×

வனவாசத்தில் பக்குவமான மனங்கள்

மகாபாரதம் - 96

‘‘திருதராஷ்டிரனுடைய பேராசை கருதியும் எங்களுடைய ஏழ்மையான நிலைமையைக் கருதியும் நீங்கள் சமாதானத்திற்குப் போகாதீர்கள். சமாதானம் பேசுவது ஒரு புருஷார்த்தம், புருஷ லட்சணம் என்பதாக அதில் ஈடுபடலாம். ஆனால், நீங்கள் சொன்ன பிராரப்த கர்மா மிகவும் தெளிவானது. திரௌபதிக்கு அவர்கள் செய்த தீங்கே எங்களுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். மனைவியின் மீது கை வைத்தும் பாண்டவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்ற ஏளனத்திற்கு ஆளாகி விட்டோம். இதை நினைக்க நினைக்க மனம் பொங்குகிறது. துரியோதனன் சாவு என் கையில் உறுதியாகி விட்டது. அவனை மனதில் பலமுறை கொன்று விட்டேன்.

கெட்டுப் போன ஒரு க்ஷத்திரியனை கொன்றுதான் ஆக வேண்டும். இதற்கு வேறு யார் முன் வருவார்கள். க்ஷத்திரியன்தான் வரவேண்டும். பணிவான சொற்களால் ஐந்து கிராமங்களையாவது கொடு என்று கேட்பது அவன் கொடுக்க மாட்டான் என்று தெரிந்து தானே. அவனோடு சமாதானத்தில் ஈடுபடுவது தரிசு நிலத்தில் விதை விதைத்தது போல. ஸ்ரீகிருஷ்ணா, இந்த நேரத்தில் எது உசிதமோ அதை செய்யத் துவங்குங்கள்.’’ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனன் பக்கம் திரும்பி அமர்ந்தார். அவன் பேச்சுக்கு பதில் சொல்லத் துவங்கினார். ‘‘நான் ஒன்றும் புதிதாக சமாதான முயற்சியைத் துவங்கி விடவில்லை.

இது ஒன்றும் முதன் முறையாக நடைபெறவில்லை. விராடதேசத்து விளிம்பில் தனி ஒருவனாய் அவர்களை சிதறடித்த போது பீஷ்மர் உன்னை சுட்டிக்காட்டி இவனை உன்னால் தாங்க முடியாது. இவன் ராஜ்யத்தை திருப்பிக் கொடுத்து விடு, உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார். துரியோதனன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு வினாடி கூட தன்னுடைய பிடிவாதத்தை விட்டு கீழிறங்கவில்லை. இங்கே யுதிஷ்டிரரின் விருப்பப்படி நான் சமாதானம் செய்ய தூது போகிறேன். இது வெற்றியடையாது. துரியோதனன் செய்த பாவங்களுக்கு அவனை எப்படித் தண்டிக்க வேண்டுமென்றுதான் நாம் சபை கூட்டி யோசிக்க வேண்டி வரும்.’’

நகுலன் நடுவே கை கூப்பியது கண்டு ஸ்ரீகிருஷ்ணர் அவனைப் பேச அனுமதித்தார். ‘‘நாம் யோசனை செய்யும்படியாகத்தான் உலகில் எல்லா விஷயங்களும் நடக்கின்றன என்று சொல்வதற்கில்லை. மனித மனம் விசித்திரமானது. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வடிவை எடுக்கக்கூடியது. சூதாட்டத்தில் எல்லாம் இழந்து வனவாசம் போனபோது எங்களுக்கு ராஜ்யத்தின் மீது பற்றே இருக்கவில்லை. நல்லவேளை தப்பித்தோம் என்று மகிழ்வடைந்தோம். இந்த வனச் சுகம் வேறு எவருக்குக் கிடைக்கும் என்று இறுமாந்தோம். போரிட வேண்டும் என்ற எண்ணமே அப்பொழுது வரவில்லை. அஞ்ஞாத வாசத்தின்போது க்ஷத்திரியர்களின் அலட்டலும், அட்டகாசமும் யார் யாரை எப்படி பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டோம்.

