கரும்பை உண்ட கல் யானை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ளது.  இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கிவிட்டு அதன் பிறகு சுந்தரேஸ்வரர் சந்நதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. தேவியின் சக்தி பீடங்களுள் இது மந்த்ரிணீ பீடமாகத் திகழ்கிறது. பெண்கள், தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமான மன உறுதியை பெறுவதற்கும் மீனாட்சியே கதியென தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’’ என கூறும் அளவுக்கு மீனாட்சி அம்மனின் புகழ் கொடிகட்டிப்பறக்கிறது.

ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருட்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டுகாலங்களில் முறையே மஹா க்ஷோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, க்ஷோடஸீ ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாட்சி அன்னையின் சந்நதி இருக்கிறது. கருவறையில் அன்னை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் அருளாட்சி புரிகின்றாள்.

அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? பக்தன் தன் கோரிக்கையை அன்னையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது. சுவாமி சந்நதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன. 18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குகிறார். இதனால் அவர், “எல்லாம் வல்ல சித்தர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு இங்கு தனிசந்நதி உள்ளது. சித்தருக்கு அபிஷேகம் கிடையாது.

மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. இவரது சந்நதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. சிவனே இங்கு சித்தராக இருப்பதால் இவரது சந்நதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும் விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம். சோமசுந்தரர் சித்தராக வந்து கோயிலிலுள்ள கல் யானைக்குக் கரும்பு கொடுத்து உண்ண வைத்தது பொங்கல் நாளன்று தான். இதனை உணர்த்தும் விதமாக வருடம் தோறும் பொங்கலன்று இக்கோயிலில் இவ்விழா நடைபெற்று வருகிறது.

சி.லட்சுமி

× RELATED குடியிருப்பில் யானை புகுந்தது