×

தெரிவது பிம்பமல்ல, பரப்பிரம்மம்!

பகவத் கீதை -  75

நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மன்யேத தத்வவித்
பச்யஞ் ச்ருண்வன் ஸ்ப்ருசஞ் ஜிக்ரன்னச்னன் கச்சன்
ஸ்வபஞ் ச்வஸன் (5:8)
ப்ரலபன் விஸ்ருஜன் க்ருஹ்ணன்னுன்மிஷந் நிமிஷன்னபி
இந்தரியாணீந்த்ரியார்த்தேஷு வர்தந்த இதி தாரயன் (5:9)

‘‘அர்ஜுனா, ஆன்ம தத்துவத்தைப் பரிபூரணமாக உணர்ந்த ஒரு யோகி, என்றுமே தன் புலன்களின் இச்சைகளுக்கு அடிமையானவன் இல்லை. ஆமாம், பார்ப்பது, கேட்பது, மேனியைத் தீண்டுவது, முகர்வது, அருந்துவது, நடப்பது, உறங்குவது, சுவாசிப்பது, பேசுவது, கழிவை வெளியேற்றுவது, கண்கள் திறப்பது - மூடுவது - சிமிட்டுவது ஆகிய இவை எல்லாமே எல்லா புலன்களும் தத்தமது பொருட்களில் சுழலுபவைதானே தவிர, மற்றபடி அவற்றில் எதையும் தான் செய்வதாக அவன் கருதுவதில்லை.’’தன் உடல் இயக்கங்களில் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளாதவனே ஞானி! அவன்தான் ஆன்ம தத்துவத்தை அறிந்தவன்.

விஞ்ஞானம் ஐம்பூதங்களைத் தான் அலசுவதாகச் சொல்லிக் கொள்கிறது. ஆகாயம், பூமி, நீர், நிலம், காற்று என்ற அந்த இயற்கைகளைத் தான் ஆராய்வதாகச் சொல்லிக் கொள்கிறது. இந்த மமதையின் உச்சம்தான், அந்த இயற்கையை அனுமானிக்க முயற்சிக்கும் அதன் கோமாளித்தனம்தான், அந்த இயற்கையை அறுதியிடுகிறது. ஆமாம், இன்ன தேதியில், இன்ன பகுதிகளில் கடும் புயல் வீசும், மழை பொழியும் என்றெல்லாம் சொல்லி ‘ரெட் அலர்ட்’ கூட அறிவிப்பார்கள். ஆனால் புயலும், மழையும் இவர்களை கேலி செய்வதுபோல இவர்கள் பக்கமே திரும்பாது போய்விடும்!

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே மிகச் சரியாக குறிக்கப்பட்ட அமாவாசையும், பௌர்ணமியும் அந்தந்த நாளில், நாழிகையில், மிகச் சரியாக நிகழ்வதைக் கண்டு, அந்த பஞ்சாங்கப் புலிகளை வியந்து தாமும் அவர்களைப் போலவே கோடிழுத்து சூடுபோட்டுக்கொள்வதுதான் இன்றைய விஞ்ஞானப் பூனை! நாழிகைத் தப்பாமல் திதிகளையும், நட்சத்திரங்களையும், நாளையும், கிழமையையும், வாரத்தையும், மாதத்தையும், வருடத்தையும் அன்றே கணித்தவர்கள், தம் புலன்வழி போகாதவர்கள். அவ்வாறு கணித்ததும் தாம் அல்ல என்ற உண்மையையும் உணர்ந்தவர்கள்.

இன்றைய விஞ்ஞானிகள் சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறவர்கள். தான் சொன்னது நடக்காது போனாலும், அதற்கு ஏதேனும் சாக்கு சொல்லத் தெரிந்தவர்கள். அவமானத்துக்கு அஞ்சாதவர்கள், பொதுநல அக்கறை இல்லாதவர்கள். தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என்றெல்லாம் நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகச் சரியாக, இறையருளால் அனுமானித்தவர்களை அவமதித்ததன் விளைவுதான் இந்த இயற்கை மாற்றம், சீற்றம், சீரழிவு எல்லாம். விஞ்ஞானத்தின் விளிம்பைத் தொட்டவர்கள் என்று புகழப்படும் ஜப்பானியர்களும் கருவிகளால் காலத்தை அனுமானிக்க முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள்.