மனிதகுலம் துண்டு துண்டாகக் கிடந்தது. இப்பொழுது ஒரு இடத்திலிருந்து நமது ராஜ்யத்தை நாம் எப்பாடுபட்டாவது பெற வேண்டும் என்று யோசிக்கத் துவங்குகிறோம். கவசம் பூண்டு ஆயுதங்கள் தரித்து தேரில் ஏறும்போது இந்தக் கொலைவெறி அதிகமாகும். எப்பாடுபட்டாவது என்ற சமாதானம் என்ற எண்ணம்போய் அடித்து நொறுக்கு, கொன்று பிடுங்கு என்ற ரௌத்ரமும் வரும். இந்தப் போரின் பயத்தை துரியோதனனுக்குக் காட்டுங்கள். உடம்பில் மாமிசத்தையும், ரத்தத்தையும் அதிகரிக்கின்ற மனிதன் எங்களை ஜெயித்து விட முடியுமா. அங்கே விதுரர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அவர் சரியான விஷயத்தை சரியானபடி கூறுவார். நீங்களும் அவரும் சேர்ந்து மனம் வைத்தால் கெட்டுவிட்ட காரியத்தையும் வெற்றிக்கு கொண்டு வர முடியும்.’’ஸ்ரீகிருஷ்ணர் இப்போது சகாதேவனை பார்த்தார். அவன் கை கூப்பினான்.‘துரியோதனனை வதம் செய்ய வேண்டு மென்பதில் எனக்கு எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை. திரௌபதியை நடுச்சபையில் அவர்கள் அவமானப்படுத்தியதை என்னால் மறக்க முடியாது. மன்னிக்கவும் இயலாது. துரியோதனனின் மரணத்தை நான் கொக்கரிப்போடு கொண்டாடுவேன். போர் தான் முடிவு. ஒருவேளை யுதிஷ்டிரரும், பீமசேனனும், அர்ஜுனனும் போரற்ற தர்மத்தை பின்பற்றினாலும் நான் துரியோதனனை போர் செய்து கொல்லவே விரும்புகிறேன்.

இதில் எந்த ஊசலாட்டமும் இல்லை.’’சாத்யகி கைகூப்பினார். ‘‘சகாதேவனின் கோபம் எவ்வளவு அழகாக இருக்கிறது. தோலும் மரவுரியும் தரித்து வனத்தில் அலைந்த பாண்டவர்களைக் கண்டு எவ்வளவு வருத்தப்பட்டீர்கள். எவ்வளவு கோபப்பட்டீர்கள். உங்களுக்கே அப்படிப்பட்ட மனோநிலை என்றால் போரில் கடுமையைக் காட்டும் சகாதேவன் கூறியது உத்தமமல்லவா. ஸ்ரீகிருஷ்ணா போர் நடக்கட்டும்’’ என்று சொல்ல, அங்கு கூடியுள்ள மன்னர்கள் சிம்மநாதம்
செய்தார்கள். சாத்யகியின் பேச்சுக்குப் பிறகு சபை மௌனமாக இருந்தது. திரௌபதி எழுந்து நமஸ்கரித்தாள். ‘‘இந்தச் சபையில் நான் சொல்ல வேண்டியவனவும் இருக்கின்றன. எனக்கு நேர்ந்தது போன்ற அவமானம் எந்தப் பெண்ணுக்கும் நிகழ்ந்திருக்காது. நிகழவும் கூடாது.

நான் திரௌபதன் என்று புகழ்மிக்க மன்னனுக்கு மகளாக பிறந்தேன். அவர் வளர்த்த யாக குண்டத்தில் தோன்றினேன். வீரமிக்க திருஷ்டத்யும்னனின் சகோதரியாக வளர்ந்தேன். கௌரவம் மிகுந்த அஜமீட குலத்தில் திருமணமாகி பாண்டுவின் மருமகளாய் ஐந்து மாவீரர்களின் பட்டத்து ராணியாய் ஆனேன். அந்த ஐந்து வீரர்களும் எனக்கு ஐந்து மகாரதி புதல்வர்களை அளித்துள்ளார்கள். அபிமன்யு தங்களுக்கு மருமகன் என்பது போல என் புதல்வர்களும் உங்களுக்கு மருமகன்கள். இத்தனை கௌரவமும் சௌபாக்கியமும் இருக்கும்போதே நான் கேசம் பற்றி சபைக்கு துச்சாதனனால் இழுத்து வரப்பட்டேன்.

