விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது இந்தக் கோயில். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு சிவயோக ஞானசித்தர் என்பவர் அம்மன் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது: ‘சித்தரே, அர்ஜுனா நதி மற்றும் வைப்பாறுக்கு இடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வாருங்கள்!’’ அதன்படி அங்கே சென்ற சித்தருக்கு அம்மன் காட்சியளித்தாள். தான் பார்த்த அம்மனின் வடிவத்தை அவர் சிலையாக வடித்து அங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால், பிற்காலத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பல கிராமங்கள் அழிந்தன. இந்தப் பெரு வெள்ளத்தில் அம்மனின் உருவச்சிலை அடித்துச் செல்லப்பட்டு ஆற்று மணலில் புதைந்து போனது. காலங்கள் பல கடந்தன.
இருக்கன்குடியில் வசித்த பெண்கள் சிலர் பசுவின் சாணத்தை கூடைகளில் சேகரித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களில் பூரணத்தம்மை என்ற பெண்ணால் மட்டும், ஒருநாள், தான் சேகரித்து வைத்திருந்த பசுஞ்சாணக்கூடையை தரையிலிருந்து எடுக்க முடியவில்லை. பலமுறை முயன்றும் முடியாததால், அந்தப் பெண்ணைப் பயம் தொற்றிக் கொண்டது. இது பற்றி அவள் ஊருக்குள் சென்று கூறினாள். ஊராரும் அங்கு ஒன்று திரண்டு வந்து பார்த்தனர். பலர் முயன்றும் அந்தக் கூடையைத் தூக்க முடியவில்லை. மாறாக, அது இறுகிப் போன கற்பாறையைப் போல இருந்தது. அதனால் அங்கு ஏதோ தெய்வ சக்தி இருப்பதாக மக்கள் கருதிய வேளையில் ஒரு பெண் அருள் வந்து ஆடினாள். தான் மாரியம்மன் என்றும், தன் சிலை அங்கே புதைந்து கிடப்பதாகவும், தன்னைத் தோண்டி எடுத்து வணங்கி வருமாறும் கூறினாள்.
உடனே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். அங்கு அழகான அம்மனின் கற்சிலை கிடைத்தது. சாந்தமான தோற்றத்துடன் இருந்த அந்த அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பொதுவாக அம்மன் இடது காலை மடித்துக் கொண்டு வலது காலை தொங்கவிட்டபடி காணப்படுவாள். ஆனால், இருக்கன்குடி மாரியம்மன் வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டபடி இருக்கிறாள். அண்ட சராசரங்களும் தன்னில் அடக்கம் என்பதை உணர்த்தும் வகையில் இந்தச் சிலை அமைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அம்மன் இங்கு சிவாம்சமாக இருப்பதால் சந்நதிக்கு எதிரே நந்தி இருக்கிறது. கோயிலிலிருந்து சற்று தூரத்தில் அம்மன் சிலை கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சந்நதி உள்ளது. இங்கு அம்மன் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.
ஆடி கடைசி வெள்ளியன்று இவள் பிரதான கோயிலுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. கண் நோய் உள்ளவர்கள் ‘வயனம் இருத்தல்’ என்ற விரதத்தைக் கடைப் பிடிக்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் தனி மண்டபம் உள்ளது. இவர்கள் அம்மனின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக் கொள்ள, கண் சம்பந்தப்பட்ட அனைத்து குறைகளும் தீர்வதாகச் சொல்கிறார்கள். விவசாயிகள் இந்த அம்மனின் அபிஷேக தீர்த்தத்தைத் தங்களது விளைநிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்மனுக்கு நவதானியம், நெல், காய்கறிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இங்கே மாவிளக்கு எடுப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. தம் நோய் நீங்க வேண்டி இங்கு பிரார்த்தனை செய்வார்கள்.
உதாரணமாக நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஒருவர், அந்த நோய் குணமானவுடன் தன் நெஞ்சின் மீது மாவிளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார். தினைமாவு, நெய் கலந்து இந்த விளக்கு ஏற்றப்படுகிறது. அதேபோல் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் நீங்கியதும் வயிற்றின் மீது மாவிளக்கு ஏற்றி வைத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இவ்வாறு நிறைவேற்ற ஆலயத்தினுள் தனி மண்டபம் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அம்மனுக்குக் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக் கடன் செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர். அம்மன் அருள் கிட்டியதும் அவ்வாறே கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்து சந்நதியை வலம் வருகின்றனர்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்கினிச்சட்டி, அங்கப்பிரதட்சிணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். அம்மை நோய் உள்ளவர்கள் அம்மனுக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். மேலும் இந்த அம்மனுக்கு உருவ காணிக்கை மற்றும் கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் ஏராளம். அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்சத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பதும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், ஐதீகம். ஆடி, தை, பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிக் கடைசி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாள்.
இருக்கன்குடி மாரியம்மனின் கோயிலில் இந்த நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வடக்கே அர்ச்சுனா நதியும், தெற்கே வைப்பாற்றையும் எல்லையாகக் கொண்டு இடைப்பட்டிருக்கும் நிலப்பரப்பில் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் இருக்கன்குடி மாரியம்மனின் திருக்கோயில், 10 அடி உயர கல்கோட்டைச் சுவருக்குள் அமைந்துள்ளது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்கட்டு கருவறையில், கற்சிலா வடிவில் உயிர்ப்புடன் அமர்ந்து தன்னை வணங்கி நிற்பவர்களின் எண்ணங்களுக்கேற்றவாறு வண்ண முகம் காட்டி அன்னை பராசக்தி அருட்காட்சி தந்து திருவருட்பாலித்துக் கொண்டிருக்கிறாள். கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், அன்னைக்கு வலப்புறம் விநாயகரும், மகாமண்டபத்தில் நந்திகேஸ்வரர், கொடிமரம், பலிபீடம் போன்றவையும் உள்ளன.
மகாமண்டபத்தை அடுத்து மணி மண்டபம் உள்ளது. அம்பாள் சந்நதியைச் சுற்றிலும் பரிவார தேவதைகளாக சந்நதிக்குத் தென்புறத்தில் ‘வடக்கு வாச்செல்வி’ மற்றும் வெயிலுகந்தம்மன், இவர்களுக்கு முன்பாக அரசமரத்தடியில் சித்தி விநாயகரும் அமர்ந்து அருட்பாலித்து வருகிறார்கள். சந்நதிக்கு வடபுறத்தில் பேச்சியம்மனும், முப்பிடாதி அம்மனும், வீரபத்திரரும், பைரவரும் மற்றும் காத்தவ ராயரும் வீற்றிருக்கிறார்கள். திருக்கோயிலின் தெற்குப் பிராகார மண்டபத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மாவிளக்கு மண்டபம் காணப்படுகிறது. இந்த மண்டபத்தின் மேற்கூறையில் அஷ்டலட்சுமிகளின் அவதாரத் திருவுருவப் படங்கள் வரையப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து 90 கி.மீ. தொலைவில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. சாத்தூர், விருதுநகர், சிவகாசியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. கோயில் நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. மண் பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். காலை 5:30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