ஆமாம், அங்கே தொலைக்காட்சியில், ‘‘நேற்று இன்னப் பகுதியில் பெருமழை பெய்யும் என்று அறிவித்திருந்தோம். ஆனால் மழை பெய்யவில்லை அல்லவா? நிறைய பேர் குடை எடுத்துக்கொண்டு போயிருந்திருப்பீர்கள். சாரி…’’ என்று மன்னிப்பு கேட்கும் வழக்கம் இருக்கிறது, அங்கே! புலனுணர்வுகள் எல்லாம் தான் சம்பந்தப்பட்டதல்ல என்ற ஞானம் ஏற்படுமானால், அனுமானிப்பதும், அந்த அனுமானத்திற்கு உடன்படாத இயற்கையின் பிறழ்வும், அவமானப் பின்விளைவுகளும் ஏற்படாதிருக்கும். புதிய கண்டுபிடிப்புகள் என்று விஞ்ஞானம் அறிமுகப்படுத்தப்படுபவை எல்லாம் ஏற்கெனவே உள்ளதன் இன்னொரு சாயல்தானே தவிர வேறில்லை. சிறு குழந்தை வளர்கிறது.

அதற்கு வயது அதிகரிக்கிறது. உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. முதிய வயதில், இளமை முற்றிலுமாக உதிர்ந்துபோகிறது. இந்த கட்டத்தில் முதிய வயது என்பது ஒரு கண்டுபிடிப்பாக ஆக முடியுமா? சிறு குழந்தை உருவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றம் கொண்ட ஓர் உருவமாய் ஆகிவிட்டதால், இது புதுசு என்று சொல்ல முடியுமா? அந்தக் குழந்தையின் பரிணாம வளர்ச்சிதானே? சிறு குழந்தைப் புகைப்படத்தையும், முதிய வயது புகைப்படத்தையும் அருகருகே வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் இரு புகைப்படங்களிலும் இருப்பவர் ஒருவரே என்று அடையாளம் காண முடியாத பேதமை ஏற்பட்டு விடுகிறதே!

ஆனால் மனிதர் ஒருத்தர்தானே? அதாவது, புகைப்படங்களை ஒப்பிட்டு அறிந்துகொள்ள முடியாத ஓர் உண்மை, வயதாகிவிட்ட இவர்தான், குழந்தையாக இருந்தவர் என்பதுதான்! ஒரே தங்கம் பலவகை ஆபரணங்களாக ஒளிர்வதுபோலவே ஒரே சக்தி பல இடங்களில், பல ரூபங்களில் மிளிர்கிறது. கடற்கரைக்குச் செல்கிறோம். கடலின் கடைசி விளிம்பை எக்கிப் பார்க்கிறோம். அங்கே ஆகாயம் ஆரம்பிக்கிறது! முகத்தை மேலே மேலே தூக்கி, பின்னோக்கி வளைத்து அந்த ஆகாயத்தை கண்களால் அளக்கிறோம், அதன் எதிர் விளிம்பிலிருந்து பூமி ஆரம்பிக்கிறது. ஆக, ஆகாயமும், பூமியும் ஒரே சக்தியின் இரு அம்சங்கள் என்பது புரிகிறது. அதேபோல காற்று மழையையும் அழைத்து வருகிறது, தீயையும் ஜ்வாலை பொங்க வளர்க்கிறது.

ஆக, காற்று, நீர், தீ எல்லாமே ஒரே சக்தியின் வெவ்வேறு அம்சங்கள்தான்! கறுப்பான, கையில் அழுக்காக ஒட்டும் கரியை அருவெறுப்புடன் தூக்கி எறிகிறோம். அதே கரியின் பல்லாண்டு அழுத்தமான பரிமாணம், வைரமாக மினுமினுக்குகிறது. இந்தக் ‘கரி’யை பெரும் பணம் கொடுத்து, நம் மேனியில் ஆபரணமாகப் புரள விடுகிறோம். ஆக அடிப்படைத் தத்துவம் ஒன்றுதான். அதன் அணுகுமுறைதான் வேறு வேறு.  புலன்களால் நுகர்தலும், அவற்றைப் பொருட்படுத்தாததும் அத்தகையதே. மிகவும் அயோக்கியனாக, கொடியவனாக வாழ்வை நடத்தியவன், ஏதோ ஒரு புள்ளியில் நல்லவனாக மாறிவிடுகிறான் - வால்மீகி மாதிரி.

ஆனால் அந்தப் புள்ளி அவனுக்குள் ஏற்கெனவே இருந்திருக்க வேண்டும். அது இப்போது ஒளியாக வெளியே வருகிறது. இல்லாதது வராது. இதனால்தான் சிலர் ஒரு சமயம் மிகவும் நல்லவராகவும், ஒருசமயம் தீயவராகவும் நடந்துகொள்கிறார்கள். ஆகாயமும், பூமியும் போல நல்லதும், கெட்டதும் ஒருவருக்குள் சுழன்று, சுழன்று வந்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது.‘‘ஒருவனுக்கு எவ்வளவு காலம் திவ்விய சக்ஷுஸ் உண்டாகவில்லையோ, எவ்வளவு காலம் பொற்குளிகையால் பித்தளை பொன்னாக மாறவில்லையோ, அவ்வளவு காலம்வரை ‘நான்தான் கர்த்தா’ என்ற மதி மயக்கம் இருக்கும்.