ஒற்றை ஆடையுடன் ரத்த மயமாக இருந்தேன் என்பதைப் புரிந்து கொண்டும் அங்கு எவரும் எதிர்த்துப் பேசவில்லை. எனக்கு ஆதரவாக இல்லை. பஞ்சபாண்டவர்கள் உயிரோடு இருக்கும்பொழுதே நான் கௌரவர்களுக்கு முன்பு தாசியானேன். நான் இவர்களை உற்றுப் பார்த்தேன். உடம்பு நடுங்க கவனித்தேன். இவர்கள் யாரும் காப்பாற்ற வரவில்லை. அப்பொழுதுதான் கோவிந்தா என்னை காப்பாற்று என்று உங்களை நோக்கிக் கதறினேன். உன் பெயரைச் சொல்லி நான் கதறியது கேட்டு திருதராஷ்டிரன் பயந்து போனார். நீ வேண்டும் வரம் என்ன கேள் திரௌபதி என்று கேட்டார். நான் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேண்டும் என்றும், பாண்டவர்களின் ஆயுதங்களை திரும்பத் தரவேண்டும் என்றும் கோரினேன்.

ஒரு தர்மப்படி நான் பீஷ்மர், திருதராஷ்டிரன் இருவருக்குமே மருமகள். அவர்களுக்கு முன்னாலேயே நான் அசிங்கப்படுத்தப்பட்டேன். உண்மையில் அதற்குப் பிறகு ஒரு முகூர்த்தம் கூட துரியோதனன் உயிரோடு இருந்திருக்கக் கூடாது. இதுவரை இருக்கிறான். உண்மையிலேயே உங்களுக்கு என் மீது அன்பு இருக்குமானால் அக்கறை இருக்குமானால் கௌரவர் மீது கோபம் கொள்ளுங்கள். நீங்கள் சமாதானம் பேசும் போதெல்லாம் துச்சாதனன் கையில் சிக்கி ஆடை நிலைகுலைய சபை நடுவே இழுக்கப்பட்ட பெண்ணை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். யுதிஷ்டிரரும், பீமனும், அர்ஜுனனும் சமாதானம் பேசினால் வதைக்கப்படத்தகாதவன் வதைக்கப்படுவது எவ்வளவு பெரிய குற்றமோ, அவ்விதமே வதைக்கப்படத் தகுந்தவன் வதைக்கப்படாதது பூமிக்கு கேடு.

ஒருவேளை பஞ்சபாண்டவர்கள் பழி தீர்க்காவிட்டால் என் தகப்பனையும், சகோதரனையும் வைத்தே நான் பழிதீர்ப்பேன். அமைதி வேண்டும் என்பது பீமன் பேசுவது என்னை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. பதிமூன்று வருடங்கள் இந்தக் கோபத்தோடு நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை.’’ அவள் கதறத் துவங்கினாள். ஸ்ரீகிருஷ்ணர் கருணையுடன் அவளைப் பார்த்தார். ‘‘ஹே கிருஷ்ணே, (கருப்பு நிறத்தவளே) கவலைப்படாதே. கண்ணுக்குத் தெரியாத சக்தி ஒன்றினால் யுதிஷ்டிர, பீம, அர்ஜுன, நகுல, சகாதேவர்கள் தூண்டப்படப் போகிறார்கள். அவர்கள் பக்கத்துப் பெண்கள் கதறி அழுவதை நீ காணப் போகிறாய்.

கௌரவர்களின் மரணத்தைக் காணப் போகிறாய். கௌரவர்கள் இறப்பது உறுதி. அவர்கள் நாசம் உறுதி. இமயம் தன்னிடத்திலிருந்து விலகலாம். நட்சத்திர மண்டலம் குலையலாம். ஆனால், என் வார்த்தைகள் பொய்யாகாது. கிருஷ்ணே, நீ அழுவதை நிறுத்து. உன் பகைவர்கள் வெகு விரைவாக கொல்லப்படப் போவதையும் உன் கணவர்கள் ராஜ்ய லக்ஷ்மியை தரிப்பதையும் நீ காணத்தான் போகிறாய். இது சத்தியம்’’ என்று சீறினார். சபை ஒருவிதமான பயத்தில் உறைந்தது. இரவு முடிந்து சூரியன் உதிக்கத் தொடங்கிய நேரத்தில் எல்லோரும் ஒன்று கூடினார்கள். பல்வேறு சிந்தனைகள் கூடிய தூக்கத்தில் இருந்ததால் அங்குள்ளோர் முகம் களைப்புற்று இருந்தது.

கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் மைத்ர என்ற முகூர்த்தம் உண்டானதும் ஸ்ரீகிருஷ்ணர் தான் தங்கிய இடம் விட்டு வெளியே வந்து யாத்திரையைத் துவக்கினார். இந்த முகூர்த்தத்தில் கிளம்புகிறேன் என்று அறிவித்தார். சுற்றியுள்ள ரிஷிகளின் வாழ்த்துரைகளை கேட்டார். அந்தணர்களின் ஸ்லோகங்களை கேட்டபடி நீராடினார். புனிதமான ஆடையணிந்து சந்தியாவந்தனம், சூரிய வந்தனம், அக்னி ஹோத்ரம் போன்ற கடமைகளைச் செய்தார். காளையின் முதுகு தொட்டு வணங்கினார். அந்தணர்களை நமஸ்கரித்தார். அக்னியை வலம் வந்தார். சாத்விகிக்கு எதிரே போய் ‘யுயுதான், என் தேரில் சங்கு, சக்கர, கதா, அம்பரா தூணிகள் மற்றும் சக்தி முதலிய எல்லா வித ஆயுதங்களையும் எடுத்து வீசும் விதமாக வை.

ஒருவன் பலமாக இருந்தாலும் பலவீனமான எதிரியை அவமதிக்கக் கூடாது. துரியோதனன், கர்ணன், சகுனி துஷ்டர்கள். அவர்களிடம் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்’ என்றார். இதைக் கேட்டு அவருக்கு முன் செல்லும் போர் வீரர்கள் தேரை பூட்டுவதற்காக ஓடினார்கள். விரைவாகப் போகும் அந்த உறுதியானத் தேர் இரண்டு சக்கரங்களை கொண்டிருந்தது. அமர்ந்து கொள்ள புலித்தோல் இருந்தது. தேரின் கொடியில் கருடச் சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. தேர் நகரும் பொழுது கம்பீர ஒலி வந்தது. வசிஷ்டர், வாமதேவர், பூரித்யும்னர் போன்ற தேவ ரிஷிகளை தேரில் ஏறி வலம் வந்து நமஸ்கரித்தார்.

அவர்கள் வாழ்த்துரை எழுப்பினார்கள். தேர் அஸ்தினாபுரம் நோக்கி கிளம்பியது. யுதிஷ்டிரரோடு அர்ஜுனனும், பீமனும் இன்னும் பல அரசர்களும் அவரவர் குதிரைகளில் ஏறி அவரை வழியனுப்புவதற்காக சிறிது தூரம் பின் தொடர்ந்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் நின்று விரைவாகப் போவதற்கு விடை பெற்றார்கள். அப்பொழுது யுதிஷ்டிரர் பேசத் துவங்கினார்.‘‘ஒரு அபலையாய் யார் எங்களை வளர்த்து ஆளாக்கினாரோ எங்களுக்காக உபவாசத்திலும், தவத்திலும் ஈடுபட்டிருப்பதே அவர் வேலையாகி விட்டதோ, தேவ அதித பூஜையிலே நிரந்தர அக்கறை இருக்கிறதோ,

எங்கள் ஐந்து பேரிடம் ஒரே விதமான அன்பு இருக்கிறதோ, யார் துரியோதனன் பயத்திலிருந்து எங்களை காப்பாறினோரோ, யார் எங்களுக்காக எப்போதும் துயரை அனுபவித்துக் கொண்டிருக்கிறாரோ அந்த துயரை அனுபவிக்க தகுதியற்ற எங்கள் தாய் குந்திதேவியை சந்தித்து அவர் நலம் விசாரியுங்கள். எங்கள் வணக்கத்தை கூறுங்கள். ஏராளமான ஆறுதலை அளியுங்கள். திருமணம் ஆகி மாமனார் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவர் துயரத்தையே அனுபவித்து வருகிறார். எங்கள் துயரங்கள் அனைத்தும் விலகி விடும். ஆனால் எங்களைப் பற்றி துயரத்தில் இருக்கும் அந்த தாய்க்கு எங்களால் நிம்மதி தர முடியுமா.

