந்தப் பாடலின் இரு அடிகள், வள்ளுவரது ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான், என்ற குறளின் இரு அடிகளை நினைவு படுத்துகின்றன.

‘பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும்
இளமையின் கொடுமை இந்த வறுமை அம்மா! - என்றும் இதுதான் நீதியென்றால் இறைவன் வேண்டுமா?’ `பிச்சைக்காரர்கள் இருப்பதே நியாயம் என்றால் இறைவனே தேவையில்லை’ எனச் சீறுகிறது வள்ளுவர் வழிவந்த கவியரசர் கண்ணதாசனின் நெஞ்சம். இளையராஜா எழுதி இசையமைத்த பாடலொன்று இந்த உடலையே ஒரு பிச்சைப்
பாத்திரம் என்கிறது.

‘பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே!
பிண்டம் என்னும் எலும்போடு சதை
நரம்பும் உதிரமும் அடங்கிய உடம்பெனும்
பிச்சைப் பாத்திரம் ....
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் - நான்
பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்? வெறும்
பாத்திரம் உள்ளது என்னிடத்தில் - அதன்
சூத்திரம் உள்ளது உன்னிடத்தில்!....’

 நடிகர் விஜய் ஆண்டனி நடித்து ‘பிச்சைக்காரன்’ என்ற பெயரிலேயே ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது. நோய்வாய்ப் பட்ட தாயைக் காப்பாற்ற, ஒரு துறவியின் அறிவுரையின் பேரில், ஊரை விட்டு விலகிச் சிலகாலம் பிச்சையெடுத்தே வாழ்கிறான் கதாநாயகன் என்பதே கதையின் மைய கரு. பிச்சைக்காரர்களின் பிரச்னைகளை அந்தப் படம் வித்தியாசமான கோணத்தில் அணுகியது. சாப்பிடத் தகுந்த நல்ல உணவை யாரும் பிச்சைக்காரர்களுக்குப் போட மாட்டார்கள் என்பது உள்படப் பல நுணுக்கமான மனித உளவியல் சார்ந்த விவரங்கள் அதில் சொல்லப்பட்டிருந்தன....

உலகியல் வாழ்வில் பிச்சையெடுத்து வாழ்வதைக் கண்டிக்கிறது வள்ளுவம். தேவைகளை வளர்த்துக் கொண்டு அந்தத் தேவைகளை உழைத்துப் பெறும் ஊதியத்தால் நிறைவேற்றிக் கொள்ளாமல் பிச்சையெடுத்து நிறைவேற்றிக் கொள்ள முயலுதல், மனிதரின் சுயமரியாதைக்கு இழுக்கானது. அருளியல் வாழ்வில் பிச்சையெடுத்து வாழ்வதை ஏற்கிறது நம் ஆன்மிகம். இறைநாட்டத்தோடு தியானத்திலும் தவத்திலுமே பொழுதைக் கழிக்கும் ஆன்மிகவாதிகளின் வயிற்றுப் பசியைப் போக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு.

‘துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.’

 - என இல்வாழ்க்கை என்ற ஐந்தாம் அதிகாரத்தில் எழுதுகிறார் வள்ளுவர். துறவியரை இல்லறத்தார் துணைநின்று காக்க வேண்டும் என்று சொல்வதால் அருளியல் வாழ்வு காரணமாகப் பிச்சை எடுப்பதை வள்ளுவர் எதிர்க்கவில்லை என்று கொள்ளலாம். (குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்