அதுவரையில் ‘அந்த நற்காரியத்தை நான் செய்தேன்; அந்த கெட்டக் காரியத்தை நான் செய்தேன்’ என்ற வித்தியாச மனோபாவம் இருந்தே தீரும். இந்த வேறுபாடு உள்ள மனோபாவம்தான் சம்ஸாரம் நீடித்திருப்பதற்குக் காரணமாகிய மாயை. நல்வழியில் செலுத்துவதும், ஸத்வகுணம் மேலோங்கி நிற்பதுமாகிய வித்யாமாயையில் சரணம் புகுந்தால்தான் ஒருவன் ஈஸ்வரனை அடைவான். ஈஸ்வரனை நேரில் கண்டு அவனுடைய ஸ்வரூபத்தை அறிபவன்தான் உண்மையான முக்தன். அவன் மாயையாகிய ஸமுத்திரத்தைத் தாண்டுபவன். ‘ஈஸ்வரனே கர்த்தா, தான் கர்த்தா அல்லன்’ என்று உணர்பவன் சரீரத்தோடு இருப்பினும் அவன் முக்தனே’’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

கண்ணாடி முன் நிற்கிறோம். நம் பிம்பம் தெரிகிறது. இப்போது கண்ணாடியை அகற்றிவிட்டால், நம் பிம்பம் தெரிவதில்லை. அதே கண்ணாடியை அகற்றாமல் நாம் நம் கண்களை மூடிக்கொண்டோமானால் இப்போதும் நம் பிம்பம் நமக்குத் தெரிவதில்லை. ஏன்? கண்ணாடி இருக்கிறது. அதன் முன்னால் நாமும் நிற்கிறோம். ஆனாலும் நம் பிம்பம் நமக்குத் தெரிவதில்லை. காரணம் கண்கள் மூடியிருப்பதுதான். கண் மூடியிருப்பதால், கண்ணாடி இல்லை என்றாகிவிடுமா, நாமும்தான் இல்லை என்றாகிவிடுமா? பிம்பமும் இல்லை என்றாகிவிடுமா? என்ன காரணம்? கண் என்பது ஒரு கருவி. அது பிம்பம் இருக்கிறது என்று நம் மூளைக்குத் தெரிவிக்கிறது. அதையே மூடிக்கொண்டு விட்டால், எதிரே பிம்பம் இருந்தாலும், அதை மூளைக்கு அது சொல்வதில்லை;

சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் அது வெறும் கருவி. இந்தத் தத்துவத்தை ஆண்டாள் வித்தியாசமாகக் கண்டாள். தன் தந்தையார் பெரியாழ்வார் கொய்துவரும் மலர்களை தன் தளிர் விரல்களால் தொடுத்து பூமாலையாக உருவாக்குவாள் ஆண்டாள். அந்த மாலையை பெரியாழ்வார் எடுத்துச் சென்று வடபத்ர சாயிக்கு சமர்ப்பிப்பார். பெருமாள் அந்த மாலையில் பேரழகுடன் திகழ்வதை அவர் ஒரு தந்தையின் பெருமையுடன் பார்ப்பார். தன் மகள் தொடுத்துத் தந்ததாயிற்றே! ஆனால் அவர்தான் ஆண்டாளைத் தன் மகள் என்று நினைத்திருந்தாரே தவிர, ஆண்டாள் தன்னைக் கண்ணனுக்குரியவளாகவே நினைத்திருந்தாள்.

அவள் பார்க்குமிடமெல்லாம் அந்தப் பரந்தாமனே காணப்பட்டான்.  கேட்கும் உரையிலெல்லாம் அந்தப் பரம்பொருளே கேட்கப்பட்டான். நுகரும் வாசத்தில் எல்லாம் அவனே மணத்தான். அருந்தும் அனைத்திலும் அவனே சுவையாய் இருந்தான். தழுவிச் செல்லும் தென்றலிலும் அவன் ஸ்பரிசத்தால் அவள் குளிர்ந்தாள். எங்கும், எதிலும், எப்போதும் கண்ணனே என்ற அவளுடைய உணர்வு, அவளால் கண்ணன் அல்லாததாக எதையும் அறிய இயலவில்லை. அதனால்தான் தன்னுடைய எல்லா செயல்களிலும் அவள் கண்ணனையே முன்னிருத்தினாள். அவனாலேயே அவள் செயல்பட்டாள். இது பெரியாழ்வாருக்குப் புரியவில்லை. ஒருநாள், வழக்கம்போல வடபத்ர சாயிக்கு மாலை சாத்தப் போனவர், திடீரென்று கண்களில் வெறி கொண்டார்.

