×

உடல் உறுதிக்கு உதவும் செவ்வாய் சனி

ஜோதிடம் என்கிற மருத்துவம்  - 45

அச்சத்தைத் தவிர்த்தால் ஆரோக்யத்துடன் வாழ முடியும். நமக்கு ஏதோ நேர்ந்துவிட்டது, உடல் அசதியாக இருக்கிறது, உடல்நலம் முன்புபோல் இல்லை என்ற பயம் தற்காலத்தில், பெரும்பாலானவர்களிடம், முப்பத்தைந்து வயதிற்குள் வந்துவிடுகிறது. உடல் உழைப்பால் உடல் ஆரோக்யம் பேணப்பட்டு வந்த காலம் போய், தற்போது காலையில் எழுந்து வாக்கிங், ஜாக்கிங் மற்றும் உடற்பயிற்சி செய்து ஆரோக்யத்தைக் கட்டிக்காக்க முடியும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. சென்னை போன்ற பெருநகர்புறத்தில் இருந்த இந்தப் பழக்கம் தற்போது சிறு மற்றும் குறு நகரங்கள் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் கொஞ்சம், கொஞ்சமாகப் பரவி வருகிறது. கலப்பையை வைத்து வயலை உழுத காலம் போய், டிராக்டரை வைத்து உழுகிறார்கள். கடப்பாரை மற்றும் மண்வெட்டியால் பள்ளம் தோண்டிய காலம் போய், ஜேசிபி இயந்திரத் துணையுடன் ஐந்து நிமிடத்திற்குள் பெரும் பள்ளத்தைத் தோண்டிவிட முடிகிறது. இயந்திரங்களின் பயன்பாட்டால் கிராமப்புறங்களிலும் உடல் உழைப்பு காணாமல் போய்விட்டது. உண்ணும் உணவு செரிப்பதில்லை. செரிமானம் இன்மையால் அஜீரணம் உண்டாகிறது. அஜீரணத்தினால் உடல்நலம் கெடுகிறது.

இயந்திரங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரஹங்கள் செவ்வாயும், சனியும். மனிதனுக்கு உடல் உழைப்பைத் தரக்கூடியதும் இந்த கிரஹங்களே. அஜீரணக் கோளாறைத் தருவதும் இதே செவ்வாயும், சனியும்தான். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சனி இருவரில் ஒருவர் ஆறில் அமர்ந்து மற்றொரு கிரஹம் கெட்டிருந்தால், அஜீரணக் கோளாறினால் அவர் அவதிப்படுவார். நூற்றில் ஐந்து பேருக்கு இதுபோன்ற பிரச்னை உண்டாகலாம். ஆனால் இன்று ஐம்பது சதவீதம் பேர் அஜீரணக் கோளாறினால் அவதிப்படுவதற்கு கிரஹங்களின் நிலை மட்டுமே காரணமன்று, நமது வாழ்வியல் முறையும், உணவுப்பழக்கமுமே ஆகும். திடகாத்திரமான உடற்கட்டைத் தரக்கூடியதும் இந்த கிரஹங்களே. ஜென்ம லக்னத்தில் உச்ச பலம் பெற்ற செவ்வாயை உடைய மகர லக்னத்தில் பிறந்தவர்கள் பலசாலிகளாக இருப்பார்கள். பெரும்பாலும் இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சனி 10ல் உச்சம் பெற்றிருக்க, அவர்கள் ராணுவ வீரர்களாகவும், பாதுகாப்புத்துறையில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் எல்லோரும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்துவருவதன் மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். சோம்பல்தன்மை சிறிதளவும் இவர்களிடம் இருக்காது. ஜோதிடர்கள்கூட செவ்வாய் மற்றும் சனியின் வலிமை பெற்றவர்களை ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வரச் சொல்வார்கள். (ஆஞ்சநேயர் உடல்வலிமை மிகுந்த பராக்கிரமசாலி அல்லவா?) ஆக ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாயும், சனியும் நல்ல நிலையில் இருந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. செவ்வாயையும், சனியையும் அசுப கிரஹங்களாக நினைத்து அவர்களுக்கு உரிய நாட்களான செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை நல்ல நாட்கள் இல்லை என்று தவறாக நினைத்து அந்த நாட்களை ஒதுக்குகிறோம். குறிப்பாக செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் கடுமையான நோய்களுக்காக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கு நல்ல நாட்களே. ஒரு சிலர் பார்ப்பதற்கு ஒல்லியான உருவம் கொண்டிருந்தாலும் பலசாலியாக இருப்பார்கள். உறுதியான எலும்பு அமைப்பு பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் ஜாதகத்திலும் செவ்வாயும், சனியும் வலிமை பெற்றிருப்பர். இதுபோன்ற உடலமைப்பைக் கொண்டவர்களை எந்த நோயும் அண்டாது. சமீபத்தில் தனது ‘பிசிக்கல் பிட்னஸ்’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விளையாட்டு வீரர் விராட் கோலியின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி அமர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் யோயோ எனப்படும் சோதனையை வெற்றிகரமாகக் கடந்து தமது உடல்தகுதியைக் கட்டாயம் நிரூபித்தாக வேண்டும் என்ற விதிமுறையை கடுமையாக அமல்படுத்தியிருக்கிறார் விராட்கோலி. நல்ல உடல்தகுதியுடன் இருந்தால்தான் விக்கெட்டுகளுக்கு இடையே விரைவாக ஓடி ரன் குவிக்க முடியும் என்பது இவரது வாதம். வேகமாக ஓட வேண்டும் என்ற எண்ணத்தைத் தருவது செவ்வாய் என்றால் அதற்குரிய உடல்வலிமையைத் தருவது சனி. விளையாடுபவர்களுக்கும் சரி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சரி சனியும், செவ்வாயும் வலிமையாக அமைந்திருக்க வேண்டும்.

