×

விழாக்கோலம் பூண்டது திருவில்லிபுத்தூர் : இன்று ஆண்டாள் தேரோட்டம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் கோயிலில் குவிகின்றனர். ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கிறது.

இதனையொட்டி இன்று அதிகாலையிலேயே கோயிலிலிருந்து ஆண்டாள், ரெங்கமன்னார் மேள, தாளம் முழங்க தேருக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி காலை 7.20 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. ரத வீதிகள் வழியாக தேர் வரும்போது, சாலையில் சக்கரங்கள் பதியாமல் இருப்பதற்காக ராம்கோ நிறுவனம் வழங்கிய பல லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்கள் பதிக்கப்பட்டுள்ளன. தேரை இழுக்கும் பக்தர்களுக்கு உதவ, தேரை பின்புறத்திலிருந்து தள்ளுவதற்காக 2 புல்டோசர்கள் தயார் நிலையில் உள்ளன. தீயணைப்பு வாகனங்கள், அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆயிரம் போலீசார் கண்காணிப்பு: விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன், டிஎஸ்பி ராஜா ஆகியோர் தேரடி, நான்கு ரத வீதிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்லும் இடங்களில் ஆய்வு செய்தனர். சமூக விரோதிகள், பிக்பாக்கெட் திருடர்களை கண்டுபிடிக்க சாதாரண உடையில் போலீசார் ரோந்து சுற்றுகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆளில்லா 2 குட்டி விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார் ஆண்டாள் கோயில் மற்றும் தேர் வரும் பாதைகளை நேற்று ஆய்வு செய்தார். எஸ்பி ராஜராஜன் தலைமையில் 2 ஏடிஎஸ்பி, 5 டிஎஸ்பி மற்றும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பதி பெருமாள் அணிந்த பட்டு வஸ்திரம், ஆண்டாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு இன்று அணிவிக்கப்படும். விழாவை முன்னிட்டு அனைத்து தங்கும் விடுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவில்லிபுத்தூரில் வந்து குவிந்துள்ளனர். கோயில் நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி நாகராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்