அந்த அழகிய மலர்ச்சரத்தினூடே மெல்லிய முடி ஒன்று படர்ந்திருந்தது. அவ்வளவு நீளமான முடி ஆண்டாளுடையதாகத்தான் இருக்கும். மலர்களைக் கொய்து குடலையில் இட்டு அவளிடம் கொண்டு சேர்ப்பதோடு அவருடைய அந்தப் பணி முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு அவற்றை வண்ணம் வாரியாகப் பிரித்து, மெல்லிய வாழை நாரினால், மலர்களின் காம்புகளுக்கு நோகாத மாதிரி, மென்மையாக முடிச்சிட்டு, தொடுத்து மாலையாக்க வேண்டியது ஆண்டாளின் பொறுப்பு. ஆனால் இந்தப் பொறுப்பில் அவள்தான் எத்தனை அலட்சியமாக இருந்திருக்கிறாள்! தன் தலையிலிருந்து முடி உதிர்வதையும், அது மலர்களோடு கலந்து விடுவதையும், அதையும் மலர்களோடு சேர்த்துத் தொடுப்பதையும் அவள் உணரவில்லை என்றால், அவள் மனம் எங்கோ அலைபாய்கிறது. பரந்தாமனின் நினைவுத் தடத்திலிருந்து அவள் பிறழ்கிறாளோ என்று பெரியாழ்வாருக்குக் கோபமாகத்தான் வந்தது. ஆனால் நடந்தது என்ன? மலர்ச்சரம் தொடுத்து முடித்த ஆண்டாள் தன் பூந்தளிர்க் கரங்களால் அதன் இரு முனைகளையும் பற்றியபடி பூக்குடலையை நோக்கி வந்தபோது ஒரு கண்ணாடி குறுக்கிட்டது. அந்தக் கண்ணாடியில் பிம்பிப்பது யார்? தன் உருவம் அல்லாமல் இன்னொரு உருவம்… ‘கண்ணனேதான், என் கண்ணனேதான்,’ என்று குதூகலித்தாள் கோதை. ஆமாம், அவனுடனேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்ட அவளால் தன் பிம்பத்தைக்கூட கண்ணனாகத்தான் காண முடிந்தது!

‘அடேயப்பா, என்ன மோகனச் சிரிப்பு! இவனுக்குத் தந்தையார் கோயிலில் சூட்டுவதற்கு முன்னால் தானே சூட்டினால் என்ன?’ என்று எண்ணம் கொண்ட அவள், அந்தக் கண்ணாடிக்கு அந்த மாலையை சாத்தினாள். ஆனால் அது அப்படியே நழுவி கீழே விழுந்தது. கண்ணாடி ஒரு ஜடம்தானே, அதற்கு அவளுடைய பக்தியை ஏற்றுக்கொள்ளத் தெரியவில்லை! இரண்டு, முன்று முறை முயன்ற பிறகு ஒரு கணம் யோசித்தாள். பிம்பத்தைப் பார்த்தாள், பிறகு தன்னைப் பார்த்துக் கொண்டாள். இரண்டும் ‘கண்ணனே’! உடனே அந்த மாலையைத் தான் சாத்திக்கொண்டாள். எதிரே கண்ணன் பிம்பமும் மாலை தரித்து அழகு தரிசனம் தந்தது!

ஆனால் அவளுடைய தலைமுடியோ அந்த மாலையுடன் தானும் இணைந்தால் நேரடியாக அந்தப் பெருமானை தரிசிக்கலாமே. அவன் மார்பை அலங்கரிக்கலாமே என்று கருதியிருக்க வேண்டும். அதனாலேயே அவளிடமிருந்து பிரிந்து அந்த மாலையுடன் சேர்ந்துகொண்டது. அதைப் பார்த்துதான் வெகுண்டார் பெரியாழ்வார். அவருடைய கனவில் ஸ்ரீகிருஷ்ணன் தோன்றி, ‘ஆண்டாள் அணிந்த மாலையை அணிவதே தனக்கு உவப்பு’ என்று கூறி, அவருடைய அறியாமையைப் போக்கி, ஆண்டாளின், பரந்தாம ஐக்கிய பாவத்தை விளக்கினார். புலன்களின் செயல்கள் எல்லாம் தன் செயல்கள் அல்ல, அந்தப் பரம்பொருளின் திருவிளையாடல்களே என்று ஆண்டாள் அனைவருக்கும் உணர்த்தினாள்!

- பிரபுசங்கர்


(தொடரும்)

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்