அப்படி ஒரு காலம் உண்டா. நாங்கள் காட்டிற்கு போன போது அழுதபடியே எங்கள் பின்னால் அவர் வந்த காட்சி என் மனதில் இருக்கிறது. நாங்கள் அவரை எந்த சமாதானமும் செய்யாமல் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம். புதல்வர்கள் பற்றிய கவலை மரணத்திற்கு ஒப்பான துயரம். நீங்கள் எங்கள் தாயை வணங்கிய பின்னர் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா போன்றவர்களிடம் எங்கள் அன்பைச் சொல்லி ஆலிங்கணம் செய்யுங்கள். நீங்கள் போகும் காரியம் வெற்றி அடையட்டும்’’ என்று கிருஷ்ணரை பிரதட்சணமாக வலம் வந்து நகர்ந்தார். ஸ்ரீகிருஷ்ணர் நகர, அர்ஜுனன் தொடர்ந்தான். குதிரையை அவரிடம் நெருங்கிக் கொண்டு வந்தான்.

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கிருஷ்ணர் ஆவலுற்றார். ‘‘எங்களிடையே ஒரு இரகசிய ஆலோசனை நடைபெற்றது. இந்த ராஜ்ஜியத்தில் பாதியை கொடுத்தால் கூட போதும். நாம் முழு மனதோடு அதை ஏற்றுக் கொண்டு அமைதியாகி விடுவோம் என்று உறுதி ஏற்றோம். ஆனால் துரியோதனன் இதற்கு மறுத்தால் அவன் என் கையால் மரணமடைவதைத் தவிர வேறு வழியில்லை.’’அர்ஜுனன் பேசி விட்டு விலகிக் கொள்ள அந்தத் தேர் விரைவாகப் போயிற்று. வானத்தையே உறிஞ்சி விடுவதைப் போல ஒரு வேகத்தைக் கொண்டது. வழியில் ஒரு மரத்தடியில் மகரிஷிகள் குழுமியிருந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் தேரின் வேகத்தை மட்டுப்படுத்தி நிறுத்தினார்.

அந்த மரத்தடியில் உள்ள மகரிஷிகள் அவருக்கு ஆசிர்வாதம் செய்தார்கள். கடுமையான விரதங்களை மேற்கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளை கை கூப்பி வணங்கியபடியே அவர் ஒவ்வொருவருக்கும் அருகில் நின்று உற்றுப் பார்த்தார். நாரதர், அதஹஷிரா சர்ப்பமாலி, தேவலர், அர்வாவசு, சுஜானு, மைத்ரேயர், சுனகர், பலி, பகன், ஸ்தூலசீரா, ஸ்ரீ கிருஷ்ணதைவபாயனர், ஆயோததௌம்யர், அணிமாண்டவ்யர், கௌஸிகர், த்ரிஷவனர், பர்னாதர், கடாஜானுகர், மௌஞ்சாயன், வாயுபகூஷன், சாலிகன், சீலவான், அசனி, தாதா,

சூன்யபால, அக்ருதவ்ருண, ஸ்வேத கேது, பரசுராமர் ஆகியோர் ஆவர். பரசுராமர் முன் வந்து ஸ்ரீகிருஷ்ணரை மார்போடு அணைத்துக் கொண்டார்.‘‘நீங்கள் அஸ்தினாபுரம் போவதை உணர்ந்து நாங்களும் அங்கு போவதற்கு ஒன்று திரண்டிருக்கிறோம். புராதானமான தேவ அசுர போரை நாங்கள் பார்த்திருக்கிறோம். அஸ்தினாபுரத்து பெரும்சபையில் பல மன்னர்கள் சூழ அமர்ந்து யுத்தம் பற்றிய உங்கள் கொள்கைகளை கேட்க ஆவலாக இருக்கிறோம். தர்ம, அதர்மங்களை அங்கு பேசுவீர்கள் அல்லவா. அதை கேட்பதற்காக நாங்களும் அங்கு வர இருக்கிறோம். உங்கள் யாத்திரை தடையற்றதாகட்டும். அந்த சபையில் நீங்கள் பிரகாசிக்கப் போவதை இப்போதே உணர்கிறோம்.’’

- பாலகுமாரன்

(தொடரும்)

Tags :
× RELATED காமதகனமூர்த்தி