அதனால்தான் இருவரையும் வீரர்கள் என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் ‘பிளேயர்ஸ்’ என்று அழைத்தாலும், நாம் தமிழிலும் சரி மற்ற இந்திய மொழிகளிலும் சரி, விளையாட்டு வீரர்கள் என்றுதான் அழைப்போம். காரணம் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய தேசபக்தி இருக்க வேண்டும். சரியான நேரத்தில் வீரம் வெளிப்பட வேண்டும். அதற்கு ஏற்றார்போல் உடல் வலிமையும் நிலைத்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் தருபவர்கள் செவ்வாயும், சனியுமே. ஆக ஒரு வீரன் உருவாவதற்கு அவனுடைய ஜாதகத்தில் செவ்வாயும், சனியும் வலிமை பெற்றிருக்க வேண்டும். ‘ஃபிட்னஸ் இந்தியா’ என்று தற்போது ஒரு இயக்கம் துவங்கியுள்ளது. பிரதமர் முதல் சாதாரணக் குடிமகன் வரை எல்லோரும் தங்களுடைய உடல்பலத்தை நிரூபித்து வருகிறார்கள். யோகாசனம், தியானம், உடற்பயிற்சி என்று பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க முயற்சிக்கிறார்கள். இது ஒரு நல்ல தொடக்கமே.

ஆனால் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக மட்டுமல்லாமல் இந்த உடற்பயிற்சிகளை விடாமல் தொடர்ந்து செய்து வரவேண்டும். இடையில் சோம்பல்தன்மை வந்துவிடக் கூடாது. அப்போதுதான் செவ்வாயும், சனியும் தங்கள் பணியைச் செய்வார்கள். பொதுவாக செவ்வாயின் குணம் சுறுசுறுப்பு என்றால், சோம்பலைத் தருவது சனி. சோம்பல்தன்மையைத் தரும் சனியால் எப்படி உடல்நலத்தைக் காக்க முடியும் என்று தவறாக எண்ணி விடக்கூடாது. கடுமையாக உழைப்பவனுக்கு மேன்மேலும் உழைப்பையும், கஷ்டத்தையும் கொடுத்து அவனை மேன்மேலும் உழைப்பாளியாக மாற்றும் கோள் சனியே. அதற்கு நேர்மாறாக சோம்பல்தன்மையுடன் சுகமாக படுத்து உறங்குபவனுக்கு மேன்மேலும் சோம்பல்தன்மையைத் தந்து அவனை எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் தள்ளும் கிரஹமும் சனியே. அதேபோல சுறுசுறுப்பாக செயல்படுவதாக எண்ணி மிகுந்த படபடப்புடன் டென்ஷனைக் கூட்டி ரத்த அழுத்தக் குறைபாடைத் தரும் கிரஹம் செவ்வாய். ஆக அளவுக்கதிகமான சுறுசுறுப்பு இருந்தாலும், அதில் டென்ஷன் இருக்கக் கூடாது, நிதானமாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு சோம்பலுடன் சும்மா உட்கார்ந்திருக்கவும் கூடாது.

நிதானத்துடன் கூடிய சுறுசுறுப்பு இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனியின் பங்களிப்பு முக்கியமானது. பாசிட்டிவ் எனர்ஜியும், நெகட்டிவ் எனர்ஜியும் சரியான விகிதத்தில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். தொழிற்சாலையைப் பொறுத்தவரை மூன்று ஷிப்டுகளாகப் பணியைப் பிரித்திருப்பார்கள். ஒரு ஷிப்டிற்கு எட்டு மணி நேரம் என்ற கணக்கில் ஒவ்வொரு நாளும் மூன்று ஷிப்டுகள் பணி நடக்கும். ஒரு பணியாளர் எட்டு மணி நேரம் ஓய்வின்றி வேலை பார்க்க வேண்டும், அதே போல தொடர்ந்து எட்டு மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும் என்று அவர்களுக்குப் பயிற்சி காலத்தில் சொல்லித்தருவார்கள். ஒரு மனிதனின் உடல் எட்டு மணி நேரம் செவ்வாயின் துணையுடன் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், சனியின் ஆதரவுடன் அடுத்த எட்டு மணி நேரத்திற்கு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நன்றாக உறங்க வேண்டும். அதனை விடுத்து ஓவர்டைம் பார்த்து உழைப்பதாக எண்ணிக் கொண்டு, உறக்கத்தைக் கெடுத்துக்கொண்டு வேலை பார்ப்பவரின் உடல்நிலை, கடைசி வரை சீராக இருக்காது. அதேபோல ஓய்வு எடுப்பதாக எண்ணிக்கொண்டு தொடர்ந்து உறங்கிக் கொண்டிருப்பவரின் உடல்நிலையும் உழைப்பதற்கு ஒத்துழைக்காது.

செவ்வாய் கிரஹமும், சனி கிரஹமும் நமக்கு சொல்லித்தரும் பாடம் இதுதான். இதனைப் புரிந்துகொண்டு செயல்படுபவர் தனியாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ஐ.டி.துறையில் பணிபுரிபவர்கள் கால நேர வரையறையின்றி நினைக்கும் போதெல்லாம் பணி செய்வதால்தான் அவர்களது உடல் ஆரோக்கியம் சீக்கிரமாகக் கெட்டுவிடுகிறது. ஐ.டி.துறையில் பணிபுரிபவர்களின் ஜாதகங்களில் செவ்வாய் மற்றும் சனியின் ஆதிக்கம் குறைவாகத்தான் இருக்கும். இவர்களுடைய ஜாதகங்களில் புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரஹங்களே வலிமை பெற்றிருப்பார்கள். சுபகிரஹங்களாக இருந்தாலும் இவர்களால் உடல் ஆரோக்கியத்தைக் கட்டிக்காக்க இயலுவதில்லை. அசுபகிரஹங்களாக இருந்தாலும் செவ்வாயும், சனியுமே உடல்நலத்தைக் காப்பவர்கள். இந்த உண்மையை உணர்ந்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமை நாட்களை நல்ல நாட்கள் இல்லை என்று ஒதுக்காமல் அந்த நாட்களையும் நல்ல நாட்களாக எண்ணிப் பணி செய்வோம். ஆரோக்கியம் காப்போம்.

திருக்கோவிலூர்  K.B.ஹரிபிரசாத்சர்மா

Tags :
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்