×

அலங்கார மண்டபத்தில் அருளும் அலைமகள்

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் சித்திர வடிவமாகத் தீட்டிய அலங்கார மண்டபத்தில் கொலுவீற்றிருக்கும் மகாலட்சுமித் தாயாரை தரிசிக்க வேண்டுமா? தசாவதாரங்களில் ஒன்றாக புத்தரையும் சேர்த்து மத நல்லிணக்கத்தைப் போற்றும் ஆலயத்தைக் காண வேண்டுமா? சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே உள்ள ஆறகழூரில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றால் மேற்சொன்ன அதிசயங்களை தரிசிக்கலாம்.எழுநூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்த ஆலயத்தில் பாண்டிய, சோழ, விஜயநகரப் பேரரசர்கள் தத்தம் ஆட்சிக் காலங்களில் வேண்டுதல் நிறைவேற்றியதற்காக பல திருப்பணிகளை மேற்கொண்ட
பரிகாரத் தலம். ஆறே அகழியாக அமைந்ததால் ஆறகழூர் எனப் பெயர் பெற்றது. ஆலயத்தின் திருக்குளத்தில் யோகநரசிம்மர்மிகச் சிறிய மூர்த்த வடிவில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார். ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கெதிரே காரியசித்தி அனுமன் விநயத்தோடு காட்சியளிக்கிறார்.

கோபுரத்தைக் கடந்ததும் பலிபீடம், கொடிமரத்தை அடுத்து கருடாழ்வாரின் சந்நதி. இந்த கருடனின் சந்நதிக்கு ஒருபுறம் நாகராஜனும், மறுபுறம் கூப்பிய கரங்களுடன் அமர்ந்த நிலையில் கருடனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கரிவரதராஜர் வீற்றிருக்க வணங்கும் கோலத்தில் ஒருபுறம் அனுமனும் மறுபுறம் கருடனும் சுதை வடிவச் சிற்பங்களாக பார்ப்போர் கண்ணையும் கருத்தையும் கவர்கிறார்கள்.‘பச்சை முகில் மேனியனே உனக்கே இந்தப் பார்தனிலே பத்து அவதாரம் உண்டு மச்சம் என்றும் கூர்மம் என்றும் வராகம் என்றும் வாமனம் என்றும் ராமன் என்றும் பௌத்தன் என்றும் அழைக்கப்படுகின்றாள். துஷ்டரை அடக்க மோகினி வேடம் கொண்டவராய்த் தோன்றினாய் உன் சொரூபம் எல்லாம் அறிவார் உண்டோ?

அச்சம் தீர்த்து எனை ஆளக் கருடன் மீதில் அன்புடனே ஏறிவந்து அருள் செய்வாயே,’ என்ற கருடப் பத்து எனும் பெரிய திருவடியாகிய கருடனைத் துதிக்கும் பாடலில் பௌத்த அவதாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளபடி இந்தக் கோயிலின் தசாவதார மண்டபத்தில் ஒவ்வொரு அவதாரத் திருமேனியும் ஐந்தடி உயர சுதைச் சிற்பங்களாக கண் கொள்ளாக் காட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் பௌத்த அவதாரமும் ஒன்று. இந்தத் திருக்கோயிலுக்கு அருகே உள்ள தியாகனூரில் சுமார் பத்தடி உயரமுள்ள தியான நிலையில் அருளும் பழைமையான புத்தர் ஆலயக் கோபுரத்தில் திருமாலின் அவதாரத் திருக்கோலங்கள் சுதை வடிவில் வடிக்கப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்திற்கு  இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. பங்குனி உத்திரத்தன்று ஆறகழூர் ராஜவீதியில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத காமநாதீஸ்வரர், பூங்குழலி சமேத சோழீஸ்வரரோடு இத்தலத்தின் கரிவரதராஜப்பெருமாள் தன் உபயநாச்சிமார்களோடு உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

புராதனமிக்க இத்தலத்தில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரனும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் சோழமன்னன் ராசராசதேவன் வாணகோவரையனும், அவரது மனைவி புண்ணியவாட்டி நாச்சியாரும் தம் வம்ச வழியினர் நன்றாக இருக்கும் பொருட்டு ஆலய விமானத் திருப்பணி செய்ததாகவும், கி.பி.1502-1583 க்கும் இடைப்பட்ட காலத்தில் தர்மராயர், சாளுவ திம்மராயர், கிருஷ்ண தேவராயர், அச்சுததேவமகராயர் போன்ற பல மன்னர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் கிரகசாந்தி பரிகாரங்களுக்காக இத்தலத்தில் பல திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுச்சான்றுகள் தெரிவிக்கின்றன.
இப்பெருமாளைத் தரிசிக்கும்போது திருக்கண்டியூரில் உள்ள ஹரசாப விமோசனப் பெருமாளை தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. ஈசனுக்கு பிரம்ம கபாலம் அவர் கைகளிலிருந்து விடுபட்ட தலம் திருக்கண்டியூர். இங்கேயும் இவர் ஆலயத்திற்கு எதிரே உள்ள காமநாதீஸ்வரர் ஆலயத்தில் ஈசனின் அம்சமான அஷ்ட பைரவர்கள் கையில் கபாலமேந்தி தரிசனமளிக்கின்றனர். கரிவரதராஜர் மேற்கு நோக்கிய திருமுகத்தோடு அஷ்டபைரவர்களை அனுக்ரகம் செய்வது போல தோற்றமளிக்கிறார்.

பாமா, ருக்மிணி சமேத வேணுகோபாலன் சந்நதியும், பெருமாளின் புகழைப் பாடுவதே பணியாகக் கொண்டிருந்த பன்னிரு ஆழ்வார்கள் அமைந்துள்ள மண்டபமும் பக்தர்களைத் தன்பால் ஈர்க்கிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கமல மங்கை நாச்சியாருக்கும், அவர்தம் கருவறைக்கு வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகருக்கும் அபிஷேகம் செய்தும், நெய் விளக்கேற்றியும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அன்னையின் சந்நதியில் ஆய கலைகள் அறுபத்தி நான்கும் சித்திரமாக எழுதப்பட்ட அலங்கார மண்டபத்தில் அன்னை கோலோச்சிக் கொண்டருள்கிறாள். சனிக்கிழமைகளில் கரிவரதராஜருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும், திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. புரட்டாசி சனிக்கிழமைகளில் இத்தலம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இப்பெருமாளின் திருவடிகளைத் தொழுவோர்க்கு நீண்ட ஆயுள், சொல்வன்மை, காரியசித்தி போன்றவை கைகூடுகிறது என பக்தர்கள் நம்புகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆறகழூரில் அமைந்துள்ளது இத்தலம்.
 
ஜெயலட்சுமி

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்