×

அசைந்தாடி வந்தது ஆண்டாள் தேர் : திருவில்லிபுத்தூரில் கோலாகலம்

திருவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை திருவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடந்தது. கோவிந்தா... கோபாலா... கோஷம் விண்ணதிர பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருப்பாவை அருளிய ஆண்டாளின் பிறந்த தினமான ஆடி மாதம் பூரம் நட்சத்திர தினத்தில், ஆண்டுதோறும் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட விழா, கடந்த 5ம் தேதி ஆண்டாள் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கோயிலிலிருந்து ஆண்டாள், ரெங்கமன்னார் மேள, தாளம் முழங்க ேதருக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். சரியாக காலை 7.20 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நிலையில்் இருந்து தேர் புறப்பட்டது. பக்தர்களின் ‘கோவிந்தா... கோபாலா....’ கோஷத்தால் நகரமே குலுங்கியது.

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, 2 புல்டோசர்கள் மூலம், பின்புறம் இருந்து தேர் தள்ளப்பட்டது. இதனால் வேகமாக கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதிகளை தேர் கடந்தது. ரோட்டரி சங்கம், ராம்கோ தொண்டு நிறுவனம், லயன்ஸ் கிளப் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. ஆங்காங்கே பக்தர்களின் கோலாட்டம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் திருவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு டிஎஸ்பி ராஜா தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தவிர ஏராளமான போலீசார் சாதாரண உடையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி